ஜாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடத்தப்படும் : லோக்சபாவில் பிரணாப் உறுதி
ஜாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடத்தப்படும் : லோக்சபாவில் பிரணாப் உறுதி
ஜாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடத்தப்படும் : லோக்சபாவில் பிரணாப் உறுதி
ADDED : ஆக 11, 2011 11:01 PM
புதுடில்லி: ''ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நிச்சயம் அமல்படுத்தப்படும்,'' என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று லோக்சபாவில் உறுதிபட தெரிவித்தார்.
லோக்சபா நேற்று கூடியதும், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் எழுந்து, ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பிரச்னையை எழுப்பினார்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என, மத்திய அரசு உறுதியளித்துவிட்டு, தற்போது தாமதப்படுத்தி வருகிறது என்றும் குற்றம் சாட்டினார். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் ஒருமித்த கருத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.அவரைத் தொடர்ந்து, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் பேசுகையில், '' ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துவிட்டு, அமல்படுத்துவதற்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் தயக்குவது ஏன்?'' என்று கேள்வி எழுப்பினார்.பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கோபிநாத் முண்டே பேசுகையில்,''ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகள் நடத்துவதற்கு அதிகாரம் இல்லை,'' என்றார்.இதற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது:ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை அமல்படுத்துவதில் சில பிரச்னைகள் உள்ளன. இருப்பினும், தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைப்பாளர் சரத் யாதவ் தெரிவித்த ஆலோசனைகள், உள்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு, அவர் விரும்பிய வடிவத்தில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நிச்சயம் அமல்படுத்தப்படும். இதற்கு முன்பாக, இதிலுள்ள இடையூறுகள் களையப்படும். ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து உறுப்பினர்கள் தெரிவித்த ஆலோசனைகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.