Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/அவியல்/நாங்க என்ன சொல்றோம்னா...: எல் 2: எம்புரான்(மலையாளம்)

நாங்க என்ன சொல்றோம்னா...: எல் 2: எம்புரான்(மலையாளம்)

நாங்க என்ன சொல்றோம்னா...: எல் 2: எம்புரான்(மலையாளம்)

நாங்க என்ன சொல்றோம்னா...: எல் 2: எம்புரான்(மலையாளம்)

PUBLISHED ON : மார் 30, 2025


Google News
Latest Tamil News
முதல் பாகத்தின் இடுப்புயரம் தாண்டாத இரண்டாம் பாகம்!

'இன்டர்போல்' கண்ணில் விரல்விட்டு ஆட்டும் குரேஷி ஆபிரஹாம், தன் பெயரை ஸ்டீபன் நெடும்பள்ளியாக கொண்டு கேரள அரசியலை தீர்மானிக்கிறார். அரசியலில் தீயசக்தியாக நுழையும் கட்சியுடன் முதல்வர் கைகோர்ப்பதை அறியும் குரேஷி, அதன்பின் ஆடும் அரசியல் ஆட்டம் என்ன?

அரசியல் கட்சிகளது நிதி மூலதனத்தின் வேர் படரும் இடங்கள்; எதிரிகளின் திரை மறைவு கைகுலுக்கல் என, அரசியலின் நிழல் உலகத்தை சுவாரஸ்யமாக சொல்லியது முதல் பாகம்; இதில், 'மத அரசியல் செய்யும் கட்சியுடன் கள்ளக் கூட்டணி வைக்கும் ஆளுங்கட்சி' எனும் உப்பு சப்பில்லாத களம்!

தற்போதைய ஈராக்கில் ஒரு சம்பவம், 2002ம் ஆண்டு குஜராத்தில் ஒரு சம்பவம் என ஏதேதோ காண்பித்து, முதல் 50 நிமிடங்களை தின்று செரிக்கிறது திரைக்கதை. மோகன்லால் வந்ததும் தடம் மாறும் என்று எதிர்பார்த்தால் அதன்பிறகு தான் மொத்தமாக திரைக்கதை தடம் புரள்கிறது!

சாந்தமான பாவங்களால் குரேஷி மற்றும் ஸ்டீபனை மோகன்லால் வடித்த விதம் மனதில் நங்கூரமாக அமர்கிறது. முந்தைய பாகத்து பாத்திரங்கள் இதில் அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்திருந்தாலும், பழையதின் தாக்கம் இதில் இல்லை. மோகன்லாலும், பிருத்விராஜும் ஒரே கத்தியை தங்களுக்குள் மாற்றி மாற்றி துாக்கிப்போட்டு பிடித்து சண்டை செய்வது '90ஸ்'தனமாக இருக்கிறது!

துாய்மை, நேர்மை, உண்மை ஆகியவற்றின் அர்த்தங்கள் மாறிவிட்ட இன்றைய சூழலில், 'அரசியல் யுத்தமானது தீமைக்கும் - அதீத தீமைக்கும் இடையில்தான் நிகழும்' என்பதை அதற்குரிய நியாயங்கள் இன்றி சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிருத்விராஜ் சுகுமாரன்.

திரையை நிரப்பிய அளவிற்கு கதையிலும் மோகன்லாலை பயன்படுத்தியிருந்தால் ஜெயித்திருக்கலாம்.

ஆக...

இது மலையாள கங்குவா!




      Our Apps Available On




      Dinamalar

      Follow us