Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ தாஜ் ஹோட்டலுக்கு பேக்கரி உணவுகளை சப்ளை செய்கிறோம்!

தாஜ் ஹோட்டலுக்கு பேக்கரி உணவுகளை சப்ளை செய்கிறோம்!

தாஜ் ஹோட்டலுக்கு பேக்கரி உணவுகளை சப்ளை செய்கிறோம்!

தாஜ் ஹோட்டலுக்கு பேக்கரி உணவுகளை சப்ளை செய்கிறோம்!

PUBLISHED ON : ஜூன் 02, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நீலகிரி மாவட்டம், ஊட்டியில், 'ஊட்டி பிரெஷ்' என்ற பேக்கரி நிறுவனத்தை நடத்தி வரும் அசோக்குமார் -- சரண்யா தம்பதி:

அசோக்குமார்: நான் கேட்டரிங் படித்திருக்கிறேன். இந்தியா மற்றும் இங்கிலாந்தில் டாப் மோஸ்ட் ஹோட்டல்களில் வேலை பார்த்திருக்கிறேன். நண்பர்களுடன் சேர்ந்து, 2010-ல் பேக்கரி தொழிலை துவங்கினேன். அப்போது தான் எங்களுக்கு திருமணமானது.

நண்பர்களுடன் துவங்கிய பிசினஸ் பாதியிலேயே டிராப் ஆயிடுச்சு; ரொம்பவே உடைஞ்சு போயிட்டேன். 'உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால், ஜீரோவில் இருந்தும் கூட ஜெயிக்க முடியும்'னு குடும்பத்தினர் புரிய வைத்தனர்.

பழைய குடோனை வாடகைக்கு எடுத்து, 2012-ல் இந்த கம்பெனியை துவங்கினோம். நண்பர்கள் பல்வேறு உபகரணங்களை கொடுத்து உதவினர்.

பேங்க் லோன் எடுத்து, ஜெனரேட்டரையும், உற்பத்திக்கான மிஷின்களையும் வாங்கினோம். டீலர்கள் வாயிலாக, மாவட்டம் முழுக்க எங்கள் பிரெட்டை பிரபலப்படுத்தினோம்.

பிரெட்டை, 15 வகைகளில் தயாரிக்கிறோம். பிரெட் தயாரிப்புக்கான, 80 சதவீதம் வேலைகளை மிஷின்கள் வாயிலாக தான் செய்கிறோம்.

வர்க்கி தயாரிப்புக்கென மிஷின்கள் இல்லாததால், மூலப்பொருட்களை ஒன்றாக கலப்பதற்கும், வேக வைப்பதை தவிர, மற்ற எல்லா வேலைகளையும் கையில் தான் செய்வோம். நான்கு வகையான வர்க்கி தயாரிக்கிறோம்.

அது தவிர, பிஸ்கட், கேக் வகைகள், சாக்லேட், பப்ஸ் உள்ளிட்ட பேக்கரி உணவுகளையும் தயாரிக்கிறோம். சிற்றுண்டி உணவகம் ஒன்றையும் நடத்துகிறோம். 40 பேருக்கு வேலை வாய்ப்புடன், ஆண்டுக்கு 6 கோடி ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்து வருகிறோம்.

சரண்யா: நான், தனியார் பள்ளி ஆசிரியை. தினமும் பள்ளி முடிந்ததும் நேராக பேக்டரிக்கு வந்திடுவேன். உற்பத்தி முழுக்க கணவர் பார்த்துக் கொள்வார். அக்கவுன்ட்ஸ், நிர்வாக வேலைகளை நான் பார்த்துப்பேன்.

குன்னுாரில் இருக்கும் ராணுவப் பயிற்சி மைய கேன்டீனுக்கு பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறோம்.

ஊட்டி மற்றும் குன்னுாரில் இருக்கும் தாஜ் உட்பட பெரிய ஹோட்டல்களுக்கு நாங்கள் தான் பேக்கரி உணவுகளை சப்ளை செய்கிறோம்.

எங்களிடம் அதிக அளவில் பிரெட் வாங்கிச் சென்று, வேறு கவரில் மாற்றி, தங்கள் தயாரிப்பாக விற்பனை செய்வோரும் உண்டு.

சிலர், எங்கள் கவர் மாதிரியே தயாரித்து, வாடிக்கையாளர்களை நம்ப வைக்கின்றனர்.

