Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ எங்கெல்லாம் தண்ணீர் இல்லையோ அங்கெல்லாம் நானிருப்பேன் நீர் போராளி நிமல் ராகவன்

எங்கெல்லாம் தண்ணீர் இல்லையோ அங்கெல்லாம் நானிருப்பேன் நீர் போராளி நிமல் ராகவன்

எங்கெல்லாம் தண்ணீர் இல்லையோ அங்கெல்லாம் நானிருப்பேன் நீர் போராளி நிமல் ராகவன்

எங்கெல்லாம் தண்ணீர் இல்லையோ அங்கெல்லாம் நானிருப்பேன் நீர் போராளி நிமல் ராகவன்

UPDATED : மார் 23, 2025 07:52 AMADDED : மார் 22, 2025 09:36 PM


Google News
Latest Tamil News
கிராமப்புறத்து இளைஞனாக பொறியியல் படித்து விட்டு வெளிநாட்டில் இருந்தவர், வாழ்வாதாரங்களை புரட்டி போட்ட கஜா புயலுக்கு பின் நீரை தேடி சென்றார். வாழ்க்கைக்கு எது தேவை என உணர்ந்த அவரின் பயணம் வறண்ட நிலங்களை நோக்கி இருந்தது. இவ்வாறு நீர்நிலைகளை மீட்கும் போராளியாக இருந்து இதுவரை 252 நீர்நிலைகளை மீட்டுள்ள நிமல் ராகவனால், பல வறண்ட பகுதிகள் மீண்டும் வானம் பார்க்க துவங்கி உள்ளன.

இவர் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா நாடியம் கிராமத்தில் பிறந்தேன். விவசாய குடும்பம். நான் பிறந்த ஆறு மாதத்தில் அப்பாவுக்கு மூளையில் டியூமர் பாதிப்பு ஏற்பட்டது. நான் படித்தது, என் அப்பா சிகிச்சை செலவு, அக்காவின் திருமணம் என எல்லாமே தென்னை விவசாயம் மூலம் வந்த வருமானம் தான்.

தஞ்சையை நெற்களஞ்சியம் என்பர். ஆனால் 35 - 40 ஆண்டுகளாக தென்னை விவசாயத்திற்கு மாறிவிட்டோம். தென்னையில் வருவாய் அதிகம், பராமரிப்பு குறைவு, தண்ணீர் பெரிய தேவை இல்லை.

நான் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்து விட்டு, மஹாராஷ்டிரா புனே, பின் துபாயில் பணிபுரிந்தேன்.

துபாயில் 1200க்கும் மேற்பட்ட ரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்துள்ளேன். நடிகர் ஜி.வி.பிரகாஷ், அமெரிக்க வாழ் தமிழர்கள் இணைந்து தமிழகத்தில் அரசு பள்ளிகளை தத்தெடுத்து ஸ்மார்ட் வகுப்பறை போன்றவற்றை செய்தோம். நான் மேற்பனைக்காடு ஊரின் பள்ளியை தேர்ந்தெடுத்தேன். புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவும் அமெரிக்காவில் உள்ள ரியாக் ஷன் குழுவில் துபாய் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன்.

விடுமுறைக்காக 2018ல் சொந்த ஊருக்கு வந்தேன். மீண்டும் துபாய் திரும்ப தயாராகும் போது கஜா புயல் அறிவிப்பு வந்தது. விடுப்பை ஒருவாரம் நீட்டித்து மக்களை பாதுகாப்பாக தங்க வைத்தேன். புயல் முடிந்து மறு நாள் அனைத்து தென்னை மரங்களும் சாய்ந்து கிடந்தன. எங்கள் வாழ்வாதாரமே போனது போல் ஆனது. மீட்பு பணி துவங்கினோம். நிறைய உதவிகள் கிடைத்தது.

மண்ணிற்காக நின்றேன்


வழக்கமாக வெளிநாடு பணி செல்லும் என் போன்றவர்கள் 40 வயதுக்கு பின் ஊருக்கு வந்து செட்டில் ஆக நினைப்போம். இந்த புயல் எல்லாவற்றையும் புரட்டி போட்டு, ஊரின் வாழ்வாதாரமே போய்விட்டதாக காட்டியது. ஆதலால் அன்று இரவே என் பணியை விட்டு விட்டு என் மண்ணிற்காக நின்றேன்.

விவசாயத்தை ஊக்குவிக்க எல்லோருடனும் சேர்ந்து பேராவூரணி பகுதி நீர்நிலைகளை மீட்க துவங்கினேன்.இதை ஏன் மற்ற பகுதிகளிலும் செய்யக்கூடாது என துவங்கி அடுத்தடுத்த மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகள் வரை என் பயணம் நீண்டு கொண்டிருக்கிறது.

