Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/சித்ரா... மித்ரா ( கோவை)/டாக்டரையே காப்பாத்த முடியாம ஜி.எச்.,ல் ஓட்டை கண்காட்சியில கலந்துக்காம அக்ரி விட்டது கோட்டை!

டாக்டரையே காப்பாத்த முடியாம ஜி.எச்.,ல் ஓட்டை கண்காட்சியில கலந்துக்காம அக்ரி விட்டது கோட்டை!

டாக்டரையே காப்பாத்த முடியாம ஜி.எச்.,ல் ஓட்டை கண்காட்சியில கலந்துக்காம அக்ரி விட்டது கோட்டை!

டாக்டரையே காப்பாத்த முடியாம ஜி.எச்.,ல் ஓட்டை கண்காட்சியில கலந்துக்காம அக்ரி விட்டது கோட்டை!

ADDED : ஜூலை 15, 2024 10:41 PM


Google News
Latest Tamil News
'கொடிசியா' ஹாலில் நடந்த 'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சிக்கு சென்றிருந்த சித்ரா, மரத்தடியில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, வந்தாள்.

முன்பதிவு செய்யுமிடத்தில் காத்திருந்த விவசாயிகள் கூட்டத்தை பார்த்து ஆச்சரியப்பட்ட மித்ரா, ''என்னக்கா... இவ்ளோ கூட்டம் இருக்கு... விவசாயம் செய்றதுக்கு இன்னமும் ஆட்கள் இருக்காங்கங்கறதை இதைப்பார்த்தே தெரிஞ்சுக்கலாம் போலிருக்கே,''

''உண்மைதான், மித்து! வெவ்வேறு டிஸ்ட்டிரிக்குல இருந்தும் வந்திருக்காங்க. கர்நாடகா, கேரளாவுல இருந்தும், ஏன்... ஒடிசாவுல இருந்து கூட வந்திருக்காங்களாம்,''.

''ஆனா, 'அக்ரி யுனிவர்சிட்டி'யில இருந்து கலந்துக்கிடலைன்னு சொன்னாங்களே....''

''ஆமாப்பா... நானும் கேள்விப்பட்டேன். ஒவ்வொரு வருஷமும், 'அக்ரி யுனிவர்சிட்டி'க்கு மட்டும் இலவசமா, 24 ஸ்டால் ஒதுக்குறது வழக்கமாம்; இந்த தடவையும் அதே மாதிரி ஒதுக்கியிருக்காங்க. இதுசம்பந்தமா, 'கொடிசியா' நிர்வாகிகள், 'அக்ரி யுனிவர்சிட்டி' அதிகாரிகளை நேரில் சந்திச்சு பேசியிருக்காங்க,''

''துவக்க விழாவுல துணைவேந்தர் கலந்துக்கிட்டாங்க. யுனிவர்சிட்டி லோகோ பயன்படுத்துறக்கு அனுமதி கொடுத்திருக்காங்க. ஆனா, ஸ்டால் போடலை. கொடிசியா தரப்புல விசாரிச்சதுக்கு, நிர்வாக காரணங்களால், ஸ்டால் போட முடியலைன்னு சொல்லியிருக்காங்க.

அக்ரி யுனிவர்சிட்டி சைடுல விசாரிச்சப்போ, 'நாங்களே எக்ஸ்போ நடத்த பிளான் பண்ணியிருக்கோம். அதனால, கொடிசியா நடத்துன கண்காட்சியில கலந்துக்கிடலைன்னு சொல்லியிருக்காங்க.

இதனால, 1.5 லட்சம் பார்வையாளர்கள் கலந்துக்கிட்ட கண்காட்சியில, வேளாண் பல்கலையோட கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள், விவசாயிகளை போயி சேராம போயிடுச்சு. இந்த விஷயத்துல, மாவட்ட நிர்வாகமும் கண்டுக்காம இருந்துடுச்சு,''

நுழைவுத்தேர்வு விவகாரம்


''வேளாண் பல்கலை முதுநிலை மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வை ரத்து செஞ்ச விவகாரத்துல, பின்னணியில ஏதோ நடந்திருக்குன்னு சொல்றாங்களே...''

