Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அணைகள் பாதுகாப்பு சட்டம் வேண்டாம்: வைகோ

அணைகள் பாதுகாப்பு சட்டம் வேண்டாம்: வைகோ

அணைகள் பாதுகாப்பு சட்டம் வேண்டாம்: வைகோ

அணைகள் பாதுகாப்பு சட்டம் வேண்டாம்: வைகோ

UPDATED : ஆக 03, 2011 01:13 AMADDED : ஆக 02, 2011 11:34 PM


Google News
Latest Tamil News

அணைகள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதற்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இச்சட்டத்தை கொண்டு வரக் கூடாது என, ம.தி.மு.க.,வும் வலியுறுத்தியுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்கிடம், வைகோ இந்த கோரிக்கையை, நேரில் வலியுறுத்தியதோடு மட்டுமல்லாது, இலங்கைக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை நிறுத்த வேண்டுமென்றும், ராஜிவ் கொலையில் சம்பந்தப்பட்ட பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்படியும் வலியுறுத்தப்பட்டது.



நாடு முழுவதும் உள்ள அணைகளை, ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் கொண்டு வரும் நோக்கில், அணைகள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்ட மசோதா, தற்போது, பார்லிமென்டின் நிலைக்குழு முன், பரிசீலனையில் உள்ளது.இச்சட்டம் கொண்டு வரப்பட்டால், ஒவ்வொரு அணையும் எந்தெந்த மாநில எல்லைக்குள் உள்ளனவோ, அந்த மாநிலங்களின் கட்டுப்பாட்டுக்குள் போய்விடும் நிலை உருவாகும். இந்த சட்டத்தை எக்காரணம்கொண்டும் கொண்டு வரக் கூடாது என, தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.



இதுகுறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த, 30ம் தேதி, மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார். இந்த சூழ்நிலையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நேரில் சந்தித்து 3 கோரிக்கை மனுக்களை அளித்தார். முதலாவது மனுவில், மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வரக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.



முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், துணைக்கடவு, பெருவாரிபள்ளம் ஆகிய அணைகள் அனைத்தும், கேரள மாநில எல்லைக்குள் வருகின்றன. இருப்பினும், இவை அனைத்துமே, தமிழகத்துக்கு சொந்தமானவை. தமிழக அரசு பணம் செலவிட்டு பராமரித்து காத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், அணைகள் பாதுகாப்பு சட்டம் வந்துவிட்டால், இந்த அணைகள் அனைத்தும், கேரளாவின் கட்டுப்பாட்டுக்குள் போய்விடும். பிறகு, தமிழகத்துக்கு சொட்டு தண்ணீர் கூட கேரளா தராது. அதனால், இரு மாநிலங்களுக்கு இடையில் பெரும் பிரச்னை ஏற்படும். அப்படி ஏற்பட்டால், அது, இந்திய ஒருமைப்பாட்டுக்கே குந்தகமாகிவிடும். எனவே, உடனடியாக அந்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.



அவ்வாறு இல்லையெனில், தமிழக அரசு கூறியுள்ள திருத்தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறு அணைக்கு போட்டியாக புதிய அணையை கட்ட கேரள அரசு முயன்று வருகிறது. இந்த அணை கீழ்ப்பகுதியில் கட்டப்படும் என கூறப்படுவதால், தண்ணீர் முழுவதும் அந்த அணைக்கே சென்றும் விடவும் வாய்ப்புள்ளது. இதனால், முல்லைப் பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்றுபோய்விடும். தமிழகத்துக்கு ஏற்படவுள்ள அநீதியை தடுத்து நிறுத்த, மத்திய அரசு முன்வரவேண்டும். அதற்கு, கேரள அரசின் புதிய அணை கட்டும் முயற்சிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.



இரண்டாவது மனுவில், இலங்கை பிரச்னை குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. லண்டனை சேர்ந்த, 'சேனல் 4' தொலைக்காட்சி ஒளிபரப்பிய காட்சிகளை பார்த்து, உலகநாடுகள் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கின்றன. இதை பார்த்துவிட்டு, இலங்கைக்கான நிதி உதவியை, ஐக்கிய நாடுகள் சபை நிறுத்தியுள்ளது. இப்போது, முழுமையாக இனப்படுகொலையின் கோர முகங்கள் வெளியே தெரிய துவங்கியுள்ளன. இலங்கையில் மிகப்பெரிய இனப்படுகொலை நடந்துள்ளதை, உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒப்புகொள்கின்றன. ராஜபக்ஷேவை, போர்க்குற்றவாளியாக அறிவித்து, கோர்ட்டில் நிறுத்த வேண்டும். அதற்கு இந்தியா முயற்சி எடுக்க வேண்டும். அதோடு அந்நாட்டுக்கு அளிக்கும் தொழில் வர்த்தக உதவிகளை நிறுத்த, மத்திய அரசு முன்வர வேண்டும்.



தூக்கை ஆயுளாக மாற்ற கோரிக்கை: ராஜிவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளனிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, அவரை சித்ரவதைப்படுத்தி, வலுக்கட்டாயமாகவே போலீசார் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். தடா சட்டத்தின், 15வது பிரிவில் பெறப்படும் இந்த வாக்குமூலம், சட்ட விரோதமானது. பேரறிவாளன் குறித்து, சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி கிருஷ்ண அய்யரும் கடிதம் எழுதியுள்ளார்.



தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வந்தாலும், இதுவரை ஏற்கப்படவில்லை. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பேரறிவாளன், தன் 19வது வயதில் சிறைக்குள் சென்றார். இப்போது, 40 வயதாகிவிட்டது. அவர் செய்த குற்றமாக கூறப்படுவதெல்லாம், சிவராசனுக்கு, 9 வோல்ட் பேட்டரி வாங்கித் தந்தார் என்பது மட்டுமே. இந்த குற்றத்திற்காக, மாபெரும் தண்டனை அனுபவிக்கிறார். மனிதாபிமான அடிப்படையில் அவர் மீதான தண்டனையை குறைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.



- நமது டில்லி நிருபர் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us