Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/சித்ரா... மித்ரா ( கோவை)/மேயர் பதவி; ஆளுங்கட்சி போடுது புதுக்கணக்கு பதவிக்காக கம்யூ., கட்சியில நடக்குது ரகசிய 'மூவ்'

மேயர் பதவி; ஆளுங்கட்சி போடுது புதுக்கணக்கு பதவிக்காக கம்யூ., கட்சியில நடக்குது ரகசிய 'மூவ்'

மேயர் பதவி; ஆளுங்கட்சி போடுது புதுக்கணக்கு பதவிக்காக கம்யூ., கட்சியில நடக்குது ரகசிய 'மூவ்'

மேயர் பதவி; ஆளுங்கட்சி போடுது புதுக்கணக்கு பதவிக்காக கம்யூ., கட்சியில நடக்குது ரகசிய 'மூவ்'

ADDED : ஜூலை 29, 2024 10:12 PM


Google News
Latest Tamil News
பணி நிமித்தமாக சித்ராவும், மித்ராவும் டவுன்ஹால் கார்ப்பரேஷன் ஆபீசுக்கு வந்திருந்தனர்.

'அம்மா' உணவகம் அருகே ஸ்கூட்டரை ஓரங்கட்டிய மித்ரா, ''என்னக்கா... குப்பை கிடங்குல தீயை அணைச்சவங்களுக்கு உணவு கொடுத்ததுக்கு ரூ.27.52 லட்சம் செலவழிச்ச விவகாரம் ஸ்டேட் முழுக்க புகைஞ்சு கார்ப்பரேஷனுக்கு அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுத்திருச்சே...'' என, கிளற ஆரம்பித்தாள்.

''மித்து! இதுமாதிரி ஏகப்பட்ட தடவை குப்பை கிடங்கு தீப்பிடிச்சிருக்கு. வழக்கமா ஸ்பான்சர் மூலமா சாப்பாடு ஏற்பாடு செய்வாங்களாம்; சில சமயங்கள்ல கான்ட்ராக்டர்ஸ் செலவை ஏத்துக்குவாங்களாம். இந்த தடவை யாரோ 'பில்' எழுதி, பணம் எடுத்திருக்காங்க. கோப்புகளை கமிஷனர் மறுஆய்வுக்கு உட்படுத்துனா... உண்மையை கண்டுபிடிக்கலாம்னு சொல்றாங்க. யாராச்சும் தப்பு செஞ்சிருந்தா, அவுங்க மேல நடவடிக்கை எடுக்கணும். அதை விட்டுட்டு, லட்சக்கணக்குல செலவு செஞ்சதை நியாயப்படுத்தி, 'முட்டுக்கொடுக்குற' வேலையை சிலர் செய்றாங்களாம்,''

மண்ணுல கரன்சி ''இதெல்லாம்... கார்ப்பரேஷன் ஆபீசர்கள் எப்படியெல்லாம் சம்பாதிக்கிறாங்கங்கிறதுக்கு நல்ல உதாரணமாயிருச்சு. அதே இன்ஜினியர்கள், மண்ணுல எப்படி காசு பாத்திருக்காங்கன்னு ஒரு தகவல் இப்போ வெளிச்சத்துக்கு வந்துருக்கு...''


''ஹைவேஸ்காரங்க... திருச்சி ரோட்டுல, புதுசா கட்டுன பாலத்துக்குக் கீழ கட்டியிருக்கற மையத்தடுப்பு குழியில மலை மலையா மண்ணு குவிஞ்சிருந்துச்சு. அந்த இடங்கள்ல பூங்கா அமைக்கிறோம்னு சொல்லி, தேசிய நெடுஞ்சாலைத்துறைட்ட கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் பர்மிஷன் வாங்கியிருக்காங்க; அங்க இருந்த மண்ணை லோடு லோடா தோண்டி எடுத்து வித்துட்டாங்க. ஒரு வருஷமாச்சு; பூங்கா அமைக்கலை; கமிஷனர் மாறுனதும் திட்டத்தையே கைவிட்டுட்டாங்க,''

