கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு விவகாரம் : மத்திய அமைச்சர் சென்னையில் ஆலோசனை
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு விவகாரம் : மத்திய அமைச்சர் சென்னையில் ஆலோசனை
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு விவகாரம் : மத்திய அமைச்சர் சென்னையில் ஆலோசனை
ADDED : செப் 20, 2011 11:09 PM

சென்னை: கூடங்குளம் அணு உலை விவகாரம் குறித்து, மத்திய அமைச்சர் நாராயணசாமி, தமிழக அரசு தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கியுடன், சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், அணு உலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 'அணு உலையால் பாதிப்பு எதுவும் ஏற்படாது; உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்' என, முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டும், போராட்டக் குழுவினர், உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டனர். நாளுக்கு நாள் இந்த விவகாரம் வலுத்து வரும் நிலையில், இப்பிரச்னையில் பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம், பிரதமர், முதல்வருடன் தொலைபேசியில் பேசினார். கூடங்குளத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து, பிரதமரிடம் முதல்வர் விரிவாக எடுத்துக் கூறினார். அப்போது, மத்திய அமைச்சர் நாராயணசாமியை சென்னைக்கு அனுப்பி, இந்த விவகாரம் தொடர்பாக அரசுடன் ஆலோசனை நடத்த உத்தரவிடுவதாக, பிரதமர் கூறினார். அதன்படி, மத்திய அமைச்சர் நாராயணசாமி, நேற்று காலை, சென்னை வந்தார். சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில், தமிழக அரசின் தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூடங்குளம் அணு உலைக்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்தும், அங்கு நிலவும் சூழல் குறித்தும், அமைச்சர் கேட்டறிந்தார்.
இதன்பின், நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது: பிரதமர் உத்தரவின் பேரில், நான் சென்னை வந்து, தலைமைச் செயலருடன் ஆலோசனை நடத்தினேன். அணு உலையால் ஆபத்து இல்லை என்பதை மக்களிடம் விளக்கிக் கூற நடவடிக்கை எடுக்கப்படும். கூடங்குளம் பகுதிக்குச் சென்று, அங்குள்ள மக்களிடம் பேசுவேன். அதன்பின், அரசும், மக்களும் தெரிவித்த கருத்துக்களை, பிரதமரிடம் தெரிவிப்பேன். இப்பிரச்னைக்கு தீர்வு காண, பிரதமர் உரிய நடவடிக்கையை எடுப்பார். இந்த விவகாரம் தொடர்பாக, நாளை (இன்று) முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேச உள்ளேன். இவ்வாறு அமைச்சர் கூறினார். இதன்பின், கூடங்குளம் பகுதிக்கு அமைச்சர் புறப்பட்டுச் சென்றார்.


