/வாராவாரம்/விருந்தினர் பகுதி/3 பந்துகள்... முதலில் தோல்வி இப்போது எல்லாம் வெற்றியே அசத்தும் 'ஜக்லர்' பிரசாந்த்3 பந்துகள்... முதலில் தோல்வி இப்போது எல்லாம் வெற்றியே அசத்தும் 'ஜக்லர்' பிரசாந்த்
3 பந்துகள்... முதலில் தோல்வி இப்போது எல்லாம் வெற்றியே அசத்தும் 'ஜக்லர்' பிரசாந்த்
3 பந்துகள்... முதலில் தோல்வி இப்போது எல்லாம் வெற்றியே அசத்தும் 'ஜக்லர்' பிரசாந்த்
3 பந்துகள்... முதலில் தோல்வி இப்போது எல்லாம் வெற்றியே அசத்தும் 'ஜக்லர்' பிரசாந்த்
ADDED : ஜூன் 02, 2024 11:16 AM

திறம்பட செய்யும் ஒரு கலையை தொழிலாக மாற்றி பல கலைஞர்களுக்கு முன் உதாரணமாய் ஜக்லிங் விளையாட்டில் வலம் வருகிறார் இளைஞர் பிரசாந்த்.
ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த இவர் பொறியியல் பட்டதாரி. 12ம் வகுப்பு படிக்கும் போது வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் பார்த்த ஒரு விளையாட்டான 3 பந்துகளை கண்ணிமைக்கும் நேரத்தில் காற்றில் பறக்கவிட்டு சுழற்றி சுழற்றி எப்படி விளையாட முடிகிறதென்ற கேள்வி இவரை ஜக்லிங் விளையாட்டின் பக்கம் திருப்பியிருக்கிறது. வீட்டில் இருக்கும் தக்காளி, முட்டை, வெங்காயம் போன்றவற்றை மேலே பறக்கவிட்டு பிடித்து பழகியிருக்கிறார்.
கல்லுாரியில் படிக்கும் போது பாடல், நடனம் என மாணவர்கள் திறமைகளை நிரூபித்துக் கொண்டிருக்க இவர் பந்தை பறக்க விட்டு பிடித்துள்ளார். அது வரவேற்பை பெற்றதோடு பலரின் ஊக்கமான வார்த்தைகளையும் பெற்றது. தொடர்ந்து யுடியூப் சேனலைப் பார்த்து பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். தனிமையில் அழகாக வித்தை செய்த பிரசாந்த் முதல் முறையாக மேடையில் செய்யும்போது பந்துகள் தவறி விழுந்தன. அந்த பந்துகள் விழுந்ததே இவரின் வாழ்க்கை எழுந்ததற்கான காரணம்.
மேடை பயத்தை போக்க கோயில் மேடைகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என இந்த விளையாட்டை தொடர்ந்து செய்திருக்கிறார். சம்பாதிக்கவும் வேண்டும், தனித்திறமையை கைவிடக் கூடாது என தன் கலையை தொழிலாக மாற்ற முயற்சித்து தற்போது வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஜக்லிங்-ல் இந்திய அளவில் வெகு சிலரும், தமிழகத்தில் 10க்கு குறைவானோர் மட்டுமே கைதேர்ந்தவர்கள். அதில் பிரசாந்தும் ஒருவர்.
இன்று பன்னாட்டு நிறுவனங்கள் பலவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தவிர்க்க முடியாத நபராக மாறியிருக்கிறார். பிறந்தநாள் விழாக்கள், பள்ளி, கல்லுாரி கலை நிகழ்ச்சிகள், மால் ஆக்டிவிட்டி, ஸ்டார் ஓட்டல் என பல்வேறு நிகழ்ச்சிகளில் இவரின் கலை இல்லாமல் இருப்பதே இல்லை.
3 பந்துகளை மேலே துாக்கிபோட்டு சுழற்சி முறையில் பிடிப்பது மட்டுமல்லாமல் கிரிக்கெட் பந்துகள், கத்திகள், கால்பந்து, 2 கிலோ எடை கொண்ட கண்ணாடி பந்து, ஒரு சக்கரம் கொண்ட சைக்களில் பயணித்துக் கொண்டே ஜக்லிங் என அசத்தி வருகிறார்.
பிரசாந்த் கூறியதாவது: ஜக்லிங் மனதிற்கும், உடலிற்கும் நல்லது. ஒரு பொருளை கவனம் சிதறாமல் கையாள மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். இதற்கு ஜக்லிங் உதவும். மாணவர்களுக்கு இதனை பாடமாக வைக்க வேண்டும். மாணவர்களின் புத்தி கூர்மையை அதிகப்படுத்த ஜக்லிங் பயனுள்ளதாக இருக்கும். அரசுப் பள்ளிகளில் இலவசமாக கற்றுக் கொடுக்கிறேன் என்றார்.
திறனை தெரிந்துகொள்ள தோல்வி அனுபவம் வேண்டும், தோல்வி வெற்றிபெற விடாமுயற்சி வேண்டும், விடாமுயற்சி விண்ணைத்தொட மனம் ஒத்துழைக்க வேண்டும் என வரிகளுக்கு ஏற்ப தோல்வி, விடாமுயற்சி, மன ஒத்துழைப்பு என தனக்கென தனி முத்திரை பதித்து இளைஞர்களுக்கு முன் உதாரணமான பிரசாந்த் பாராட்டிற்குரியவரே!
இவரை வாழ்த்த 84548 23969