''ஆமா... மித்து! தமிழக அரசோட கலந்து ஆலோசிக்காம, 'அக்ரி யுனிவர்சிட்டி' தரப்புல தன்னிச்சையா நுழைவுத்தேர்வு அறிவிப்பு வெளியிட்டதா, பேராசிரியர்கள் தரப்புல பேசுறாங்க. இந்த விஷயம் கேள்விப்பட்டு, உயர்கல்வித்துறையில இருக்கற உயரதிகாரிகள், யுனிவர்சிட்டியில இருக்கற 'முக்கியமான'வங்களை சென்னைக்கு அழைச்சு, 'செம டோஸ்' விட்டாங்களாம்.

அதனால, நுழைவுத்தேர்வை ரத்து செஞ்சிட்டாங்களாம். மறுபடியும் அடுத்த மாசம் நடத்துறதுக்கு வாய்ப்பு இருக்குதாம்,'' என்றாள்.

கல்யாண வீடியோ


''அதெல்லாம் இருக்கட்டும். கல்யாண வீடியோவை சமூக வலைதளத்துல பரப்பி விட்டிருக்காங்களே... என்னாவாம்...''

''அதுவா... விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ல 'மாவட்டத்துக்கு' பூத் ஒதுக்காததால, அவருக்கு பதவி பறிபோகப் போகுதுன்னு உடன்பிறப்புகள் நாலாப்பக்கமும் பேசிக்கிறாங்க. லோக்சபா தேர்தல்ல பா.ஜ.,வுக்கு அதிகமான ஓட்டு, சிட்டி ஏரியாவுல விழுந்ததால, அவரும் பயத்துல இருக்காராம். பதவியை தக்க வைக்கிறதுக்காக... ஏதேதோ முயற்சி பண்றாராம்...''

''ஆதரவாளர்கள் மூலமா சிட்டி முழுக்க, போஸ்டர் ஒட்ட வைக்கிறாரு. இப்போ, முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில நடந்த கல்யாண வீடியோவை சமூக வலைதளத்துல பரப்பி, அந்தக்காலத்து ஆளுங்கன்னு கெத்து காட்டுறாராம். பதவியை காப்பத்துறதுக்கு இப்படியெல்லாம் செய்றாருன்னு உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க,''

வேவு பார்க்கும் ஏஜன்சி


''உளவுத்துறை மூலமா இதெல்லாம் தெரிஞ்சுதான், ஆளுங்கட்சிக்காரங்க செயல்பாடுகளை தனியார் ஏஜன்சிகாரங்க கண்காணிச்சு, தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்புறதா சொல்றாங்களே...''

''இதையெல்லாம்... உடன்பிறப்புகள் கேட்டு கேட்டு புளிச்சுப் போச்சுன்னு சொல்றாங்க. எலக்சன் சமயத்துல களையெடுக்கப் போறோம்னு, தலைமையில இருந்து ஸ்டேட்மென்ட் வருது. கட்சி நிர்வாகிகள் மேல கம்ப்ளைன்ட் போனா... துருவித் துருவி விசாரிக்கிறாங்களாம்,''

''அப்புறம் தகுதியில்லாதவங்கள்ட்ட பொறுப்பு கொடுத்துட்டு, ஏன் ஓட்டு குறைஞ்சுன்னு மறுபடியும் 'என்கொயரி' பண்றாங்க. தீர விசாரிச்சு தகுதியானங்கள்ட்ட பொறுப்பு கொடுக்கணும்னு உடன்பிறப்புகள் சொல்றாங்க. இப்போ எடுக்குற சர்வே ரிப்போர்ட் தலைமைக்கு போயி சேரணும்; தில்லா களையெடுக்கனும்னு நினைக்கிறாங்க,'' என்றபடி, அடுத்த ஹாலுக்குள் நுழைந்தாள் மித்ரா.

கைமாறுமோ பொறுப்பு


''அதெல்லாம் இருக்கட்டும். பொறுப்பு மினிஸ்டர் பதவி கை மாறப் போகுதுன்னு சொல்றாங்களே... உண்மையா...''

