இந்திய ராணுவம் குறித்து ம.பி., துணை முதல்வர் சர்ச்சை பேச்சு
இந்திய ராணுவம் குறித்து ம.பி., துணை முதல்வர் சர்ச்சை பேச்சு
இந்திய ராணுவம் குறித்து ம.பி., துணை முதல்வர் சர்ச்சை பேச்சு
ADDED : மே 16, 2025 11:55 PM

போபால்: ''ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையால் பாகிஸ்தானை கதிகலங்க வைத்த பிரதமர் மோடியின் செயல் பாராட்டுக்குரியது.
''அவரது காலடியில், ஒட்டுமொத்த தேசமும், ராணுவமும் தலைவணங்குகிறது,'' என, மத்திய பிரதேச துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்டா பேசியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின், 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக, பாகிஸ்தானுக்கும், அந்நாட்டின் பயங்கரவாதிகளுக்கும் நம் ராணுவத்தினர் தக்க பதிலடியை கொடுத்தனர். பாக்., கெஞ்சியதை அடுத்து, போர்நிறுத்தம் அமலானது.
முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் ம.பி.,யில், பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக உள்ள குன்வர் விஜய் ஷா, சமீபத்தில், ஆப்பரேஷன் சிந்துார் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராணுவ கர்னல் ஸோபியா குரேஷி பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்தார்.
கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அவர் மன்னிப்பு கேட்டார். இந்த சர்ச்சையே இன்னும் ஓயாததற்குள், ம.பி., துணை முதல்வர் ஜக்தீப் தேவ்டா, புது சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில், ம.பி., துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்டா கூறுகையில், ''ஆப்பரேஷன் சிந்துார் வாயிலாக, பாகிஸ்தானை பிரதமர் மோடி கதிகலங்க வைத்துள்ளார். இந்த கம்பீரமான செயலால், ஒட்டுமொத்த தேசமும், ராணுவம் அவரது காலடியில் தலைவணங்குகிறது,'' என்றார்.
இந்த பேச்சு, ம.பி., அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது. இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த காங்., 'ஜகதீஷ் தேவ்டாவின் கருத்து மிகவும் மலிவானது; வெட்கக்கேடானது. ராணுவத்தை சிறுமைப்படுத்திய அவரை, பதவியில் இருந்து நீக்க வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும்' என, குறிப்பிட்டது.
காங்., சதி!
என் பேச்சை காங்., திரித்து வெளியிட்டுள்ளது. ஆப்பரேஷன் சிந்துார் வாயிலாக நம் ராணுவம் மகத்தான பணியை செய்துள்ளது. ராணுவத்துக்கு நாட்டு மக்கள் தலைவணங்குகின்றனர் என்ற அர்த்தத்தில் தான், நான் பேசினேன்.
- ஜகதீஷ் தேவ்டா, ம.பி., துணை முதல்வர், பா.ஜ.,