PUBLISHED ON : மார் 12, 2025 12:00 AM

'அரசியல் காற்று திசைமாறி அடிக்கிறதே...' என, ஆச்சரியப்படுகின்றனர், மஹாராஷ்டிர மாநில மக்கள்.
இங்கு, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கூட்டணியில் உள்ள சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக உள்ளார்.
சமீபகாலமாக ஏக்நாத் ஷிண்டேவுக்கும், முதல்வர் தேவேந்திர பட்னவிசுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஏக்நாத் ஷிண்டே பரிந்துரைத்த பல நியமனங்களை பட்னவிஸ் நிராகரித்து விட்டார்.
'நேர்மையானவர்களுக்கு மட்டுமே பணி நியமனம்; எந்தவித சிபாரிசுக்கும் இடமில்லை...' என கண்டிப்புடன் கூறி விட்டார், பட்னவிஸ். இதனால், பட்னவிஸ் மீதும், பா.ஜ., மேலிட தலைவர்கள் மீதும் அதிருப்தியில் உள்ளார், ஏக்நாத் ஷிண்டே.
இந்த நேரம் பார்த்து, சிவசேனா உத்தவ் பிரிவு தலைவரான உத்தவ் தாக்கரே, களத்தில் இறங்கியுள்ளார். 'கூட்டணி கட்சியின் நெருக்கடிகளுக்கு பணியாமல் செயல்படும் பட்னவிஸ், உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்...' என்கிறார், உத்தவ் தாக்கரே.
தன் தலைமையிலான கட்சியை இரண்டாக உடைத்த கோபத்தில், ஏக்நாத் ஷிண்டே மீதான கோபத்தை உத்தவ் தாக்கரே வெளிப்படுத்துவதாக சக அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.
ஆனாலும், 'ஆளும் கூட்டணியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே வெளியேறினால், அதில், நாம் இடம் பிடித்துவிட வேண்டும் என நினைத்து தான், உத்தவ் தாக்கரே இப்போதே துண்டு போடுகிறார்...' என, கிண்டல் அடிக்கின்றனர், மஹாராஷ்டிர மக்கள்.