/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ போர் வேண்டுமா... போய் பாருங்கள் வியட்நாமிற்கு! உரக்க சொல்லும் 'உலகம் சுற்றி' நிரஞ்சனா போர் வேண்டுமா... போய் பாருங்கள் வியட்நாமிற்கு! உரக்க சொல்லும் 'உலகம் சுற்றி' நிரஞ்சனா
போர் வேண்டுமா... போய் பாருங்கள் வியட்நாமிற்கு! உரக்க சொல்லும் 'உலகம் சுற்றி' நிரஞ்சனா
போர் வேண்டுமா... போய் பாருங்கள் வியட்நாமிற்கு! உரக்க சொல்லும் 'உலகம் சுற்றி' நிரஞ்சனா
போர் வேண்டுமா... போய் பாருங்கள் வியட்நாமிற்கு! உரக்க சொல்லும் 'உலகம் சுற்றி' நிரஞ்சனா
UPDATED : செப் 21, 2025 09:04 AM
ADDED : செப் 21, 2025 05:32 AM

உ லகம் முழுவதும் அமைதி பூக்கள் மலர வேண்டும் என எதிர்பார்த்தாலும் இன்றும் ஆங்காங்கே போர் மேகங்கள் சூழ்ந்து கொண்டு மக்களை அச்சுறுத்தத்தான் செய்கிறது. போர் முடிந்த பின் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்ற உணர்வை இன்றைய மக்கள் எவ்வாறு தெரிந்துகொள்வது என்பதில், வியட்நாமின் போர் அருங்காட்சியகம் இன்றும் உயிர்ப்புடன் நமக்கு உணர்த்துகிறது.
உலக சுற்றுலா ஆர்வலரும் பயணக் கட்டுரை எழுத்தாளருமான மதுரை நிரஞ்சனா, சமீபத்தில் வியட்நாம் சென்று திரும்பிய நிலையில், தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக நம்மிடம் பகிர்ந்துகொண்ட தருணம்...
பத்து ஆண்டுகளுக்கும் மேல் உலகை சுற்றி வருகிறேன். இதுவரை 15 நாடுகளுக்கு சென்றுவிட்டேன். சுற்றுலா என்பது வெறும் பொழுதுபோக்கான நிகழ்வு அல்ல. ஒரு நாட்டின் வரலாறு, கலாசாரம், பண்பாடு, மொழிப் பற்று, மக்களின் வாழ்வியல் போன்ற விஷயங்களை கற்றுக்கொள்ளும் அறிவுப்பூர்வ பயணம்.
அந்த வரிசையில் சமீபத்தில் சென்று வியந்த நாடு, வியட்நாம்.
![]() |
இன்று (செப். 21) சர்வதேச அமைதி தினம். அத்துடன் வியட்நாம் போர் முடிந்த 50வது ஆண்டை கொண்டாடும் தருணம். இந்த நேரத்தில் அந்த நாடு குறித்தும், அங்குள்ள போர் அருங்காட்சியக பின்னணி குறித்தும் இன்றைய இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது பயனுள்ளது.
அது, ஹோ சி மின் நகர். அங்குள்ள இந்த போர் அருங்காட்சியகம் வியட்நாமின் மிக முக்கிய வரலாற்று ஈர்ப்புகளில் ஒன்றாக திகழ்கிறது. மூன்று தளங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் 1975 ல் நடந்த போரின் போது வீரர்கள் உபயோகித்த பொருட்கள், ஆவணங்கள், வரைபடங்கள், கடிதங்கள், போரின் பயங்கரத்தை சித்தரிக்கும் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் போர் வரலாற்றின் பதிவுகளை நினைவுப்படுத்துகிறது.