இப்படி போட்டிகள், சிக்கல்கள் தொடர்ந்தாலும், எங்கள் தயாரிப்புகளின் தரமும், சுவையும் எங்களுக்கான அடையாளத்தையும், வளர்ச்சியையும் உறுதிப் படுத்துகிறது.

*************

அடுத்த 4 ஆண்டில் 100 பணியாளர்கள் என்பதே இலக்கு!

கும்பகோணத்தில், 'பவன் பைப் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஸ்ரீகாந்த்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் தான், 10-ம் வகுப்பு வரை படித்தேன். என் அண்ணன் படித்து விட்டு, சென்னையில் வேலை செய்ய துவங்கியதால், நானும் சென்னை வந்து கல்லுாரி படிப்பை முடித்து, ஹார்டுவேர்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன்.

சில மாதங்கள் வேலை பார்த்த பின், என்னை சிதம்பரத்துக்கு அனுப்பி, அங்கிருந்த கடையை பார்க்க கூறினர். பின், கும்பகோணத்துக்கு சென்று புதிதாக ஒரு கிளையை துவங்கும்படி கூறினர்.

அதற்கு முன், நான் கும்பகோணத்துக்கு சென்றதே இல்லை. என்றாலும், அங்கே சென்று கடைக்கான இடம் பிடித்து, நானும் என் மனைவியும் தான் கடையை நடத்தினோம்.

நான் மார்க்கெட்டிங் சென்று விடுவேன். என் மனைவி கடையை கவனித்துக் கொண்டார். கடுமையாக உழைத்ததில், அதிகமாக வருமானம் காட்டினேன். இதனால் மாதந்தோறும் இன்சென்ட்டிவ் கிடைத்தது.

தாராசுரத்தில் உள்ள ஒரு கடையில் எப்போதும் கூட்டம் மொய்க்கும். அந்தக் கடை முதலாளியிடம் காத்திருந்து தான் பணம் வாங்க வேண்டும்.

அப்படி ஒருநாள் பணம் வாங்கும் போது, 'கடையில ஓவர் கூட்டமா இருக்கு. குடும்பத்தைக் கவனிக்க முடியல. ஒரே தலைவலியா இருக்கு' என்றார்.

அதைக் கேட்டவுடன், 'உன்னால நடத்த முடியலேன்னா எங்கிட்ட கொடுத்துடு' என்று காமெடியாக பேசிவிட்டு வந்துவிட்டேன்.

மறுநாள் காலை, 'சார், நீங்க கேட்ட மாதிரி கடையைக் கொடுத்துடுறேன். என் குடும்பத்துல எல்லாரும் ஓகே சொல்லிட்டாங்க' என்றார். 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் கடையை எடுத்து நடத்த ஆரம்பித்தேன்.

ஒரு பொங்கலின் போது, 50 டன் சுண்ணாம்பு விற்றது, அந்தப் பகுதியில் யாரும் செய்யாத சாதனை. என் பிசினஸ் சிறப்பாக வளர்ச்சி கண்டது.

நாமே ஏன் பைப்புகள் உட்பட பல வகையான பொருட்களை தயார் செய்யக் கூடாது என்ற யோசனை வந்தது. திருபுவனம் சிட்கோவில் பைப் உட்பட பலவிதமான பொருட்களை தயார் செய்ய ஆரம்பித்தேன்.

என் மனைவிக்கு தனியாக ஒரு பிசினஸை ஆரம்பித்து தருவதற்காக டைல்ஸ் ஷோரூம் ஒன்றை திறந்திருக்கிறேன். அவர் அதை சிறப்பாக நடத்தி வருகிறார்.

இப்போது என் எல்லா பிசினஸ்களையும் சேர்த்தால், கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் அளவுக்கு, 'டர்ன் ஓவர்' இருக்கும். ஆனால், அதில் எனக்கு பெரிய ஆர்வம் இல்லை.

நான் பணியாளர்கள் மீது தான் அதிக கவனம் செலுத்துகிறேன். ஒரு நிறுவனத்தில் மகிழ்ச்சியுடன் வேலை பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், டர்ன் ஓவர் தானாகவே அதிகரிக்கும் தானே!

இப்போதைக்கு, 35 பேர் வேலை பார்க்கின்றனர். அடுத்த நான்கு ஆண்டுகளில், 100 பேர் வேலை பார்க்க வேண்டும் என்பதே என் எண்ணம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us