Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ துாரிகையில் துளிர்க்கும் ஓவியம் பேசாமல் 'பேசும்' காவியம்

துாரிகையில் துளிர்க்கும் ஓவியம் பேசாமல் 'பேசும்' காவியம்

துாரிகையில் துளிர்க்கும் ஓவியம் பேசாமல் 'பேசும்' காவியம்

துாரிகையில் துளிர்க்கும் ஓவியம் பேசாமல் 'பேசும்' காவியம்

UPDATED : செப் 21, 2025 06:38 AMADDED : செப் 21, 2025 06:36 AM


Google News
Latest Tamil News
'சித்திரமும் கைப்பழக்கம்... என்பார்கள். அப்படி... இஷ்டப்பட்டு, வரைந்து பழகியது தான், எதிர்காலத்தை தீர்மானிக்கும் உயர்கல்வியை தே ர்ந்தெடுக்க செய்திருக்கிறது' என்கிறார், ஓவியக்கலையில் அசத்தும், கல்லுாரி மாணவி மெர்ஸி.உடுமலையை சேர்ந்த பிரபு - ரேவதி தம்பதியின் மகளான மெர்ஸி, ஓவியக்கலையில் அசத்துகிறார். கண்ணில் பார்ப்பதையும், கற்பனையில் உதிப்பதையும் தத்ரூபமாக வரைவதே இவரின் அசாத்திய திறமை.

கும்பகோணம் கவின் கலை அரசு கல்லுாரியில் விஷூவல் கம்யூனிகேஷன் மற்றும் டிசைன் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து பயின்று வரும் அவர் கூறியதாவது:

நான் என் சகோதரியுடன் இணைந்து, எல்.கே.ஜி., முதலே ஓவியம் வரைவதில் ஈடுபடுவேன்; பள்ளியில் படிக்கும் போது, ஓவியப் போட்டியில் பங்கேற்று பரிசுகளை பெற்றேன். அப்போது தான் என் திறமை எனக்கே தெரிய வந்தது.

பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்களின் ஊக்குவிப்பால், ஓவியத்திறமையை வளர்த்துக் கொள்ள துவங்கினேன். அறிவியல் மீது எனக்கு மிகுந்த ஆர்வம் என்பதால், அறிவியல் சார்ந்த ஓவியப்போட்டியில் தவறாமல் பங்கேற்று, தொடர்ந்து பரிசுகளை பெற்று வந்தேன். அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்கும் விஞ்ஞானிகள் உள்ளிட்ட அறிவியல் சார் ஆராய்ச்சியில் ஈடுபடுவோரின் பேச்சு, என்னை ஈர்த்தது; அறிவியல் மீது ஆர்வத்தை அதிகப்படுத்தியது. அறிவியல் சார்ந்த ஓவியங்களை தொடர்ச்சியாக வரைந்து, பரிசும், பாராட்டும் பெற்றேன்.

Image 1472219


வாட்டர் கலர், பென்சில் ஓவியம் உள்ளிட்ட அனைத்து வகை ஓவியங்களையும் வரைந்து பழகினேன். பிளஸ் 2 முடித்த பின், என் ஓவியத்திறமையை பார்த்த ஆசிரியர் ஒருவர், கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லுாரியில் இணைந்து படிக்கும் யோசனையை கூறினார். புதியதாக ஒரு பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து, அதில் என்னை தயார்படுத்திக் கொள்வதை காட்டிலும், தெரிந்த பாடத்தில் புலமை பெறுவது மேல் என நினைத்து, பல கட்ட நுழைவில் தேர்ச்சி பெற்று, 'சீட்' பெற்றேன்.

நான்காண்டு, கல்லுாரி படிப்பை நிறைவு செய்வதற்குள், நான் வரைந்து ஓவியங்களை, உடுமலையில் கண்காட்சியாக வைக்க விரும்புகிறேன். ஓவியம் சார்ந்த துறையில், வேலை வாய்ப்பு பெறுவதும்; நான் கற்ற ஓவியக்கலையை இயன்றவரை பிறருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே என் எண்ணம். நான் மிக சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் என்ற போதிலும், என் விருப்பத்தை அறிந்து பெற்றோரும் ஊக்குவிக்கின்றனர்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us