இதுவரை 252 நீர்நிலைகள் துார்வாரப்பட்டுள்ளது. 1670 கி.மீ.,க்கு ஆறு, கால்வாய்கள் புனரமைக்கப்பட்டுள்ளது. 567 காடுகளில் 26 லட்சம் மரங்களை நட்டுள்ளோம். தமிழகத்தில் 20 மாவட்டங்கள், இந்தியாவில் ஜம்மு, குஜராத், ஹரியானா, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட 11 மாநிலங்களிலும், கென்யாவிலும் நீர்நிலைகளை மீட்டு வருகிறோம்.

ராமநாதபுரத்தில் 6 ஏரிகளை சரி செய்த பின், ஆறுகளை சரி செய்யாமல் ஏரியை சுத்தம் செய்வதில் பலனில்லை என புரிந்தது. 2023ல் சங்கரத்தேவன் கால்வாயை 15 கி.மீ.,க்கு சரி செய்தோம். 2024ல் ராமநாதபுரத்தில் 100க்கும் மேற்பட்ட கண்மாய்களில் தண்ணீர் இருந்தது. கீரந்தை போன்ற வறண்ட பகுதிகளிலும் இரு போக விவசாயம் துவங்கினர். சங்கரதேவன் கால்வாய் முடியும் இடம் சாயல்குடி பகுதிகளிலும் விவசாயம் பலம் பெற்றது.

ராணுவத்தில் ஏரி சீரமைப்பு


இந்திய ராணுவம், விமானப்படைக்காகவும் ஏரி சீரமைப்புக்காக 2020ல் உத்தரப்பிரதேசத்தில் பணிபுரிந்தேன். சென்னை ஐ.ஐ.டி., நான் செய்யும் பணிகளை ஆவணப்படுத்தி, நீர்மேலாண்மை திட்ட வடிவமைப்புகளை செய்து தர உள்ளது.

மக்கள், அங்குள்ள விவசாயிகள் தரும் பொருளாதார உதவியும், மாநிலங்களில், சி.எஸ்.ஆர்., நிதி மூலமாகவும் இணைந்து பணிபுரிகிறோம். ராமநாதபுரம் கடலாடி பெரியகுளத்தில் 10 கி.மீ., கால்வாய் வெட்டி 260 ஏக்கர் கண்மாய், 2 ஊருணிகளுக்கு தண்ணீர் கொண்டு சென்றோம். நீண்ட நாள் கழித்து தண்ணீர் வந்ததால் அங்கிருந்த ஓடைக்கு கிராமசபை தீர்மானம் போட்டு 'நிமல் ராகவன் ஓடை' என வைத்துள்ளனர்.

அமெரிக்காவில் மொய் விருந்து


புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழகத்தை நல்ல முறையில் வைத்திருக்க ஆசை உண்டு. அமெரிக்காவில் அட்லாண்டா வில் ஆண்டுதோறும் மே மாதம் 'அட்லாண்டா பூமி தினம்' நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து மொய் விருந்து மாதிரி நடத்தி நிதி பெற்று எனக்கு தருவர். ஆஸ்திரேலியா, லண்டன் தமிழ் சங்கங்களும் உதவி வருகின்றனர்.

கென்யாவில் பணிபுரிந்த பின் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஓரிடத்தில் மழை பெய்தது. அம்மக்கள் என்னை 'வாம்பூவா' என பெயர் வைத்தது என் வாழ்வில் மிகவும் நெகிழ்ச்சியான தருணம். 'மழையின் மகன்' என்று ஸ்வகிலி மொழியில் அர்த்தம்.

எதிர்காலம், எல்லா காலமும் நீர் முக்கியம். நீரின்றி அமையாது உலகு என்பது நுாற்றுக்கு நாறு உண்மை. நீர்நிலைகள் இன்றி அமையாது நீர் என்பது என் கூற்று. நீரை நிலைப்படுத்த நீர்நிலைகளின் தேக்கும் திறன் அவசியம்.

தண்ணீரை கீழே தேடாமல் மேலே இருந்து வர வைக்க வேண்டும் என நம்மாழ்வார் கூறியதை வழிமொழிகிறேன். ஏற்கனவே நிறைய தவறு செய்து விட்டோம். இனியாவது இருப்பதை காப்பாற்றினால் நன்றாக இருக்கலாம்.

பெரிதாக எதிர்கால திட்டம் ஒன்றுமில்லை. எங்கெல்லாம் தண்ணீர் இல்லையோ அங்கெல்லாம் செல்வேன் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us