''பல கோடி ரூபா விலை போகிற மண்ணை, பல நுாறு லாரி லோடுகள்ல எடுத்துட்டுப் போயி வித்திருக்காங்க. அந்த இடங்கள்ல செம்மண் கொட்டி, பூங்கா அமைக்கிறோம்னு சொன்னவுங்க இப்ப வரைக்கும் எதுவும் பண்ணாம, இப்போ குப்பையைக் கொட்ட விட்டு வேடிக்கை பார்க்கிறாங்க. இப்போ ஸ்டேட் ஹைவேஸ்க்கு வந்துருக்கிற ஆபீசரே, இதுக்கு முன்னாடி என்.எச்.,ல இருந்தாராம். அவரும், கார்ப்பரேஷன் இன்ஜினியர்கள் சில பேரும் சேர்ந்தே மண்ணை வித்து 'பங்கு' போட்டுருக்கிறதாப் பேசிக்கிறாங்க...''

தி.மு.க., கணக்கு ''மேயர் பதவியை கைப்பத்துறதுக்கு கார்ப்பரேஷன் கவுன்சிலர்ஸ் முட்டி மோதுறாங்களாமே...''


''அதுவா... உளவுத்துறை மூலமா சிலரது செயல்பாடுகளை 'ரிப்போர்ட்'டா கேட்டு வாங்கியிருக்காங்களாம். பல ரூபத்துல ஆளுக்கு ஒரு சேனலைப் பிடிச்சு 'மூவ்' பண்ணிட்டு இருக்காங்க,''

''புதுசா நியமிக்கப் போற மேயர், எல்லோரிடமும் தன்மையா, இணக்கமா நடக்கறவங்களா இருக்கணும். கார்ப்பரேஷன் - மாவட்ட நிர்வாகம் - அரசு - எம்.பி., - கட்சி நிர்வாகிகள்ன்னு அனைத்து தரப்பையும் அரவணைச்சு போறவங்களா தேர்வு செய்யணும்னு கட்சி தலைமையில நினைக்கிறாங்களாம். மேயர் - எம்.பி., - கட்சி நிர்வாகிகள் கைகோர்த்து, கவர்மென்ட் ஆபீசர்ஸ்கள்ட்ட பேசி, மக்களுக்கு திட்டங்களை கொண்டு போனா, 2026 அசெம்ப்ளி எலக்சன்ல கூட்டணி இல்லாம ஈசியா ஜெயிக்கலாம்னு தி.மு.க., தரப்புல கணக்கு போடுறாங்களாம். அதனால தான், மேயர் வேட்பாளரை அறிவிக்கறதுல அவசரம் காட்டாம நிதானமா இருக்கறதா உடன்பிறப்புகள் சொல்றாங்க,''

அதிகாரிக்கு நேர்ந்த அநியாயம்

சுண்டல் வாங்கிய மித்ரா, இரண்டு டீ ஆர்டர் செய்து விட்டு, ஆபீசர் ஒருவரிடம் மொபைல் போனில் பேசினாள். டீ சாப்பிட்டு விட்டு இருவரும் நடந்தபடி, கோனியம்மன் கோவிலுக்கு வந்தனர்.

செயல் அலுவலர் அறையை பார்த்த சித்ரா, ''கோனியம்மன் கோவில்ல இருந்த லேடி ஆபீசருக்கும், அறங்காவலர் குழுவுக்கும் ஏழாம் பொருத்தமா இருந்திருக்கு. உடனே, இந்து இயக்கங்களுக்கு ஆதரவா இருக்காங்கன்னு பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, அண்ணாமலையோடு சேர்ந்து இருக்கற மாதிரி, 'போட்டோ மார்பிங்' செஞ்சு, கட்சி தலைமைக்கு அனுப்பியிருக்காங்க,''

''இதைப்பத்தி துறை ரீதியா விசாரிக்காம, கட்சிக்காரங்களை 'அட்ஜஸ்ட்' பண்ணாத ஆபீசரை மாத்திடுங்கன்னு சொல்லிட்டாங்களாம். அறநிலையத்துறை உயரதிகாரிகளும், என்ன நடந்துச்சுன்னு என்கொயரி செய்யாம, கட்சிக்காரங்க சொல்லுக்கு கட்டுப்பட்டு, லேடி ஆபீசரை வேறிடத்துக்கு துாக்கியடிச்சிட்டாங்களாம்,''