''ஆளுங்கட்சி தரப்புல அப்படித்தான் பேசிக்கிறாங்க. லோக்சபா தேர்தல்ல தொகுதியே வேணாம்; கூட்டணி கட்சிக்கு கொடுக்கலாம்னு ஒதுங்குனாரு. 2026 எலக்சன்ல மறுபடியும் எதிர்க்கட்சிக்காரங்களை ஜெயிக்க விடக்கூடாதுன்னு, தலைமையில நெனைக்கிறாங்களாம். அதனால, ரெண்டெழுத்து அமைச்சருக்கு பொறுப்பு கை மாறப்போகுதுன்னு சொல்றாங்க; அவரு சில சமயம் ஜாலியா பேசுவாரு; கோபத்துல பேசுனா, ஆபீசர்ஸ் காலியாகிடுவாங்க. பல ஆபீசர்ஸ் இன்னமும் இலைக்கட்சி பிரமுகர்களுக்கு விசுவாசமா இருக்கறதுனால, அவுங்களுக்கு சுளுக்கு எடுக்கறதுக்கு ஏத்த மாதிரி, பொறுப்பு வழங்கப்போறதா பேசிக்கிறாங்க,''

டாக்டரை காப்பாற்ற முடியலை


இருவரும் பேசிக்கொண்டே, 'கொடிசியா' வளாகத்தில் இருந்து வெளியே வந்தனர். ஸ்கூட்டரை சித்ரா, ஸ்டார்ட் செய்தாள்.

பின்இருக்கையில் அமர்ந்த மித்ரா, அவ்வழியாக சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை பார்த்ததும், ''அக்கா, ''கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல அறுவை சிகிச்சை பிரிவுல டாக்டரா வேலைபார்த்த ஒருத்தரு, புரையேறி, ட்ரீட்மென்ட்டுக்கு வந்தாரு. அவருக்கு வைத்தியம் பார்த்துட்டு, பிரைவேட்டுக்கு அனுப்பிட்டாங்க; அந்த டாக்டர் இறந்துட்டாரு. கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல வேலை பார்த்து, ஏகப்பட்ட ஜனங்களுக்கு அறுவை சிகிச்சை செஞ்ச ஒரு டாக்டரை, அதே ஹாஸ்பிடல்ல காப்பாத்தாம கைவிட்டுட்டாங்க,''

''கவர்மென்ட் ஹாஸ்பிடலுக்கு சென்ட்ரல், ஸ்டேட் கவர்மென்ட் சைடுல இருந்து கோடிக்கணக்குல பணம் ஒதுக்குறாங்க; அதிநவீன மெஷின்லாம் வாங்கிக் கொடுத்துருக்காங்க. ஆனா, மக்களுக்கு ட்ரீட்மென்ட் சரியா கெடைக்கறதில்லைன்னு, சக டாக்டர்ஸ் புலம்பிட்டு இருக்காங்க,'' என்றபடி, ஹோப் காலேஜ் ஸ்டாப்பில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, பேக்கரிக்குள் நுழைந்தாள்.

டிரான்ஸ்பர் பின்னணி


காளான் பப்ஸ், காபி ஆர்டர் கொடுத்த மித்ரா, ''ஒரே நாள்ல மாவட்டம் முழுவதும் இருக்கற தாசில்தார்களை மாத்திட்டாங்களாமே... என்ன நடந்துச்சு...'' என, கேட்டாள்.

''மித்து! போன மாச கடைசில கலெக்டர் ஆபீசுல விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்துச்சு. பேரூர் தாலுகாவுல வழித்தடத்தை ஆக்கிரமிச்சு ஒருத்தர் கேட் போட்டிருக்காரு; ஆக்கிரமிப்பை அகற்றிக் கொடுக்கணும்னு கலெக்டர்கிட்ட, விவசாயிகள் நேருக்கு நேரா சொன்னாங்க.

பேரூர் தாசில்தார்கிட்ட, கலெக்டர் விளக்கம் கேட்டாரு. அதுக்கு, 'கேட் வச்சவங்க ஆட்சேபம் தெரிவிச்சு கடிதம் கொடுத்திருக்கிறார்'ன்னு, பதில் சொல்லியிருக்காரு தாசில்தார். விஷயம் புரியாம கலெக்டர் அந்த சப்ஜெக்ட்டை விட்டுட்டார்,''

''கொஞ்ச நேரம் கழிச்சு, மறுபடியும் அதே பிரச்னையை வேறொரு விவசாயி கெளப்புனாரு. சுதாரிச்ச கலெக்டர், தாசில்தாரை கேள்வியால துளைச்சு எடுத்தார். அப்போ, 'அரசுக்கு சொந்தமான இடத்துல கேட் போடுறதுக்கு அவருக்கு யாரு உரிமை கொடுத்தது; அவர்கிட்ட நீங்க ஏன் கடிதம் வாங்குனீங்க'ன்னு கேட்டிருக்காரு. ஒரு வாரத்துக்குள்ள ரிப்போர்ட் கொடுக்கணும்னு ஆர்டர் போட்டாரு. அதை கண்டுக்காம விட்டுட்டாங்க.

