/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ஒரு கால்டாக்சியும்... கொஞ்சம் கவிதைகளும்!ஒரு கால்டாக்சியும்... கொஞ்சம் கவிதைகளும்!
ஒரு கால்டாக்சியும்... கொஞ்சம் கவிதைகளும்!
ஒரு கால்டாக்சியும்... கொஞ்சம் கவிதைகளும்!
ஒரு கால்டாக்சியும்... கொஞ்சம் கவிதைகளும்!
ADDED : ஜூன் 02, 2024 11:06 AM

'அடங்கி போனது ஆசைஅமைதியானது வாழ்க்கைஆர்ப்பாட்டமாய் இறுதி ஊர்வலம்'
-இது போன்ற ஆழமான 'ஹைக்கு' கவிதைகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் நயினார்.
கனவு என்பது நம் அனைவரது வாழ்க்கையிலும் இருக்கக்கூடும். உறக்கத்தில் வருவதல்ல. நம்மை உறங்க விடாமல் லட்சியத்தை நோக்கி ஓட வைப்பது. கனவை நோக்கி பயணிக்கும் போது சிலர் உடனே அடைந்து விடுவர். சிலர் சூழ்நிலைகளால் திசை மாறி போவது உண்டு. சிலருக்கு சற்று தாமதம் ஆகலாம். ஆனால் இவை அனைத்திற்கும் முக்கியம், கனவை அடைந்தே தீர வேண்டும் என்ற லட்சிய வெறி. அப்படிப்பட்ட வைராக்கியத்துடன் தன் கனவை நோக்கி பயணிப்பவர் கவிஞர் நயினார்.
லட்சிய கனவுக்காக ஒரு கையில் பேனா, மறு கையில் குடும்பத்திற்காக காரின் ஸ்டியரிங் என பயணித்துக் கொண்டிருக்கிறார். ஆம்...கவிஞர் நயினார் ஒரு கார் டிரைவர்.
அவர் கூறியதாவது:
என் முழுப்பெயர் முகமது நயினார். 53 வயதாகிறது. சிறு வயதிலிருந்தே கதை, கவிதைகளில் நாட்டம் அதிகம். திரைப்பட இயக்குனர் ஆக ஆசை இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பம் வந்த வேளையில் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. எனவே அந்த கனவு பாதியில் நிற்கிறது. 1989 - 1991 ஆண்டுக்குள் நான் எழுதிய 21 சிறுகதைகள் வெளியாகின. என் முதல் சிறுகதை 'ஜாக்கிரதை'எனது 19 வயதில் வெளியானது.
வெளிநாட்டில் கடை வைத்து வியாபாரம் செய்யலாம் என்ற திட்டத்தில் பெரும் தொகையை இழந்தேன். மீண்டும் நாடு திரும்பும் கட்டாயம் ஏற்பட்டது. மன உளைச்சல் ஏற்பட்டதால் மனநல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்தேன். பின்னர் எனது குடும்ப நண்பர், கார் ஒன்றை குத்தகைக்குக் கொடுத்தார். ஒன்றரை ஆண்டு கழித்து குடும்பத்தினர், நண்பர்கள் உதவியால் புதிய கார் வாங்கி இன்று கால் டாக்சி ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.
2017ல் எனது நண்பர் உதவியால் 'பட்டறை' என்ற திரைப்படத்திற்காக இரண்டு பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. 2 மாதத்திற்கு முன் 'வர்டிக்ட்'என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளேன்.
பேஸ்புக்கில் தொடர்ந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். அதற்கென்று 'படைப்பு குழுமம்' என்ற குருப் உள்ளது. ஒரு லட்சம் உறுப்பினர்கள் கொண்ட இக்குழுமத்தில் உயரிய விருதாக கருதப்படும் 'கவிச்சுடர்' விருது பெற்றேன்.
புத்தகம் எழுதும் ஆர்வம் இங்கே தான் வந்தது. 'புளியேப்பம்', 'பொட்டலம்', 'கவுச்சி' என்ற எனது கவிதை தொகுப்புகள் நல்ல வரவேற்பை பெற்றன.
எனது கவிதைகள் தனி மனிதரைப் பற்றி இல்லாமல் சமூகம் சார்ந்தவைகளாகவே இருக்கும். கணவன் - மனைவி உறவுகள் குறித்து பல கவிதைகளை எழுதியிருக்கிறேன். இதை படித்தவர்கள் என்னிடம் தங்கள் பிரச்னைகளை பகிர்வார்கள். இப்படி கவிதைகள் மூலம் இச்சமூகத்திற்கு பங்களிப்பு ஆற்றுவது மன நிறைவு.
கால் டாக்ஸி ஓட்டுவதால் பகலில் எனக்கு எழுத நேரமே இருக்காது. காலை 8:00 மணிக்குச் சென்றால் மதியம் ஒரு மணி நேரம் மட்டும் ஒரு குட்டி துாக்கம் போட்டு பின் மீண்டும் இரவில் வேலைக்கு செல்வேன். இரவு 12:00 மணிக்கு மேல் தான் எழுத நேரம் கிடைக்கும். 'நயினாரின் உணர்வுகள்' என்ற யுடியூப் சேனல் வைத்திருக்கிறேன். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு நேரங்களில் நேரம் கிடைக்கும் போது எழுதி ஞாயிறுதோறும் வீடியோக்களை எடிட் செய்வேன்.
இந்த வருடம் ஐந்து புத்தகங்கள் வெளியிட திட்டமிட்டுள்ளேன் என்றார்.
இவரை வாழ்த்த 97909 61392