அமைச்சு பணியாளர்கள் அடாவடி சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த மித்ரா, காவலுக்கு நின்றிருந்த போலீசாரை பார்த்ததும், ''அக்கா... போலீஸ் தரப்புல ஒரு தகவல் சொன்னாங்க... சென்ட்ரல் கவர்மென்ட் எக்சாம் எழுதி, பணிக்குச் சென்ற இளைஞர்களுக்கு, அவுங்க இதுக்கு முன்னாடி வேலை பார்த்த இடங்கள்ல இருந்து நன்னடத்தை சான்றிதழ் அனுப்பனும். சென்ட்ரல் கவர்மென்ட் டிபார்ட்மென்ட்டுல இருந்து, புதுசா வேலைக்கு சேர்ந்த இளைஞர்கள் இதுக்கு முன்னாடி வேலை பார்த்த நிறுவனங்களை கேட்டு தெரிஞ்சு, கலெக்டர் ஆபீசுக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்காங்க,''


''கலெக்டர் ஆபீசுல இருந்து, போலீஸ் கமிஷனர் ஆபீசுக்கும், எஸ்.பி., ஆபீசுக்கும் அனுப்பியிருக்காங்க. எஸ்.பி., ஆபீசுல இருக்கற அமைச்சுப் பணியாளர்கள், கலெக்டர் ஆபீசுல இருந்து அனுப்புன கடிதங்களை கெடப்புல போட்டுட்டாங்களாம். சம்பந்தப்பட்ட இளைஞர்களே நேரடியா வந்து கேட்டா, ஸ்டேஷனுக்கு அனுப்பியிருக்கோம்னு சொல்றாங்களாம்; ஸ்டேஷனுக்கு போனா... எஸ்.பி., ஆபீசுல இருந்து வரவே இல்லைன்னு சொல்றாங்களாம்... ஒரு சர்ட்டிபிகேட் கொடுக்கறதுக்கு எஸ்.பி., ஆபீசுல இருக்குற அமைச்சுப் பணியாளர்கள் இளைஞர்களை அலைய விடுறாங்க. இதனால, இளைஞர்கள் மத்தியில டி.எம்.கே., கவர்மென்ட் மேல கெட்ட பெயர் வருதுன்னு, கட்சி ஆபீசுல உடன்பிறப்புகள் பேசிக்கிட்டாங்க. இதுசம்பந்தமா, போலீஸ்காரங்கள்ட்ட கேட்டா, அதையேன் கேக்குறீங்க, நாங்க சம்பந்தப்பட்ட பைல்களை கூட ஒழுங்கா டீல் பண்ண மாட்டேங்கிறாங்கன்னு கண்ணீர் விடாத குறையா புலம்புனாங்க...,''

கார்ப்பரேஷன் வசூல் ராணி இருவரும் பேசிக் கொண்டே மீண்டும் கார்ப்பரேஷன் ஆபீசுக்கு வந்தனர். மண்டல தலைவர் ஒருவரின் காரை பார்த்த சித்ரா, ''மித்து, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தயவுல, அந்த லேடி கவுன்சிலரானாங்க; வசதி வாய்ப்பே இல்லாம இருந்தாங்க. கவுன்சிலர் பதவியேற்கறதுக்கு கூட, சுந்தராபுரம் ஏரியாவுல இருந்து மினி பஸ்சுல வந்திருக்காங்க. இப்போ, என்னடான்னா... 'இன்னோவா கிரிஸ்டா' கார்ல ஜாலியா வலம் வர்றாங்க...''


''எந்த வேலை செஞ்சாலும் கமிஷன் கொடுத்தாகணும்னு ஆர்டர் போட்டிருக்காங்க. கார்ப்பரேஷனின் டாப் வசூல் ராணி இவுங்க தானாம். சீனியர்களை தோற்கடிக்க மாதிரி, வசூல்ல பட்டய கிளப்புறாங்களாம். இவுங்க ஏரியாவுல இருக்கற அடிப்படை பிரச்னைகளை சமூக ஆர்வலர் ஒருத்தரு பட்டியலிட்டு, அவுங்கள்ட்ட போயி சொல்லியிருக்காரு,''

