Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கூடங்குளம் மின் உற்பத்தி தள்ளிப்போகிறது : ஊரை காலி செய்த ஊழியர்களால் பணிகள் பாதிப்பு

கூடங்குளம் மின் உற்பத்தி தள்ளிப்போகிறது : ஊரை காலி செய்த ஊழியர்களால் பணிகள் பாதிப்பு

கூடங்குளம் மின் உற்பத்தி தள்ளிப்போகிறது : ஊரை காலி செய்த ஊழியர்களால் பணிகள் பாதிப்பு

கூடங்குளம் மின் உற்பத்தி தள்ளிப்போகிறது : ஊரை காலி செய்த ஊழியர்களால் பணிகள் பாதிப்பு

ADDED : செப் 29, 2011 09:46 PM


Google News
Latest Tamil News

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தால், பயந்து போன ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு திரும்பி விட்டதால், அணுமின் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், வரும் பிப்ரவரி மாதம் தான், மின் உற்பத்தியை துவங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலைய பணி, 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கட்டுமான பணிகளும், தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தும் பணிகளும், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அக்டோபரில், மின் உற்பத்தியை துவங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அணு உலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், அணு மின் நிலையத்திற்கு வாகனங்கள் வரமுடியாதபடி தடை ஏற்படுத்தினர். இதனால், தளவாடங்கள், கட்டுமான பொருட்கள் வருவது தடைபட்டு, மின் உற்பத்தி துவக்க தேதி, அக்டோபரிலிருந்து, டிசம்பருக்கு தள்ளிப் போனது.

பற்றாக்குறை : இதற்கிடையில், அணு மின் நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால், வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து, 5,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது போராட்டத்திற்கு பயந்து, 3,000 பேர், தங்கள் சொந்த ஊருக்குச் சென்று விட்டனர். எனவே, நிலைமையை சமாளிக்க, கூடுதல் ஊழியர்களை புதிதாக வேலைக்கு சேர்க்கும் முயற்சியில், கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பணியாளர் பற்றாக்குறை மற்றும் தளவாட பொருட்கள் வருகை பாதிப்பால், 15 நாட்களுக்கும் மேலாக கூடங்குளத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மின் உற்பத்தி பிப்ரவரியில் தான் : அணுமின் கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, ''அக்டோபரில் திட்டமிட்ட மின் உற்பத்தி, போராட்டங்களால், டிசம்பருக்கு தள்ளிப் போயுள்ளது. ஆனால், தற்போதுள்ள ஊழியர் பற்றாக்குறையால், ஜனவரி அல்லது பிப்ரவரியில் தான், பணிகள் முடிந்து மின் உற்பத்தி துவங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். அடுத்த கட்டமாக, மீண்டும் கூடங்குளத்தை சுற்றிய கிராம மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடத்த உள்ளோம்,'' என்றார்.

இதுகுறித்து, தமிழக மின்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ''கூடங்குளத்திலிருந்து, டிசம்பரில் மின்சாரம் கிடைக்கும் என நினைத்தோம். ஆனால், ஜனவரிக்கு பின்னர்தான் மின் உற்பத்தி துவங்கும் என்பதால், தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டை கூடுதலாக சமாளிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

ஏற்கனவே, இரண்டு மணி நேரம் மின் தடை உள்ள நிலையில், சில நாட்களாக, காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்துள்ளது. எதிர்பார்க்கப்பட்ட கூடங்குளம் மின் உற்பத்தியும் தள்ளிப்போவதால், மின் பிரச்னையை சமாளிப்பதில், அரசுக்கு கடும் சிரமம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

மிரட்டலால் பயந்து ஓடிய ஊழியர்கள் : கூடங்குளம் மின் நிலைய கட்டுமான பணிகளில், ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தப்பணி செய்து வருகின்றன. இவற்றில், 5,000 தொழிலாளர்கள் வரை பணிபுரிந்தனர். இவர்கள் அனைவரும், கூடங்குளத்தை சுற்றி இடிந்தகரை, செட்டிகுளம், கூத்தங்குளி உள்ளிட்ட கிராமங்களில் தங்கியிருந்தனர். இதேபோல், இந்த கிராமங்களை சேர்ந்த 1,000 பேரும் மின் நிலையத்தில் பணிபுரிந்தனர்.

கடந்த வாரத்தில் நடந்த போராட்டங்களால், கூடங்குளத்தை சுற்றிய பகுதிகளில் தங்கியிருந்த ஊழியர்கள், உள்ளூரை சேர்ந்த சிலரால் மிரட்டப்பட்டனர். இதனால், 2,000 தொழிலாளர்கள் உயிருக்கு பயந்து, சொந்த ஊருக்கு சென்று விட்டனர்; இவர்கள் அனைவரும் பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்தவர்கள். இதேபோல், நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 1,000 பேரும் பணிக்கு வராமல், சிலரால் தடுக்கப்பட்டு விட்டனர். இதனால் தற்போது, 2,500 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.

நமது சிறப்பு நிருபர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us