PUBLISHED ON : செப் 26, 2011 12:00 AM

'இனிப்பான முன்னேற்றம்!' : இத்தாலியன் தேனீ வளர்ப்புத் துறையில், ஈடுபட்டுள்ள ஜெயக்குமார்: விருதுநகர் மாவட்டம், தளவாய்புரம் தான் என் சொந்த ஊர்.
சிறு வயதில் குருவி, மைனா, காடை பிடிக்க காட்டிற்குச் செல்வேன்.எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள், மரக்கிளையில் தேன் கூடு பார்த்தேன். தேனீ வளர்க்கும் ஆசை வந்தது. அப்போது, கையில் இருந்த பணத்தில், தேனீ வளர்ப்புப் பெட்டி ஐந்து வாங்கி, தேனீ வளர்ப்பை ஆரம்பித்தேன்.பத்தாம் வகுப்பு முடித்தவுடன், தேனீ வளர்ப்பு மூலம் என் சேமிப்பு, ஐந்தாயிரம் ரூபாய் ஆனது. டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் படித்தாலும், தேனீ வளர்ப்பு பற்றியே மூளையும் மனசும் சுற்றி இருந்தது.கோர்சில் தேர்ச்சி பெற்று, வெளியே வந்த பின், தேனீ வளர்ப்பில் முழு ஈடுபாட்டுடன் இறங்கினேன். இந்தியத் தேனீ வளர்த்து வந்த என்னை, இத்தாலியன் தேனீ வளர்ப்பு வரை இழுத்துச் சென்றது. இந்தியத் தேனீ வளர்ப்பு வருவாயைக் காட்டிலும், இத்தாலியன் தேனீ வளர்ப்பு பன் மடங்கு அதிக வருவாய் குவித்தது. இத்தாலியன் தேனீ வளர்ப்பில் பெண்களும் எளிதாக ஈடுபடலாம். இவ்வகைத் தேனீக்களால், அதிக மகரந்த சேர்க்கை நிகழ்ந்து, பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும்.இந்தியத் தேனீப் பெட்டி ஒன்றில் அதிகபட்சம் ஒரு ஆண்டிற்கு, பத்து கிலோ தேன் மட்டும் கிடைக்கும். ஆனால், இத்தாலியன் தேனீப் பெட்டியில், 150 கிலோ வரை கிடைக்கும்.இத்தாலியன் தேனீ வளர்ப்பு, தற்போது, தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. தேனீக்கள் வளர்ப்பு குறித்து, பயிற்சி மற்றும் தேனீப் பெட்டிகள், தேனீக்கள் போன்றவற்றைத் தொடர்ந்து தந்து வருகிறேன்!