PUBLISHED ON : ஜூலை 02, 2024 12:00 AM


தென்திசையை சமப்படுத்திட ஈஸ்வரனால் அனுப்பப்பட்ட அகத்திய மாமுனி, பொதிகை மலை வந்து தனது பணி முடித்து திரும்பச் செல்லும் போது, தோரணமலையின் அழகையும் இங்குள்ள மூலிகைகளையும் பார்த்துவிட்டு இங்கேயே சில காலம் தங்கிவிட்டார்.
தான் தங்கியிருக்கும் போது பலவித சித்த மூலிகை மருந்துகளைக் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்ததுடன்,இங்கு சித்த மடம் ஒன்றைக்கட்டி பல சித்தர்களையும் உருவாக்கினார்.தீராத தலைவலியால் அவதிப்பட்ட காசிவர்மன் என்ற மன்னனின் தலைவலியை நீக்க கபாலத்தை திறந்து அறுவை சிகிச்சையும் செய்தார்,இந்த சிகிச்சையின் போது உடனிருந்து சிறப்பாக உதவிய சீடரான தேரையர் சித்தரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு பின் அகத்தியர் தன் இருப்பிடம் திரும்பினார்.
தேரையர் சித்தர் தனது சித்த வைத்தியத்தால் இந்தப் பகுதி மக்களின் அன்பைப்பெற்று நீண்ட காலம் வாழ்ந்து இங்கேயே ஜீவ சமாதி அடைந்தார்.அகத்தியரும்,தேரையரும் தோரணமலையின் மீதுள்ள குகையில் வேலோடு கூடிய முருகனை வணங்கிவந்தனர்.கால ஒட்டத்தில் எல்லாம் மங்கிவிட்டது.


கடந்த 1930 ஆம் ஆண்டு இந்த மலைக்கு பக்கத்தில் உள்ள முத்துமாலைபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் கனவில் தோன்றிய முருகன், தான் மலையில் உள்ள சுனையில் இருப்பதாகவும் எடுத்து வழிபாடு செய்யுமாறும் கூறியிருக்கிறார்.
இதை அடுத்து கிராமத்து மக்களுடன் தோரண மலை உச்சிக்கு சென்று அங்குள்ள சுனையில் தேடிப்பார்த்த போது கனவில் வந்த முருகன் இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்தனர், முருகனை எடுத்து சீராட்டி அங்கிருந்த குகைக்குள் வைத்து வழிபாடு செய்தனர்.
வழிபட்டவர்களுக்கு வேண்டிய வரத்தை முருகன் அள்ளித்தர பக்தர்கள் கூட்டம் பெருகியது.பெருமாளுக்கு பிறகு அவரது பேரனும் பள்ளி ஆசிரியருமான ஆதிநாராயணன் கோவில் நிர்வாக பொறுப்பை ஏற்றார், தன் ஆசிரியப்பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் தோரணமலை முருகன் கோவில் வளர்ச்சிக்கே தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார்,அவர் மறைந்த பிறகு இப்போது அவரது மகன் செண்பகராமன் நிர்வாகப் பொறுப்பை ஏற்று திறம்பட செய்து வருகிறார்.
தோரணமலை முருகனைப் பார்க்க ஆரம்பத்தில் மலைப்பாதை கரடுமுரடாக இருந்தது, ஏறிச்செல்வது என்பது கடினமாக இருந்தது ஆனால் முருகனை வழிபட்டு பலன் பெற்ற பக்தர்கள் பலர் தந்த நன்கொடையால் இன்று எளிதில் மலைக்கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகளும், நடு நடுவே ஒய்வெடுக்க மண்டபமும் அமையப்பெற்றுள்ளது.

