/வாராவாரம்/விருந்தினர் பகுதி/தாய்மைக்கு பின் ஆரோக்கிய வாழ்க்கை - அழகாக்கும் லாவண்யாதாய்மைக்கு பின் ஆரோக்கிய வாழ்க்கை - அழகாக்கும் லாவண்யா
தாய்மைக்கு பின் ஆரோக்கிய வாழ்க்கை - அழகாக்கும் லாவண்யா
தாய்மைக்கு பின் ஆரோக்கிய வாழ்க்கை - அழகாக்கும் லாவண்யா
தாய்மைக்கு பின் ஆரோக்கிய வாழ்க்கை - அழகாக்கும் லாவண்யா
ADDED : பிப் 25, 2024 10:28 AM

திருமண வாழ்க்கைக்குள் நுழையும் இளம் பெண்களுக்கு குழந்தை வரம் என்பது கனவு. அந்த கனவு நிறைவேறிய பின் குழந்தைகளின் பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் ஆர்வம் காட்டுவது குறைவு தான். குழந்தை பிறப்புக்கு பின் பெண்கள் இயற்கை உணவு மூலம் தங்களை ஆரோக்கியமாக பராமரிப்பது எப்படி என்றும், தாய்ப்பாலுக்கு ஏங்கும் குழந்தைகள் நலன் காக்க தாய்ப்பால் தானம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் மதுரை லாவண்யா. தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் நம்மிடம்...
பிறந்த வீட்டில் பெண்கள் ஒவ்வொருவருமே இளவரசி தான். கல்யாணமாகி அடுத்த (கணவர்) வீட்டிற்கு சென்றால் குடும்பம், குழந்தை, கடமை என பொறுப்புகளுடன் போட்டியிடுவது வாழ்க்கையாகி விடும்.
நான் படித்தது பொறியியல் (சுற்றுச்சூழல்) என்றாலும் திருமணம், முதல் குழந்தை பெற்ற பின் எனக்கு ஏற்பட்ட இடுப்பு வலி பாடமாக அமைந்தது. உடல்ரீதியாக சில பாதிப்புகளை சந்தித்தேன். 'ஆரோக்கியமாக இருந்தாலும் ஏன் இப்படி ஏற்பட்டது' டாக்டர்கள், டயட்டீஷியன் என எனக்குள் இருந்த தேடுதல் விரிவடைந்தது. குழந்தை பிறப்புக்கு பின் ஆரோக்கியம் காப்பதில் சறுக்கல் ஏற்பட்டதை உணர்ந்தேன். அதற்குரிய இயற்கை வழிமுறையையும் கண்டறிந்தேன்.
இது எனக்குள் மட்டுமின்றி குழந்தை பெற்ற இளம் பெண்களிடமும் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் 'மதர்ஸ்சாய்ஸ் புட்ஸ்' துவக்கினேன். இளம் பெண் தொழில்முனைவோர் என்பதுடன் முடங்கி விடாமல் ஆரோக்கியம் காப்பதற்கான ஆலோசனை, தாய்ப்பால் தானம் உள்ளிட்ட சேவையையும் தொடர்கிறேன்.
என்னுடைய 'மதர்ஸ்சாய்ஸ்புட்ஸ்' இன்ஸ்டாகிராமில் தமிழர்கள் மறந்துபோன சத்துள்ள பூங்கார், ரத்தசாலி, கருப்புகவுனி, அறுபதாம் குறுவை அரிசி வகைகுறித்தும், அவற்றின் மூலம் தயாரிக்கும் டிஷ்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். பூங்கார் அரிசி ரத்த செல்களை அதிகரிக்கும். குழந்தை பெற்ற பின் இந்த அரிசி கஞ்சி குடித்தால் உடல்ரீதியான பலன்கள் கிடைக்கும். தாய்ப்பால் வளமாகும். ரத்தசாலி ரக அரிசி கேரளா, கர்நாடகாவில் அதிகம் கிடைக்கிறது. தமிழகத்தில் குறிப்பிட்ட பகுதியில் கிடைக்கும். கால்சியம் உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன.
கருப்புகவுனி அரிசியில் கால்சியம், இரும்பு சத்து உள்ளது. இதுபோன்ற அரிசிகளை பிரசவத்திற்கு பின் சேர்த்து வந்தால் மெனோபஸ் நின்ற பின்னரும் ஆரோக்கியம் கிடைக்கும். பூங்கார்ரக நெல் நாங்களே உற்பத்தி செய்கிறோம். இவ்வகை அரிசிக் கலவை மூலம் டிரெண்டி டிஷ்களையும் தயாரித்து வருகிறேன்.
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று, இளம் தாய்மார்களிடம் பிரசவத்திற்கு பின் ஆரோக்கிய வாழ்க்கை முறை குறித்தும், தாய்ப்பால் தானம் குறித்தும் மூன்று ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன் என்கிறார் லாவண்யா.
இவரை 89031 25809ல் பாராட்டலாம்.