PUBLISHED ON : ஜூன் 03, 2024 12:00 AM

'டிவி' சீரியல்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் அஸ்ரிதா: எனக்கு பூர்வீகம் கேரளா. ஆனால், பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை தான். அப்பா புரொடக் ஷன் மேனேஜராக இருந்தவர். அம்மா, 'சீரியலில்' நடிச்சுட்டு இருந்தாங்க.
அதனால் எனக்கும் நடிப்பு பிடிச்சிடுச்சு. 3 வயதில், 'அப்பா, அம்மா' என்ற சீரியலில் அறிமுகமானேன். பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது முதல், 'சீரியல் டேட்ஸ், பேமென்ட்' வரை எல்லாத்தையும் அப்பா தான் கவனித்துக் கொண்டார்.
அவர் என்னுடனே இருப்பார் என்ற தைரியத்தில் இருந்தேன்; ஆனால், என், 15 வயதில் திடீரென இறந்து விட்டார்.
அவர் இறந்த பின், அம்மா நடிப்பதை நிறுத்தி விட்டார்; சம்பாதிக்கும் நபராக நான் மாறினேன். அப்பாவின் இழப்பு ஒரு பக்கம், குடும்ப பொறுப்பு மறுபக்கம் என, வாழ்க்கை நகர்ந்தது.
அப்பா இல்லை என்று நான் வருத்தப்பட்டால், அம்மா வருத்தப்படுவாங்க என நினைத்து, எதையும் வெளிக்காட்டாமல் நடிப்பில் கவனம் செலுத்தினேன். வீட்டுச் செலவு, என் படிப்பு, அண்ணன் படிப்பு என, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டேன்.
பலர் எனக்கு வழிகாட்டிகளாக உள்ளனர்; உதவி பண்ணிஇருக்காங்க. 'எனக்குப் படிக்கணும்னு ஆசை. ஆனால், என்னால, 'பீஸ்' கட்ட முடியல.
அதனால், 'டிஸ்கன்டினியூ' பண்ணிக்கலாம்னு இருக்கேன்'னு என் பள்ளி நிர்வாகியிடம் கூறினேன். அவர் சிறிதும் யோசிக்காமல் பள்ளிக்கட்டணத்தை பாதியாகக் குறைத்து, நான் படிக்க உதவினார். இப்படி வாழ்க்கையில் பல நல்ல விஷயங்களும் நடந்திருக்கு.
இத்தனை போராட்டங்களுக்கு நடுவில் என், 23வது வயதில் ஒரு விபத்தை சந்தித்தேன். அதில், மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு, எனக்கு பழைய நினைவுகள் மறந்து விட்டன. ரொம்ப யோசித்தால், சில விஷயங்கள் நினைவுக்கு வரும்; ஆனால், பயங்கரமாக தலை வலிக்கும். என்னால் தனியாக ரெஸ்ட் ரூம் கூட செல்ல முடியாத சூழல்.
'இனி மேல் நடிக்கவே முடியாது, சின்ன சத்தத்தை கூட கேட்க முடியாது, இவங்க உயிர் வாழ, 10 சதவீதம் தான் வாய்ப்பு இருக்கு' என, மருத்துவர்கள் கூறினர். அதனால், வீட்டுக்குள்ளயே இருக்கணும்னு சொன்னாங்க. முதலில், வாழ்க்கையை வெறுத்து அழுதேன்.
ஆனால், விபத்து நடந்த ஒரு மாதத்திலேயே, மீண்டும் கேமரா முன்னாடி நின்றேன். மருத்துவர்களே ஆச்சரியமாக பார்த்தனர். என்னால் பிரகாசமான லைட்டை பார்க்க முடியாது, நிற்க முடியாது என, நிறைய பிரச்னைகள் இருந்தன. ஆனால், அவற்றை என் மன உறுதியால் ஜெயித்தேன்.
இன்று என் குடும்பம் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறது எனில், அதற்கு, 'மீடியா' தான் முக்கிய காரணம். அதை கடைசி வரை தொடர்வேன். அப்பா வின் ஆசீர்வாதம், மக்களின் அன்பு என, 'பாசிட்டிவ்'வான என் உலகத்தில், இதே, 'எனர்ஜி'யோட ஓடியபடியே இருப்பேன்!