/வாராவாரம்/விருந்தினர் பகுதி/என்னை நல்வழிப்படுத்திய குடுமி - இலங்கை ஜெயராஜ்என்னை நல்வழிப்படுத்திய குடுமி - இலங்கை ஜெயராஜ்
என்னை நல்வழிப்படுத்திய குடுமி - இலங்கை ஜெயராஜ்
என்னை நல்வழிப்படுத்திய குடுமி - இலங்கை ஜெயராஜ்
என்னை நல்வழிப்படுத்திய குடுமி - இலங்கை ஜெயராஜ்

* 'கம்பவாரிதி' இலங்கைஜெயராஜ், பெயர் காரணம்
சொந்த ஊர் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லுார். ஒருமுறை யாழ்ப்பாணத்தில், திருநெல்வேலி என்ற ஊரிலுள்ள பிள்ளையார் கோயிலில், 48 மணி நேரம் தொடர்ந்து கம்பராமாயண சொற்பொழிவு நிகழ்த்தினேன். அப்போது 'கம்பவாரிதி என்ற பட்டம் கொடுத்தார்கள். பல பேச்சாளர்கள் மத்தியில் என்னை அடையாளப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. நான் இலங்கையில் இருந்து வருவதால் ஊரின் அடையாளமாகவும், என் தந்தை பெயர் இலங்கைராஜா என்பதால் என் பெயருக்கு முதலெழுத்தாகவும் இலங்கை அமைந்தது.
* ஆன்மிக நாட்டம் குறித்து...
சிறு வயதிலேயே தெய்வ நம்பிக்கை அதிகம். என் கையாலேயே களிமண்ணில் பிள்ளையார் செய்து, எங்கள் ஊரில் உள்ள மரத்தடியில் சிறிய கொட்டகை அமைத்து நானே பூஜை செய்து வணங்கியது நினைவுக்கு வருகிறது. என் தாய் நோய்வாய்ப்பட்டிருந்த போது நானே விளக்கேற்றி, கும்பம் வைத்து பூஜை செய்து அவருக்கு தீர்த்தம் கொடுத்தேன். உடனே அவர் குணமடைந்து விட்டார். அவருக்கு என் மீது நம்பிக்கையும், எனக்கு கடவுள் மீது நம்பிக்கையும் இருந்தது. எனக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்திய சம்பவம் நினைவுக்கு வருகிறது. உறவினர் ஒருவர் எனக்கு ஷீரடி சாய்பாபா படம் கொடுத்தார். அதை வைத்து பூஜை செய்து வந்தேன். என் வீட்டு பணிப்பெண்ணின் சகோதரிக்கு காக்கா வலிப்பு வந்தது. அப்போது நான் சாய்பாபா படத்திற்கு முன் வைத்த தண்ணிரைத் தொட்டு அவர் மீது தெளித்த உடன் வலிப்பு நின்றுவிட்டது. அருகில் இருந்தவர்களுக்கு ஆச்சரியம். அவர்களை விட எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என் மனதில் தெய்வ நம்பிக்கையை வலுப்படுத்திய நிகழ்வில் அதுவும் ஒன்று.
* ஆன்மிக பேச்சாளராக எப்படி உருவானீர்கள்...
எங்கள் ஊரிலுள்ள அய்யனார் கோயில் பல அதிசயங்களை எனக்கு காட்டியது. படிக்கக்கூட ஆர்வம் இல்லாமல் கோவிலே கதி என்றிருப்பேன். அக்கோயிலில் சிறு பிள்ளைகளுக்கு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்குவேன். அப்போது சிறு சிறு கதைகள் கூறி, சொற்பொழிவுகள் நிகழ்த்துவேன். நான் பேச்சாளராக வருவேன் என்ற எண்ணம் எனக்கு இருந்ததில்லை. என்னுடைய விருப்பத்திற்காக நிறைய புத்தகங்களை வாசிப்பேன். அதனால் பேச விஷயம் கிடைத்தது. பக்கத்து ஊர்களிலிருந்து மக்கள் வந்து என் பேச்சை கேட்டு அவர்கள் ஊரிலும் சொற்பொழிவு நிகழ்த்தும்படி கூறுவார்கள். இப்படித்தான் பேச்சாளராக வளர்ந்தேன்.
* திருக்குறள் ஈடுபாடு குறித்து...
16 வயது முதல் கோயில்களில் சொற்பொழிவு ஆற்றிவருகிறேன். 35 வயது அடைந்தபோது எனக்குள் வெறுமை தெரிந்தது. பேசுவதற்கான விஷயம் போதாமல் இருந்தது. அதனால் மேற்கொண்டு முறைப்படி படிக்க ஆசைபட்டேன். இலக்கண வித்தகர் நம சிவாய தேசிகர் என்ற அறிஞர் என் ஊரில் இருந்தார். அவரிடம் படிக்க விரும்பினேன். அவரிடம் சென்று, நாள் சொற்பொழிவு நிகழ்த்துபவன். அறிவை வளர்த்துக்கொள்வதற்காக படிக்க வந்துள்ளேன் என்றேன். சாக்குபோக்கு சொல்லி 6 முறை திருப்பி அனுப்பிவிட்டார். படிப்பதற்கு உண்மையாகவே அக்கறையுள்ளவனாக இருக்கிறேனா என்பதை சோதிக்கவே அவர் அவ்வாறு செய்தார் என்பதை பிறகு புரிந்து கொண்டேன்.
* உங்கள் குடுமியின் ரகசியம்..
எனக்கு வித்யாகுருவாக திருச்சியைச் சேர்ந்த குடுமி வைத்த பேராசிரியர் ராதாகிருஷ்ணன் இருந்தார். 1981ல் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரை சந்தித்த பிறகு அவரை போலவே குடுமி வைக்க வேண்டும் என்ற ஆசையால் அன்றிலிருந்து இன்றுவரை நானும் குடுமி வைத்துக் கொள்கிறேன். குடுமி வைத்துக் கொண்டதால் வாழ்க்கையில் பிழைகள் செய்யக் கூடாது என்ற எண்ணம் வந்தது. மாமிசம் சாப்பிடும் குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும், குடுமி வைத்துக் கொண்டு வெளியில் அசைவம் சாப்பிட கூச்சமாக இருந்தது. இதனால் அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன். இந்த குடுமியே என்னை பல வழிகளில் நல்வழிப் படுத்தியது.
* ஒரு புறம் குற்றங்களும், மறுபுறம் பக்தியும் பெருகி வருகிறதே... அது பற்றி உங்கள் கருத்து என்ன
சமுதாயத்தில் அமைதி குறைந்துகொண்டே வருகிறது. அறிவியலின் வளர்ச்சியால் பல விஷயங்களில் நேரம் மிச்சமாகிறது. ஆனால் மக்கள் தங்களுக்கு நேரமே இருப்பதில்லை என புலம்புகின்றனர். அப்படியானால் மிச்சமான நேரம் எங்கே சென்றது. ஆசை அதிகரித்து மனதை ஓட விட்டால் நேரம் போதாமை தான் ஏற்படும். நேரம் போதாமையால் டென்ஷன் அதிகரிக்கும். டென்ஷன் அதிகரித்தால் வாழ்க்கையின் அமைதி குறையும். அந்த அமைதியை தேட முற்படுவதன் வெளிப்பாடுதான் கோயில்களில் அலை மோதும் கூட்டம்.