Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட தடை: ம.பி., உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட தடை: ம.பி., உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட தடை: ம.பி., உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட தடை: ம.பி., உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ADDED : மே 16, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
இந்துார்: இளநிலை மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு, ம.பி., உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், திட்டமிட்டபடி ஜூன் 14ம் தேதி, தேர்வு முடிவு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுதும் இளநிலை மருத்துவ படிப்பான, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கு, 'நீட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

மின் தடை


இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த 4ம் தேதி நடந்தது. நாடு முழுதும் 21 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர்.

நீட் தேர்வு நடந்த அன்று, மத்திய பிரதேசத்தின் இந்துார் பகுதியில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், ஏராளமான நீட் தேர்வு மையங்களில் இரண்டு மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சில மையங்களில், மெழுகுவர்த்தி உள்ளிட்டவற்றின் உதவியோடு தேர்வு நடந்தது.

இந்நிலையில், ம.பி., யைச் சேர்ந்த ஒரு மாணவி, அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், 'இந்துார் பகுதியில், எனக்கு நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தேர்வு நாளன்று இடி, மின்னல் காரணமாக, பல மையங்களில் மின்சாரம் இல்லை.

'இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்தும், ஜெனரேட்டர் போன்ற மாற்று ஏற்பாடுகளும் செய்யவில்லை.

'மின் தடை காரணமாக கவனம் சிதறியதோடு, தேர்வு எழுதும் திறனும் பாதிக்கப்பட்டது. எனவே, எனக்கு மீண்டும் 'நீட்' தேர்வு எழுத வாய்ப்பளிக்க வேண்டும்' என கோரியிருந்தார்.

இந்த மனு, ம.பி., உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

21 லட்சம் பேர்


உத்தரவில் நீதிபதிகூறியதாவது:


தேர்வின் போது, சரியான சூழலை மாணவ - மாணவியருக்கு அதிகாரிகள் வழங்கத் தவறி விட்டனர்.

இந்த மனு தொடர்பாக, விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பியும் எதிர் மனுதாரர்கள் தரப்பில் யாருமே ஆஜராகவில்லை.

எனவே, இந்த வழக்கில், தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு, ம.பி., மாநில மேற்கு மண்டல மின் வினியோக நிறுவனம் ஆகியவை நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.

வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்த விசாரணை வரை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியாகும் என தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்துள்ளது. தற்போது, ஜூன் 30 வரை தடை விதித்து ம.பி., உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், நீட் தேர்வு முடிவு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், நாடு முழுதும், நீட் தேர்வு எழுதிய 21 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us