ஆர்.டி.இ., திட்டத்திற்கான நிதி: தமிழகத்துக்கு ஒதுக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ஆர்.டி.இ., திட்டத்திற்கான நிதி: தமிழகத்துக்கு ஒதுக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ஆர்.டி.இ., திட்டத்திற்கான நிதி: தமிழகத்துக்கு ஒதுக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்(ஆர்.டி.இ.,) கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
ஈஸ்வரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், 'தமிழகத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்தாண்டு துவங்கப்படவில்லை. இந்த திட்டம் முடக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது' எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணை நடத்தி வருகிறது.
அப்போது, தமிழகத்துக்கான நிதியை ஒதுக்காதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு மத்திய அரசு வழக்கறிஞர், அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், சில காரணங்களினால் தரப்படவில்லை,' என விளக்கம் அளித்தார்.
அது ஏன் என நீதிபதிகள் மீண்டும் கேள்வி எழுப்ப, அதற்கு தமிழக அரசு வழக்கறிஞர், 2021 முதல் 2023 கல்வியாண்டு வரை மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. நிதி ஒதுக்காததை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. மத்தியில் ஆளும் கட்சிக்கு தமிழகத்தில் இருந்து ஒரு எம்.பி., கூட கிடைக்காத காரணத்தினால் நிதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒட ஒதுக்கீட்டுக்கு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை நிதியுடன் இதனை தொடர்புப்படுத்தக்கூடாது.
இந்த நிதியை வழங்காத காரணத்தினால், தனியார் பள்ளிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.