/வாராவாரம்/விருந்தினர் பகுதி/தன்னம்பிக்கை பெண்களுக்கு முன்னுதாரணம் காயத்ரிதன்னம்பிக்கை பெண்களுக்கு முன்னுதாரணம் காயத்ரி
தன்னம்பிக்கை பெண்களுக்கு முன்னுதாரணம் காயத்ரி
தன்னம்பிக்கை பெண்களுக்கு முன்னுதாரணம் காயத்ரி
தன்னம்பிக்கை பெண்களுக்கு முன்னுதாரணம் காயத்ரி
ADDED : ஜூலை 28, 2024 05:23 PM

சிறு வயதிலிலேயே திருமணம், குழந்தை, குடும்பம் என வட்டத்திற்குள் சுருங்கி வாழ்க்கை இருண்ட போதிலும் தன்னம்பிக்கை எனும் தீப்பொறி கொண்டு தனக்கென ஒரு முத்திரை பதித்து மனிதவள மேலாண்மை ஆலோசகராகவும், தொழில் முனைவோரகவும் வலம் வருகிறார் காயத்ரி.
புதுச்சேரி காரைக்கால் பகுதியை சேர்ந்த இவருக்கு, பள்ளி பருவம் முடிந்து கல்லுாரி கனவை எட்டிப் பார்க்கும் வேளையில் திருமணம், 12ம் வகுப்போடு படிப்பு முடிந்தது. பின்னர் குடும்பம், குழந்தை என சிறு வட்டத்திற்குள் சுருங்கி விட்டது காயத்ரியின் வாழ்க்கை.
இந்த சமூகத்தின் பேச்சுகள் இவரின் துாக்கத்தை தொலைக்க வைத்து விட்டதென்றே சொல்ல வேண்டும். படிப்பு ஒன்றே ஆயுதம் என நம்பிய காயத்ரி மீண்டும் அதற்கான முயற்சியை கையில் எடுத்தார்.
ஆனால், கல்லுாரியில் சென்று படிக்க முடியாத சூழல் இருந்தது. இருப்பினும் தொலை துார கல்வி வழியாக இளங்கலை, முதுகலை ஆங்கிலம் முடித்தார். பேராசிரியர் ஆக வேண்டுமென்ற கனவு இருந்தாலும் பல்வேறு சூழல் காரணமாக அது வெறும் கனவாகவே இருந்து விட்டது.தொடர்ந்து செராமிக்ஸ் டைல்ஸ் டிசைனராக பயணத்தை தொடங்கினார். சிறிது நாட்களில் பெரும் விபத்து ஏற்பட்டு கழுத்தில் பாதிப்பு ஏற்பட்டது. டிசைனிங் தொழிலும் கைவிட்டது. அடிமேல், அடி விழுந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத காயத்ரி மனித வள மேலாண்மையில் ஆர்வம் காட்டினார். அதற்காக படித்து பயணத்தை மீண்டும் தொடங்கினார். இந்த முறை அவருக்கு எல்லாம் நேர்மறையாக மாறியது.
ஒரு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றினாலும், கல்லுாரிகள், பயிற்சி மையங்களுக்கு சென்று மனித வள மேலாண்மை குறித்து இலவச பயிற்சி அளித்துள்ளார். பல்வேறு கல்லுாரிகளில் மாணவர்களுடன் உரையாடி எதிர்கால வாழ்விற்கு ஊக்கமளித்திருக்கிறார்.இப்படி பயிற்சி அளிப்பதை ஏன் தொழிலாக மாற்றக் கூடாது என்ற எண்ணம் தோன்றவே, மனித வள மேலாண்மை ஆலோசகராக தன் தொழிலை மாற்றினார். ஏற்கனவே இதில் பணியாற்றிய அனுபவம் இருந்ததால் ஒரு நிறுவனம் பணியாளரை தேர்ந்தெடுக்கும்போது என்ன எதிர்பார்க்கும், என்ன தேவை என்பதை காயத்ரி அறிந்து வைத்திருந்ததால் இவரின் பயிற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
பல நிறுவனங்களும் தங்களின் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க காயத்ரிக்கு அழைப்பு விடுகின்றனர். தனியாக அவருடைய நிறுவனத்தில் வந்து பயிற்சி பெறுவோரும் அதிகம். ஏழை பெண்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறார். கல்லுாரி மாணவர்களிடம் கலந்துரையாடி ஒரு நிறுவனத்திற்கு பணிக்கு செல்ல எப்படி தயாராக வேண்டுமென்ற பயிற்சியளிக்கிறார்.
சைக்காலஜியும் படித்திருக்கிறார் என்பதால் ஒரு பணியாளரின் மன நிலை என்ன எப்படி பணியாற்ற வேண்டும் அவர்களை ஊக்கப்படுத்துவது போன்ற பயிற்சிகளை பல நிறுவனங்களுக்கு சென்று அளித்து வருகிறார். பெண் சாதனையாளர், சிறந்த தொழில்முனைவோர் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.இது குறித்து காயத்ரி கூறியது: பெண்கள் தயங்கவோ, தன்னம்பிக்கை இழக்கவோ கூடாது. முதலில் அவர்களை முழுமையாக நம்ப வேண்டும். குழந்தைகளோடு உள்ள பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கென தனி இல்லம் தொடங்க வேண்டும். அவர்களின் தன்னம்பிக்கையின் துாண்டுகோலாய் இருக்க வேண்டும் என்பது பெரும் கனவாய் உள்ளது. எனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி விட்டேன். அதனை உலகம் முழுவதும் கொண்டு செல்வதே லட்சியம் என்றார்.
சமூகம் உள்பட அனைத்தும் தடையாய் அமைந்த போதிலும், எனக்கான சுதந்திரத்தை நானே எடுத்துக் கொள்வேன் என்று சொல்லும் துணிச்சலோடு இன்றைய தலைமுறைப் பெண்களுக்கு முன்னுதாரணமாய் இருக்கும் காயத்ரி பாராட்டிற்குரியவரே.