PUBLISHED ON : ஆக 05, 2011 12:00 AM

ராம்தேவின் போலீஸ் பாசம்
டில்லியில், பாபா ராம்தேவ் நடத்திய உண்ணாவிரதத்தை, யாரும் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. ராம்லீலா மைதானத்தில் நடந்த, அந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அன்று நள்ளிரவில் மைதானத்துக்குள் புகுந்த, டில்லி போலீசார், தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டில்லி போலீசார் மீது, ராம்தேவ் ஆவேசத்துடன் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். உண்ணாவிரதத்தின்போது நடந்த அனைத்து சம்பவங்களும், டில்லி சிறப்பு போலீஸ் கமிஷனர் தீபக் மிஸ்ரா கண்காணிப்பில் தான், நடந்தது. ராம்தேவுக்கும், தீபக் மிஸ்ராவுக்கும் ஏழாம் பொருத்தம் என, அனைவரும் கூறி வந்தனர். இந்த விவகாரத்தில், யாரும் எதிர்பார்க்காத திடுக் திருப்பம் ஏற்பட்டது. சமீபத்தில் டில்லி வந்திருந்த ராம்தேவ், தீபக் மிஸ்ராவை சந்தித்தார். மிஸ்ராவும், அவரை அன்புடன் வரவேற்றார். அவரிடம்,'ஹரித்வாரில் உள்ள எங்கள் யோகா மையத்துக்கு, நீங்கள் அவசியம் ஒருமுறையாவது, வர வேண்டும்'என, ராம்தேவ், அழைப்பு விடுத்தார். இதை மிஸ்ராவும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையேயான இந்த சந்திப்பு, ராம்தேவ் ஆதரவாளர்களிடையேயும், டில்லி போலீசாரிடையேயும், பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.'ஆடு பகை, குட்டி உறவு என்ற பழமொழியை கேள்விப் பட்டுள்ளோம். ஆனால், இங்கு, குட்டி பகை, ஆடு உறவாக அல்லவா உள்ளது'என, இரு தரப்பிலுமே, புலம்பல் சத்தம் பலமாக எழுந்துள்ளது.