''சம்பந்தப்பட்ட இடத்துக்கு விவசாயிகள் திரண்டு போயி, ஆக்கிரமிப்பு செஞ்சு அமைத்திருந்த கேட்டை பிடுங்கி எறிஞ்சிட்டாங்க. இதுக்குப்பின்னாடி தான் விஷயம் கேள்விப்பட்டு, தாசில்தார்கள் ஒவ்வொருத்தரின் பின்புலத்தை அலசி, வெவ்வேறு இடங்களுக்கு துாக்கியடிச்சிட்டாங்க. அசால்ட்டா இருந்த தாசில்தாரை, முக்கியத்துவம் இல்லாத இடத்துக்கு மாத்திட்டாங்க,''

பாலியல் விவகாரம்


''வடக்கு தாலுகா டிரைவர் விவகாரம் என்னாச்சு...''

''பாலியல் விவகாரத்துல சிக்குன ரெண்டு பேர்ல ஒருத்தரை, பொள்ளாச்சிக்கு மாத்துனாங்க. டிரைவரை காப்பாத்துறக்கு உயரதிகாரிகள் பலரும் முயற்சி செஞ்சிருக்காங்க. வில்லங்கம் பெருசாகிட்டே இருக்கும்னு சொன்னதும், அந்த டிரைவரை பேரூர் தாலுகாவுக்கு மாத்திட்டாங்க.

வடக்குல வேலைபார்க்குற லேடி ஸ்டாப்ஸ், இனிப்பு கொடுத்து கொண்டாடியிருக்காங்க. பணி செய்ற இடத்துல பாதுகாப்பு இருக்கணும்னு, விசாகா கமிட்டி அமைக்கச் சொல்றாங்க. நம்மூர்ல ஆக்சன் எடுக்கறதுக்கு இவ்ளோ நாள் லேட் பண்ணிட்டாங்கன்னு, லேடி ஸ்டாப்ஸ் சொன்னாங்க,''

''இதே பேரூர் தாலுகாவுல இன்னொரு கொடுமை நடக்குது. சேவல் சண்டை, சூதாட்டம் நடக்குற ஏரியாவை பத்தி, யாராச்சும் போலீசுக்கு தகவல் சொன்னால், சம்பந்தப்பட்டவங்க பெயர், மொபைல் போன் எண்ணை, சூதாட்டம் நடத்துறவங்களுக்கே போலீஸ்காரங்க சொல்லிடுறாங்களாம்.

அவுங்க புகார் சொன்னவங்களை கூப்பிட்டு மிரட்டுறாங்களாம். புகார் கொடுக்கறவங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருக்குதாம்,'' என்றபடி, மேஜைக்கு வந்த காளான் பப்ஸை சாப்பிட ஆரம்பித்தாள் மித்ரா.

கவுன்சிலருடன் கூட்டணி


காபியை உறிஞ்சிய சித்ரா, ''கார்ப்பரேஷன் விவகாரம் எதுவுமே சொல்லலையே...'' என, கொக்கி போட்டாள்.

''அக்கா... அந்த டிபார்ட்மென்ட்டை பத்தி பேச ஆரம்பிச்சா... நாள் முழுக்க பேசலாம்; பக்கம் பக்கமா எழுதலாம்; அவ்ளோ விஷயம் இருக்கு. இப்போ கூட... பூ மார்க்கெட் விவகாரம் பத்தி எரியுது. புது மார்க்கெட் வளாகத்துல, 34 கடை கூடுதலா கட்டியிருக்காங்க. கவர்மென்ட் ரூல்ஸ்படி, ஏலம் விடணும்.

ஆளுங்கட்சி கவுன்சிலரும், இன்ஜினியர் ஒருத்தரும் கைகோர்த்து, ஒருத்தருக்கு லீசுக்கு கொடுக்குறதுக்கு பிளான் போடுறாங்க. இப்படி செஞ்சா, கார்ப்பரேஷனுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

அதைப்பத்தி கவலைப்படாம ரெண்டு பேரும் கூட்டணி அமைச்சு, கல்லா கட்டுற வேலையில இருக்காங்களாம்,'' என்றபடி, பேக்கரியில் இருந்து வெளியேறினாள் மித்ரா.

ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us