ஏஜன்ட் ஆரஞ்ச் இங்குள்ள 'ஏஜன்ட் ஆரஞ்ச்' பிரிவு பார்வையாளர்களை வியக்க வைக்கிறது. அதாவது போரில் உயிரிழப்புகளை ஏற்படுத்த அமெரிக்க ராணுவம் அன்று கொடிய ஆயுதங்களை பயன்படுத்தியது மட்டுமல்லாமல், வியட்நாம் மக்கள் வாழ்வாதாரத்தை அழிப்பதற்காக 'ஏஜன்ட் ஆரஞ்சு' என்ற டையாக்ஸின் நச்சு ரசாயனங்களை பயன்படுத்திய நிகழ்வு அது.
அன்றைய போரில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலகளவில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. அதன் விளைவுகளையும் கண்முன் விளக்குகிறது.
![]() |
போர் பின்விளைவுகளை பற்றிய கண்காட்சியில் இடம் பெற்றுள்ள, 'டையாக்ஸின் விஷத்தன்மையால் பாதிக்கப்பட்ட சிசுக்களை, ஜாடிகளில் பதப்படுத்தி வைத்துள்ளது' மனதை உருக்குகிறது. இதை பார்க்கும் போது ஒவ்வொருவரின் மனதிலும் 'ஓ மை காட், உலகில் இனி எங்குமே போர் நடந்துவிட கூடாது' என வேண்டிக்கொள்ள தோன்றுகிறது.
இந்த போரின்போது 6.1 மில்லியன் எக்டேர் அளவு நிலப்பரப்புகள் வெடிகுண்டுகள் வீச்சால் இன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாம். அந்த பகுதியில் 8 லட்சம் டன் குண்டு அன்றைய அமெரிக்க ராணுவத்தினரால் விட்டுச் செல்லப்பட்டதும், அதனால் 42 ஆயிரம் மக்கள் குண்டுகளால் உயிரிழந்ததும் தத்ரூப ஓவியக் காட்சிகளால் வரையப்பட்டு நம்மை உறைய வைக்கிறது.
அமைதி மணி இந்த அருங்காட்சியக வளாகத்தில் 500 பவுண்டு எடையுள்ள வெடிக்காத அமெரிக்க குண்டின் குப்பியிலிருந்து வடிவமைக்கப்பட்டுள்ள 'அமைதி மணி' அனைவரையும் கவர்கிறது. இந்த மணியானது. நிரந்தர அமைதி, நல்லிணக்கம், போர் இல்லாத எதிர்காலத்திற்கான வேண்டுகோளின் அடையாளமாக திகழ்கிறது.
போரின் போது ஏற்படுத்தப்பட்ட பதுங்கு குழிகள், சடலங்களை கொண்டு சென்ற மாட்டு வண்டி, வீரர்களுக்கு கிராம மக்கள் ஏற்படுத்திக் கொடுத்த குடில்கள் என இன்னும் பல சுவராஸ்யங்கள் இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அந்த அருங்காட்சியகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. என் போன்ற 'நாடு சுற்றி' ஆர்வலர்களுக்கு இதுபோன்ற அருங்காட்சியகங்கள் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தும்.
அருங்காட்சியகத்தை விட்டு வெளியேறும் போது, 'இன்றைய உலக நாடுகளில் யார் வலிமையானவன் என நிரூபிக்க போர் தான் தீர்வு என நினைக்கும் தலைவர்கள் இந்த அருங்காட்சியகத்தை குடும்பத்துடன் ஒருமுறை சுற்றிப் பாருங்கள்' என அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் போல் உணர்வு ஏற்படுகிறது.
ஐ.நா.வின் 80ம் ஆண்டு விழா, யுனெஸ்கோ அமைதி கலாசார 25ம் ஆண்டு நிறைவு விழா நடக்கும் இத்தருணத்தில் உலக அமைதியின் கட்டாயத்தை பற்றி சிந்திக்க இந்த வியட்நாம் போர் அருங்காட்சியகம் ஒரு அமைதி உலகத்திற்கான துாண்டுகோலாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தினமலர் சண்டே ஸ்பெஷல் மூலம் அந்த அமைதி மணியின் ஓசை உலகம் முழுவதும் ஒலிக்கட்டும் என்கிறார் நிரஞ்சனா.