
ஹிந்தியில் திரிஷ்யம் 3 படப்பிடிப்பு நிறைவு
மலையாளத்தில் மோகன்லால், ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான "திரிஷ்யம்" படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சமீபத்தில் அதன் மூன்றாம் பாகம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 200 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிப்பட வரிசையில் இடம் பிடித்துள்ளது. இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் ரீமேக் ஆனாலும் கூட மூன்றாம் பாகத்தை ஹிந்தியில் மட்டுமே ரீமேக் செய்கிறார்கள். அஜய் தேவ்கன், ஸ்ரேயா நடிப்பில் உருவாகும் இந்த மூன்றாம் பாகத்தை அபிஷேக் பதக் இயக்குகிறார். வரும். அக்டோபர் 2ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என முன்கூட்டியே அறிவித்துவிட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார் இயக்குநர் அபிஷேக் பதக்.
மலையாளத்தில் சமீபத்தில் வெளியான 3ம் பாகம் முதல் இரண்டு பாகங்களைப் போல இல்லை என்கிற குறை ரசிகர்களிடம் எழுந்தது. ஆனால் அந்த படம் வெளியாவதற்கு முன்பே ஹிந்தியில் உருவாகும் திரிஷ்யம் 3 பற்றி இயக்குநர் அபிஷேக் பதக் கூறும்போது, மலையாளத்தின் 3ம் பாகத்திற்கும் ஹிந்தியில் உருவாகும் 3ம் பாகத்திற்கும் கதைக்கருவில் மட்டுமே ஒற்றுமை இருக்கும் என்றும், திரைக்கதைகளில் நிறைய வித்தியாசங்கள் இருக்கும் என்றும் கூறியிருந்தார். அந்த வகையில் மலையாளத்தை விட ஹிந்தியில் திரிஷ்யம் 3 வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!