வரும் 18ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் : ஏ.ஐ.எம்.டி.சி., தலைவர் அறிவிப்பு
வரும் 18ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் : ஏ.ஐ.எம்.டி.சி., தலைவர் அறிவிப்பு
வரும் 18ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் : ஏ.ஐ.எம்.டி.சி., தலைவர் அறிவிப்பு

சேலம் : ''தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் மகாராஷ்டிரா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், 1997ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புக் கொண்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி, வரும் 18ம் தேதி நள்ளிரவு முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க கட்டடத்தில், அனைத்திந்திய மோட்டார் வாகனக் கழகம் சார்பில், லாரி உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த சண்முகப்பா கூறியதாவது: கடந்த 1997ம் ஆண்டு, மத்திய அரசு போட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் 18ம் தேதி நள்ளிரவு முதல், தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மகாராஷ்டிரா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கும்.
இந்தியா முழுவதும், 'டோல்கேட்' வரி விதிப்பால், லாரி உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். தென்னிந்தியா முழுவதும் 16 லட்சம் லாரிகளும், மகாராஷ்டிராவில் 8 லட்சம் லாரிகள் என, 24 லட்சம் லாரிகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு லாரிக்கும் ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய் சுங்க வரி செலுத்த, லாரி உரிமையாளர்கள் தயாராக உள்ளனர்.
தனியார் லாபம் பெறும் வகையில், சுங்க வரி கட்டணத்தை 18 சதவீதமாக உயர்த்தியுள்ளனர். ஆண்டுக்கு 5 முதல் 10 சதவீதம் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், சுங்க வரி கட்டணத்தை குறைப்பதற்கு பதிலாக, கூடுதல் சுங்க வரியை மத்திய அரசு விதிக்கிறது. வரும் 18ம் தேதிக்குள், சுங்க வரி, டயர்களுக்கான இறக்குமதி வரி மற்றும் இன்சூரன்ஸ் தொகை குறைப்பு குறித்து, மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிடில், அன்று நள்ளிரவு முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில், 24 லட்சம் லாரிகள் ஈடுபடும்.
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் லாரிகள் மற்றும் துறைமுகங்கள் அனைத்தும், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. இதன் மூலம், லாரி உரிமையாளர்களுக்கு 1,000 கோடி ரூபாயும், அரசுக்கு 1,500 கோடி ரூபாயும் இழப்பு ஏற்படும். தென்னிந்தியாவில் நடக்கும் லாரி ஸ்டிரைக் மூலம் தீர்வு கிடைக்காவிட்டால், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்து, நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு சண்முகப்பா தெரிவித்தார்.