PUBLISHED ON : ஜூலை 06, 2024 12:00 AM


ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைனில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையை குறிவைத்து தகர்த்துள்ளதைக் கண்டு உலகிமே கண்ணீர் வடிக்கிறது.
குழந்தைகள் அதுவும் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் என்ன பாவம் செய்தனர் என்று அவர்களை குறிவைத்து தாக்குகின்றனர் என்று பலரும் கதறுகின்றனர், கண்ணீர் வடிக்கின்றனர், கண்டனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போரைத் துவக்கிய ரஷ்யா அதை இன்னும் முடிவுக்கு கொண்டு வரவில்லை.


பல முறை அமைதிக்கான பேச்சு வார்த்தை நடந்த போதும் அது தோல்வியையே தந்ததுள்ளது.
பேச்சு வார்த்தையில் வீண் பிடிவாதமும்,வெட்டி கவுரமும்தான் பிரதான இடம் வகிக்கிறதே தவிர அப்பாவி மக்களின் உயிர்கள் பற்றி அங்கே யாருக்கும் கவலையில்லை. 
போரில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குண்டு வீச்சு நடத்தக்கூடாது என்பது சர்வதேச சட்டம் ஆனால் ரஷ்யா அந்த சர்வதேச சட்டத்தை எல்லாம் கிழே போட்டு மிதித்துவிட்டு தொடர்ந்து ஏவுகணைகளை விட்டுவருகிறது.


இதில் அதிகம் பாதிக்கப்பட்டது கிவ்,மரியபோவ் நகரங்கள்தான்.
மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு போவதற்கு கூட அவகாசம் தராமல் ஏவுகணைகளை வீசிவருகின்றனர்.இந்த ஏவுகணைகளை உக்ரைன் தடுத்து நிறுத்தும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் சராமரியாக வரும் ஏவுகணைகளால் திணறிவருகின்றனர்.

அதிலும் நேற்று கிவ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது விழுந்த ஏவுகணை ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கியுள்ளது.
குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு போய்க் காட்டலாம் ஆனால் இங்கே ஏவுகணை வீசப்பட்டதே குழந்தைகள் மருத்துவமணை மீது எனும்போது குழந்தைகளை எங்கே கொண்டுபோவர்.
மருத்துவமனையில் இருந்த குழந்தைகளை துாக்கிக் கொண்டு பெற்றோர்களும் செவிலியர்களும் தெருவிற்கு ஒடினர், நொறுங்கிப் போன ஆபரேஷன் தியேட்டர்கள், வார்டுகளில் இருந்து எதையும் மீட்கமுடியாத சூழலில் தாங்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று வெளியேறினர்.
கட்டிட இடிபாடுகளை அகற்றி யாரேனும் சிக்கியுள்ளார்களா? என்று மக்கள் தேடிவருகின்றனர்
குழந்தைகளைக் காணாத பெற்றோர் வெளியே நின்று பெருங்குரலெடுத்து அழுகின்றனர்.
ஏற்கனவே காயம்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் ஏவுகணை வீச்சால் மேலும் காயம்பட்டு அதிர்ச்சியடைய அவர்களை துாக்கிக் கொண்டு அடுத்துள்ள மருத்துவமனைக்கு ஒடுகின்றனர்.
அந்த குழந்தைகள் தந்தையை இறுகப்பற்றிக் கொண்டு 'அப்பா பயமாயிருக்குப்பா' என்று அழுதபடி செல்கின்றனர்.
இதயத்தை பிழியும் இந்த அழுகுரல் ஏவுகணைகளை வீசுகிறவர்களின் கவனத்திற்கு செல்லுமா?
-எல்.முருகராஜ்.