
கலை அன்பின் வடிவம்; கலையானது, மனிதனின் கற்பனை வளத்தை ஊக்குவிக்கிறது. கலை, வரலாற்றை நினைவூட்டுகிறது, நிகழ்காலத்தை பிரதிபலிக்கிறது, எதிர்காலத்தை வடிவமைக்கிறது. கலை மனிதனின் ஆன்மாவின் குரல். அப்படிப்பட்ட கலைக்கு, கலைஞர்களுக்கு ஒரு விழா!!!
வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் கத்தர் தமிழர் சங்கம், 'தமிழர் கலை விழாவை டி.பி.எஸ் மோனார்க் பன்னாட்டு பள்ளியில் சிறப்பாக கொண்டாடியது. இதில் தலைமை விருந்தினராக கத்தருக்கான இந்திய தூதர் விபுல், கௌரவ விருந்தினர்களாக சிங்கப்பூர் துணைத் தூதர் சுமையா பக்கவி , இந்திய கலாச்சார மைய்ய தலைவர் மணிகண்டன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை சிறப்பித்தனர்.
கத்தர் தமிழர் சங்கத்தின் தலைவர் முனியப்பன் வரவேற்று பேசினார். அதே மேடையிலே 'தமிழ் மலர் ' முதல் இதழை இந்திய தூதர் விபுல் வெளியிட இந்திய சமூக நல மன்றத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் மணிபாரதி பெற்றுக்கொண்டார். கத்தர் தமிழர் சங்கத்தின் இலக்கிய செயலாளர் நிர்மலா ரகுராமன் தமிழ் மலர் இதழின் ஆசிரியராக பணியாற்றி ஒரு சிறந்த படைப்பை வழங்கினார்.
விழாவில் நடனம், நாட்டியம், கரகம், பறை இசை, கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம்,பொய்க்கால் குதிரை, மாடு, வாத்திய இசை, நாடகம், நகைச்சுவை நேரம், மெல்லிசை பாடல்கள் போன்ற அணைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன. கலைஞர்களுக்கும் தங்கள் திறமைகளை அரங்கேற்ற ஒரு நல்ல மேடையாக இருந்தது.. இந்த கலைநிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் இந்திரா சரவணகுமார், பிரியா இளையராஜா இருவரும் தமது பேச்சு திறமையால் பார்வையாளர்களை தங்கள் வசப்படுத்தினர்.
சிறப்பாக அவுட் ரீச் கத்தர் அமைப்பை சார்ந்த குழந்தைகள் வீணை, பியானோ, வயலின் போன்ற இசை கருவிகள் வாசித்தும், பாட்டு பாடியும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். மெல்லிசையும், சிறுவர்கள், பெண்டிர், ஆடவர் என அனைவரின் நடன நிகழ்ச்சிகளும் கண்ணுக்கும், காதுக்கும் பெரிய விருந்தாக அமைந்தது. வீரமங்கை வேலுநாச்சியார் நாடகமோ வண்ண உடை, சிறந்த வசனம், மிகச்சிறந்த நடிப்புடன் பார்வையாளர்களுக்கு நமது வரலாற்றை நினைவூட்டும் ஒரு படைப்பாக இருந்தது.
இந்த நிகழ்ச்சி சிறப்புற காரணமாக இருந்த நமது கலை செயலாளர் புருஷோத்தமன், துணை கலை செயலாளர் ராதிகா, நடன இயக்குனர்கள், குழு உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுகள். நிகழ்ச்சியின் இறுதியில் அனைத்து உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கலைஞர்களுக்குத் துணை கலை செயலாளர் ராதிகா நன்றி தெரிவித்தார்.
- தினமலர் வாசகர் வி.நாராயணன், பொதுச்செயலாளர், கத்தார் தமிழ்ச் சங்கம்