/வாராவாரம்/விருந்தினர் பகுதி/'‛குறள் சூடி உமையாள்' - மெய்யம்மையின் நாசா சாதனை'‛குறள் சூடி உமையாள்' - மெய்யம்மையின் நாசா சாதனை
'‛குறள் சூடி உமையாள்' - மெய்யம்மையின் நாசா சாதனை
'‛குறள் சூடி உமையாள்' - மெய்யம்மையின் நாசா சாதனை
'‛குறள் சூடி உமையாள்' - மெய்யம்மையின் நாசா சாதனை
ADDED : ஆக 04, 2024 03:22 PM

அம்மா என்ற வார்த்தையை உச்சரிக்கவே, குழந்தைகளுக்கு வருடங்கள் சில ஆகலாம். ஆனால், மூன்று வயதிலேயே 300 திருக்குறளை ஒப்புவித்து குறள் சூடி உமையாள், தமிழ் அமுதம், குழந்தை மேதை, கலைமகள் தாரணி என பல்வேறு பட்டங்களை பெற்றதோடு 15 வது வயதில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று திரும்பி பாராட்டுக்களை பெற்றுள்ளார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த மாணவி மெய்யம்மை.
பிளஸ் 1 படித்து வரும் மெய்யம்மை கூறும்போது:
எனது பெற்றோர் மெய்யப்பன், வடிவாம்பாள். அம்மா தான் எனது முதல் குரு. நான் அழுதாலும் திருக்குறள்... சிரித்தாலும் திருக்குறள் என்று திருக்குறள், திருவாசகம் தான் எனக்கு எப்போதும் அம்மா சொல்லிக் கொடுப்பாங்க. நான்கு வயதிலேயே திருக்குறள் மட்டுமின்றி ஸ்லோகங்கள், தமிழ் மாதங்கள், பொது அறிவு உட்பட பலவற்றையும் மேடைகளில் பேச கற்றுக் கொடுத்தனர்.
துபாய் உட்பட அரபு நாடுகளில் மீனாட்சி திருக்கல்யாணம், சிலப்பதிகாரம் திருப்பாவை திருவாசகம் திருப்புகழ் திருக்குறள் உள்ளிட்டவற்றில் ஒரு மணி நேரம் சொற்பொழிவு செய்தேன். தவிர தமிழ்ச்சங்கம், பொது நிகழ்ச்சி, திருமண விழாக்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் 5க்கும் மேற்பட்ட கல்லுாரிகளிலும் பேசி உள்ளேன். நான்கு வயதிலேயே 1330 திருக்குறளையும் ஒப்புவித்து விருது பெற்றுள்ளேன்.
மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், இந்தோனேசியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சொற்பொழிவுக்காக சென்றுள்ளேன். தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் கையால், திருக்குறளுக்கு விளக்க உரை வெளியிட்டதற்கு விருது பெற்றுள்ளேன். கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித்திடம் இரு முறை விருது பெற்றுள்ளேன். 3 வயதிலேயே 'குறள் சூடி உமையாள் பட்டம்' வழங்கினர். அன்றிலிருந்து யார் எனது பெயரை கேட்டாலும் எனது பெயருக்கு முன்பு குறள் சூடி என்று சேர்த்தே சொல்வேன். இலக்கிய மேதை, சொற்சுடர், குறள்சுடர் குழந்தை மேதை, கலைமகள் தாரணி என பல பட்டங்கள் பெற்றது பெரும் மகிழ்ச்சி.
அமெரிக்காவிற்கு பலமுறை சொற்பொழிவிற்காக சென்றுள்ளேன். ஆனால் முதல்முறையாக, நாசாவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவில் உள்ள குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை சார்பில், சயின்ஸ் எக்ஸ்போ நடந்தது. இதில் நான், ஹியூமன் ஆட்டோமேஷன் கன்ட்ரோல் ரோபோட் என்ற ப்ராஜெக்ட் சமர்ப்பித்தேன்.
இந்த ப்ராஜெக்ட் முதலிடம் பிடித்ததோடு, இலவசமாக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இன்டெர்ன்ஷிப் பயிற்சி பெறும் வாய்ப்பையும் பெற்றேன். எனது வழிகாட்டியாக, எங்கள் பள்ளி தாளாளர் எஸ்.சுப்பையா, கைடு அருணாக்காந்த் மற்றும் ஆசிரியர்கள் இருந்தனர்.
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது ஸ்பேஸ் சென்டர் ஹூஸ்டன், ஜான்சன் ஸ்பேஸ் சென்டர் பார் விசிட்டர்ஸ், ஸ்மித்சோனியன் அப்ளியேட்டட் மியூசியம் ஆகிய மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கேட்வே டு ஸ்பேஸ் ரிசர்ச் சென்டர், ராக்கெட் பார்க், ஓரியன் கேப்சூல், ஷட்டில் அண்ட் ஸ்பேஸ் கிராப்ட் ப்ரொடக்சன், அப்பல்லோ, மிஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை பார்க்கும் போது பிரமிப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.
ஐ.ஏ.எஸ்., ஆவது என் கனவு. ஐ.ஏ.எஸ்., ஆனாலும் உலகம் போற்றும் சிறந்த சொற்பொழிவாளராக வருவதே எனது லட்சியம் என்றார்.