திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார்

சத்தியேந்திராவின் பூர்வீகம் ஆந்திரா. ஆனால் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் கர்நாடகாவில் தான். சுதந்திர இந்தியாவின் முதல் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் இவரது அப்பா தானார். இவர் உடன் பிறந்தவர்கள் எட்டு பேர். அப்பா அரசு வேலையில் இருந்ததால் வசதியாக தான் வாழ்ந்துள்ளனர். இவரது 14வது வயதில் அவரது அப்பா இறந்துவிட குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது.
சத்தியேந்திராவுக்கு, பிரபல கன்னட நாடக இயக்குநர் பி.வி.காரந்தின் தொடர்பு கிடைத்தது. அவரது நாடகங்களில் நடித்து வந்தார். இவரது நடிப்புத் திறமையைப் பார்த்த பி.வி. காரந்தின் நண்பர், "நாகபர்ணா" என்ற அவரது முதல் படத்தில் நடிக்க செய்தார். அந்தப் படம் தேசிய விருது வாங்கியது. தொடர்ந்து டிவி மற்றும் சினிமா பட வாய்ப்புகள் வந்தன.
தமிழில் ஹரிஹரன் இயக்கிய ஏழாவது மனிதன் படத்தில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட ஏழு மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ளார். 15 குறும்படங்களையும் இயக்கியுள்ளார். ஒரு ஹாலிவுட் மற்றும் ஜெர்மன் மொழி படத்தில் நடித்துள்ளார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், மொழிப் பெயர்ப்பாளர், விமர்சகர், ஆசிரியர் என பல்வேறு முகம் கொண்ட இவர், கன்னடத்தில் இலக்கியம் மற்றும் தத்துவத்தில், இரண்டு முதுகலை பட்டங்களை பெற்றுள்ளார்.
ரஜினி, ரகுவரன் ஆகியோரின் தொடக்க காலங்களில் அவர்களுடன் பயணித்துள்ளார். ‛நாக் அவுட்" குறும்படத்தில் பிணமாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
தமிழில், ஏழாவது மனிதன், மண்வாசனை, சத்யா, மீண்டும் ஒரு காதல் கதை, ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
பின், ஜெர்மன், ஸ்பானிஷ், பிரெஞ்ச் மொழி ஆசிரியராக மாறி மாணவர்களின் வீடுகளுக்கே சென்று வகுப்பு எடுத்து வந்தார்.
சமீபத்தில் விஜய் நடித்த, ‛லியோ" படத்திற்கு எதிர்மறையாக விமர்சித்து பிரபலமானார்.
இந்நிலையில், உடல் நலமின்றி இருந்த இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இவருக்கு குடும்பம் இல்லை. அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ளது. கர்நாடகாவில் சத்யேந்திராவின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் இருந்தால் தகவல் அளிக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.