Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ 'எவரெஸ்ட்' உச்சியை எட்டிவிட்டு திரும்பும் வழியில் இந்தியர் பலி

'எவரெஸ்ட்' உச்சியை எட்டிவிட்டு திரும்பும் வழியில் இந்தியர் பலி

'எவரெஸ்ட்' உச்சியை எட்டிவிட்டு திரும்பும் வழியில் இந்தியர் பலி

'எவரெஸ்ட்' உச்சியை எட்டிவிட்டு திரும்பும் வழியில் இந்தியர் பலி

UPDATED : மே 17, 2025 07:41 PMADDED : மே 16, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
காத்மாண்டு: உலகின் மிக உயர்ந்த சிகரமான நேபாளத்தின் மவுன்ட் எவரெஸ்ட் உச்சியை அடைந்த இந்தியர், திரும்பி வருகையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இமயமலைத் தொடரில் உள்ள ஒரு குறிப்பிட்ட மலை உச்சி மவுன்ட் எவரெஸ்ட். 29,032 அடி உயரம் கொண்ட இது நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் எல்லையில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நுாற்றுக்கணக்கானோர் இந்த மலை உச்சியை அடைய முயற்சிக்கின்றனர்.

இதற்கு நேபாள சுற்றுலாத்துறை அல்லது திபெத் மலையேறுதல் சங்கத்தின் அனுமதி அவசியம். அவர்களின் அங்கீகாரம் பெற்ற மலையேற்ற நிறுவனங்கள் எவரெஸ்ட் உச்சியை அடைய வழிகாட்டுவர், தேவையான உதவிகளை செய்வர்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுப்ரதா கோஷ், 45, சமீபத்தில் எவரெஸ்ட் உச்சியை அடைய புறப்பட்டார். அவருக்கு நேபாள மலையேற்ற நிறுவனம் உதவியது. நேற்று முன்தினம் மதியம் வெற்றிகரமாக எவரெஸ்ட் உச்சியான 29,032 அடியை எட்டி சாதனை படைத்தார்.

அங்கிருந்து திரும்பும்போது, ஹிலாரி ஸ்டெப் என்ற ஆபத்தான பகுதியை கடந்து வர சுப்ரதா கோஷ் மறுத்ததாகக் கூறப்படுகிறது. 28,800 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பகுதி, 'மரண மண்டலம்' என மலையேறிகளால் குறிப்பிடப்படுகிறது.

இங்கு உயிர் வாழ்வதற்கு தேவையான இயற்கை ஆக்சிஜன் போதிய அளவு இருக்காது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் சுப்ரதா கோஷ் உயிரிழந்தார்.

சுப்ரதா கோஷ் சென்ற அதே மலையேற்ற நிறுவனத்தின் வாயிலாக எவரெஸ்ட் உச்சியை அடைய முயன்ற பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பிலிப் சான்டியாகோ, 45, என்பவரும் கடந்த 14ம் தேதி உயிரிழந்தார்.

இவர் 26,000 அடி உயரத்தில் உள்ள தெற்கு கோல் என்ற முகாமை அடைந்தபோது, களைப்பாக உணர்ந்து கூடாரத்திற்கு ஓய்வு எடுக்கச் சென்றார். அங்கு உயிரிழந்தார்.

இருவரின் உடல்களையும் மீட்கும் முயற்சியில் நேபாள அரசு ஈடுபட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us