Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வெட்டுவதில் காட்டும் ஆர்வம் வளர்ப்பதில் இல்லையே

வெட்டுவதில் காட்டும் ஆர்வம் வளர்ப்பதில் இல்லையே

வெட்டுவதில் காட்டும் ஆர்வம் வளர்ப்பதில் இல்லையே

வெட்டுவதில் காட்டும் ஆர்வம் வளர்ப்பதில் இல்லையே

ADDED : ஆக 14, 2011 02:38 AM


Google News

தமிழகத்தில் 33 சதவீதம் இருக்க வேண்டிய காடுகளின் பரப்பு 23 சதவீதமாக உள்ளதால் இதன்பரப்புகளை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால் நகரம்,கிராமங்களின் விரிவாக்கத்திற்கும் , தேவை அதிகரிப்பு காரணமாக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன. அதிகாரிகளோ இதன் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில், குறைந்தளவு அபராதம் விதிக்கின்றனர். மரங்களை வெட்டும் போது அதற்கு பதிலாக புதியதாக மரக்கன்றுகள் நட வேண்டும்.ஆனால் இதை யாரும் கடைபிடிப்பதில்லை .அதிகாரிகள் கூட விரிவாக்கம் பெயிரில் மரங்களை வெட்டுகிறார்களே தவிர,அதிற்கு பதிலாக மரக்கன்றுகளை நடுவதும் இல்லை. வளர்ப்பதும் இல்லை. வனத்துறையினரோ வனங்களை விட்டு வனத்தை சார்ந்த நிலப்பகுதிகளில் மரங்களை வளர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களின் ஆர்வம் வரவேற்புக்குரியதுதான். அதே நேரத்தில் வனங்களில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கவும் முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மரங்களை வெட்டுவதால் புவி வெப்பமயமாகி வருகிறது. இதனால் கால நிலை மாற்றங்கள் ஏற்பட்டு விவசாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது. மழை இல்லாத நிலையில் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. காற்றில் உள்ள மாசுக்களை அகற்றி, சுவாசத்திற்கு சுத்தமான காற்றுகளை தரும் மரங்களை அழிப்பதால் , வருங்கால சந்ததியர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் இதைபற்றி சிறிதும் எண்ணாமல் மரங்களை அழிப்பதில் குறியாக உள்ளனர். மரங்களை வெட்டுவதில் ஆர்வம் காட்டும் நபர்கள், மரம் நடுவதில் காட்டுவதில்லை. இதனால் பாதிக்கப்படுவது மனிதர்கள் தான் என்பதையும் இவர்கள் உணரவேண்டும் .இது தொடர்பாக பலரின் ஆதங்கம்:

அர்ச்சுனன்(முள்ளிக்குடி ) : மரங்களை வெட்டுவதால் மழை இல்லாமல் போகிறது. முன்பு பருவகாலத்தில் சரியாக பெய்யும் மழை தற்போது இல்லை. மழையை நம்பி விவசாயமும் செய்ய முடியவில்லை. இரண்டு மரம் வெட்டினால் ஒரு மரமாவது நட வேண்டும்.

முரளி (அருப்புக்கோட்டை): மரங்கள் தேவை இல்லாமல் வெட்டப்படுகின்றன. தினமும் ஏதாவது ஒரு பகுதியில் மரங்களை வெட்டுகின்றனர். ஒரு மரத்தை வெட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், குறைந்தது 5 மரங்களையாவது நட வேண்டும். மரம் வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, மரங்கள் வளர்ப்பதை கட்டாயமாக்க வேண்டும். அரசு விழாக்களின் போது ஏதாவது ஒரு பகுதியில் மரங்களை வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தலைமலை(தேவதானம்): மரங்களால் சுகாதாரமான காற்று, மழை,காற்றின் வேகத்தை கட்டுப்படுத்துதல் , மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. கால்நடைகளுக்கு நல்ல உணவும் கிடைக்கிறது. .மரங்களை வெட்டுவதால் வெப்பம் அதிகமாகிறது.

என்.எஸ்.ராமராஜூ(ராஜபாளையம்): மரங்களின் அவசியம் கருதி கோயில்களில் முன்னோர்கள் மரங்களை வளர்த்தனர். பூஜை செய்தும் வழிபட்டனர். மனிதன் சுவாசிக்க தேவைப்படும் ஆக்சிஜன் மரங்களில் இருந்து கிடைக்கிறது. மரங்கள் குறித்து விழிப்புணர்வு இல்லாததால், அவற்றை வெட்டுவது தொடர்கிறது.

கே.திருப்பதிராஜ் (வெம்பக்கோட்டை): பெரும்பான்மையான பகுதிகள் வானம் பார்த்த பூமியாக உள்ளது. மழைபெய்தால் தான் விவசாயம் உண்டு.மரங்கள் வெட்டப்படுவதால் மழையின் அளவு குறைகிறது.பருவ நிலை பாதிக்கப்பட்டு பூமியில் வெப்பமும் உயர்கிறது. தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பாதிப்பதுடன், விளைநிலங்களும் குறைந்து வருகிறது. விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி மரம் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.கந்தசாமி(சாத்தூர்): விருதுநகர் முதல் கோவில்பட்டி வரை நான்கு வழிச்சாலைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன.இதற்கு பதிலாக ஒரு மரக்கன்று கூட நடவில்லை . பள்ளி மாணவ மாணவியர்கள் மத்தியில் மரம் வளர்ப்பு,சுற்றுசூழல் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தி மரம் வளர்க்க ஊக்கபடுத்த வேண்டும். குடியிருப்புகள் அமைக்கும் போது மரம் வளர்க்க இடம் விடப் பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து அங்கீகாரம் வழங்கவேண்டும்.

குருவையா (வத்திராயிருப்பு): மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தினமும் மரம் வெட்டி கடத்தப்படுகிறது. தடுப்பதற்கு நாதியில்லை. சுள்ளி பொறுக்குவதாக கூறி உள்ளே சென்று பச்சை மரங்களை வெட்டி விடுகின்றனர்.

சிலர் அடுப்புக்கரிக்காக மலையில் தீவைக்கின்றனர். சிலநாள் இடைவெளிக்கு பின் மீண்டும் சென்று அவற்றை அள்ளி வருகின்றனர்.

வனத்துறையில் முன்பு அதிக பணியாளர்கள் இருந்தனர். கண்காணிப்பும் இருந்தது. இப்போது ஒன்றிரண்டு பேர் மட்டுமே உள்ளதால், இவர்களால் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள முடியவில்லை.

விஜி (காரியாபட்டி): நிலத்தடி நீரை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தும், காட்டுகருவேல மரங்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க அறிவுறுத்துவதோடு, மரம் வளர்ப்பதையும் கட்டாயப்படுத்த வேண்டும்

-நமது நிருபர் குழு-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us