''அதைக்கேட்டு டென்ஷனான வசூல் ராணி, 'இங்க நான் கவுன்சிலரா; நீ கவுன்சிலரா... என்ன வேலை செய்யணும்னு எனக்குத் தெரியும்; வேலைய பார்த்துட்டு போங்கன்னு அடாவடியா பேசி அனுப்பியிருக்காங்க. மனம் நொந்துபோன சமூக ஆர்வலர், கலெக்டர் ஆபீசுக்கு போயி, சம்பந்தப்பட்ட வசூல் ராணி மீதும், அவரது கணவர் மீதும் ஆக்சன் எடுக்கணும்னு எழுத்துப்பூர்வமாகவே கலெக்டரிடம் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காரு. கலெக்டரிடம் இருந்து கார்ப்பரேஷன் கமிஷனருக்கு அந்த கம்ப்ளைன்ட் வரும். கவர்மென்ட் கவனத்துக்கு கொண்டு போனாருன்னா, வசூல் ராணி பதவியை பறிக்க வேண்டிய நிலைமை வரும்னு ஆளுங்கட்சி கவுன்சிலர்ஸ் பேசிக்கிறாங்க,''

நர்சுகளின் மனக்கஷ்டம் கார்ப்பரேஷன் மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்த செவிலியர்கள் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அதை கவனித்த மித்ரா, ''ஏம்ப்பா... என்னாச்சு... செவிலியர்களின் சேவை கடவுளுக்கு சமம்னு சொல்வாங்க, அவுங்க கண்ணை கசக்கிட்டு இருக்காங்க. அந்தளவுக்கு கார்ப்பரேஷன்ல இம்சை பண்றாங்களா...''


''ஆமாப்பா... உண்மைதான்! ஹெல்த் டிபார்ட்மென்ட்டுல இருக்கற ஒரு ஆபீசர், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு போனா... ஏடா கூடாமா பேசுறாராம்; டாக்டர், நர்சுன்னு பார்க்காம ஒருமையில திட்டுறாராம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, செவிலியர்கள் மீட்டிங் நடந்துருக்கு. உடல் நிலை சம்பந்தமா சில செவிலியர்கள் சொல்லியிருக்காங்க. அதுக்கு, 'நீங்க செத்து பாடையில போனாலும் அதைப்பத்தி எனக்கு கவலை இல்லைன்னு சொல்லியிருக்காரு. நம்மூரு மரியாதைக்கு பேர் போன ஊரு. சின்ன பசங்களா இருந்தாலும் 'ங்க' போட்டு தான் பேசுவாங்க. அப்படிப்பட்ட ஊர்ல இப்படிப்பட்ட அதிகாரியான்னு செவிலியர்கள் புலம்புறாங்க. ஹெல்த் டிபார்ட்மென்ட் மாண்புமிகுவை சந்திக்கறதுக்கு திட்டமிட்டிருக்காங்களாம்,''

அதைக்கேட்டுக் கொண்டே ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த மித்ரா, '' கோர்ட்டுல விசாரணையில இருக்கற 'கேஸ் கட்டு'களை ஒழிச்சு வச்சு, ஒரு ஊழியர் கரன்சி அள்ளுறாராமே,,,'' என, 'ரூட்' மாறினாள்.

''ஆமாப்பா... நானும் கேள்விப்பட்டேன். நம்மூர்ல இருக்கற ஒரு சப்-கோர்ட்ல, சிவில் கேஸ் சம்பந்தமா 'ஜட்ஜ்மென்ட்' அளிக்கப்பட்ட வழக்கின் கட்டுக்களை, பெண் ஊழியர் ஒருத்தர், மற்ற கேஸ் கட்டுக்குள்ள வைச்சு ஒழிச்சு வைக்கிறாராம். வக்கீல் வந்து கேட்கும் போது, கட்டு 'மிஸ்' ஆயிடுச்சுன்னு சொல்லி, தேடி பார்க்கிறதுக்கு பணம் கறக்கிறாராம்.அவர் செய்ற தில்லுமுல்லு தெரிய வந்ததும், இது பத்தி ஜட்ஜ் கவனத்துக்கு சக ஊழியர்கள் புகார் சொல்லியிருக்காங்களாம்,''

''அப்படியா...'' என கேட்டபடி, வீட்டை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் மித்ரா.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us