மலை மீது ஏற முடியாதவர்களுக்காக மலை அடிவாரத்திலேயே ஒரு முருகன் சன்னதியும் உள்ளது, வல்லப விநாயகர்,சரஸ்வதி,சப்த கன்னியர்,நவக்கிரகங்கள் என்று ஏாராளமான சன்னதிகளும் உள்ளது.பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் வருகின்றனர்,தைப்பூசம்,வைகாசி விசாகம்,கடைசி வெள்ளி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.நாள்தோறும் அன்னதானம் உண்டு.
செண்பகராமன் கூறும்போது தோரணமலை முருகனை தரிசிக்க தற்போது பல்வேறு வெளியூர் வெளிநாட்டு பக்தர்களும் வருகின்றனர், அப்படி வந்து பலன் பெற்றவர்கள் தாங்களாகவே முன்வந்து பல்வேறு கோவில் வளர்ச்சித்திட்டங்களுக்கு உதவி வருகின்றனர், இதன் காரணமாக ஆன்மீகப்பணியோடு பல்வேறு அறப்பணிகளும் செய்யமுடிகிறது.
மிகப்பெரிய நுாலகம் அமைத்துள்ளோம், போட்டித் தேர்வுக்கு தயராகும் மாணவர்களுக்கு இங்குள்ள புத்தகங்கள் பெரிதும் பயன்பட்டு வருகிறது, பயிற்சியும் வழங்குகிறோம் இளைஞர்கள் சீருடை பணியில் சேர்வதற்கு வேண்டிய களப்பயிற்சி வழங்குவதுடன் அவர்களுக்கு தேவையான உணவும் வழங்குகிறோம், அனைத்தும் இலவசம்.
இங்கு திருமணம் நடைபெறுவது மிக விசேஷம் என்பதால் சுற்றுவட்டாரத்தில் இருந்து மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்தும் இங்கு வந்து நிறைய பேர் திருமணம் செய்து கொள்கின்றனர், இது போல இன்னும் பல வேண்டுதல்களையும் தோரணமலை முருகன் குறைவற செய்து தருகிறார் என்று கூறிய செண்பகராமனுடன் பேசுவதற்காக எண்:9965762002.
தோரணமலை பெயர்க் காரணம்.
தோரணமலை என்பது துாரத்தில் இருந்து பார்க்கும் போது ஒரு யானை கம்பீரமாக அமர்ந்து இருப்பது போலத் தோன்றும்,யானைக்கு வாரணம் என்றும் ஒரு பெயர் உண்டு.இதன் காரணமாக வாரணமலையாக இருந்து மருவி இப்போது தோரணமலையாகி இருக்கலாம் என்பது ஒரு கருத்து. இந்த மலைக்கு தென்புறம் ராமா நதியும் வடக்கு பக்கம் ஜம்பு நதியும் தோரணம் போல சுற்றி ஓடுவதால் இதற்கு தோரணமலை என்ற பெயர் வந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
எப்படிச் செல்வது
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் இருந்து கடையத்திற்கு செல்லும் பாதையில் 15 கி.மீட்டர் துாரம் பயணித்தால் தோரணமலை கோவில் வரவேற்பு வளைவு அனைவரையும் வரவேற்கிறது.இங்கு இருந்து தோரணமலையின் அடிவாரத்திற்கு சென்றுவிடலாம். ஆயிரம் படிக்கட்டுகளில் ஏறி அகத்தியரும்,தேரையரும் வழிபட்ட முருகனை தரிசிக்கலாம்,வற்றாத சுனைகள் பல உள்ளன. படி ஏற முடியாதவர்கள் கிழே உள்ள பாலமுருகன் உள்ளீட்ட சன்னதிகளை வழிபட்டு அருள் பெறலாம்.பல்வேறு சித்தர்கள் வழிபட்ட தலம் என்பதால், தோரணமலை முருகனை வணங்கினால் சந்தோஷத்தைத் தவிர பிற எந்த தோஷமும் நெருங்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை.இந்த நம்பிக்கையுடன் வாய்ப்பிருந்தால் நீங்களும் ஒரு நடைபோய்விட்டு வரலாம்.
-எல்.முருகராஜ்