அ.தி.மு.க., அணிகளை இணைக்க ஒருங்கிணைப்பு குழு துவக்கம்: பன்னீர், பழனிசாமியை சந்தித்து பேச திட்டம்
அ.தி.மு.க., அணிகளை இணைக்க ஒருங்கிணைப்பு குழு துவக்கம்: பன்னீர், பழனிசாமியை சந்தித்து பேச திட்டம்
அ.தி.மு.க., அணிகளை இணைக்க ஒருங்கிணைப்பு குழு துவக்கம்: பன்னீர், பழனிசாமியை சந்தித்து பேச திட்டம்
ADDED : ஜூன் 09, 2024 02:34 AM

சென்னை: அ.தி.மு.க.,வில் பிரிந்து கிடக்கும் தலைவர்களை ஒன்றிணைத்து, கட்சியை பலப்படுத்த, முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி. பிரபாகர், புகழேந்தி மற்றும் முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி ஆகியோர் இணைந்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்புக் குழுவை துவக்கி உள்ளனர்.
அவர்கள் அளித்த பேட்டி:
ஜே.சி.டி.பிரபாகர்: அ.தி.மு.க.,வில் பிரிந்து கிடக்கும் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்பது, தமிழகம் முழுதும் உள்ள முன்னணி நிர்வாகிகளின் கருத்து. எப்பாடுபட்டாவது கட்சியை, தலைவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்படுத்தி உள்ளோம். விருப்பு, வெறுப்பு இல்லாமல், அ.தி.மு.க., வின் அனைத்து பிரிவுகளிலும் உள்ளவர்கள், இதற்கான பணியை செய்வர்.
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில், பன்னீர்செல்வத்துக்கு உறுதுணையாக இருந்தேன். கட்சி ஒருங்கிணைப்புக் குழு என வைத்து விட்டு, ஒரு அணி நிர்வாகியாக இருக்க முடியாது என்பதால், இந்த நிமிடத்தில் இருந்து அதிலிருந்து விலகிக் கொள்கிறேன்.
தொண்டர்கள் தங்கள் கருத்துகளை, கட்சி வலுப்பெற தலைவர்களுக்கு என்ன பொறுப்பு அளிக்கலாம் என்பதை, 44, கோத்தாரி ரோடு, சென்னை - 34 என்ற முகவரிக்கு எழுதி அனுப்பலாம். எங்கள் மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பிரிந்துள்ள தலைவர்களை சந்திக்க அனுமதி கேட்கப் போகிறோம். அவர்கள் இசைவு தெரிவித்தால் சந்திப்போம். மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துப் பேச உள்ளோம். பழனிசாமி இறங்கி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது.
புகழேந்தி: நானும், கே.சி.பழனிசாமியும் எதிரெதிராக இருந்தோம். ஜே.சி.டி.பிரபாகர் அறிவுரையின்படி ஒன்றாகி உள்ளோம். அனைவரும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும்.
பன்னீர்செல்வத்துடன் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர் ஒரு திசையை நோக்கி பயணிக்கிறார். அதில், எங்களுக்கு ஒப்புதல் இல்லை. யாரோ மொத்தமாக அ.தி.மு.க.,வை அழிக்க பார்க்கின்றனர். தேசிய கட்சிகள் இரண்டாம் இடத்திற்கு வருவதை அனுமதிக்க முடியாது. பா.ஜ., - தி.மு.க., என்ற நிலை ஏற்படுவதை பார்க்க முடியாது.
எனவே, அ.தி.மு.க., வினர் அனைவரையும் ஒன்றிணைக்க, ஒருங்கிணைப்புக் குழுவை துவக்கி உள்ளோம். யாரும் கவுரவம் பார்த்து, கட்சியை நாசப்படுத்த வேண்டாம்.
கே.சி.பழனிசாமி: லோக்சபா தேர்தல் முடிவுகள், அ.தி.மு.க., தொண்டர்களுக்கு பேரிடியாக உள்ளன. இதற்கு முன்பும் அ.தி.மு.க., தோல்வி அடைந்துள்ளது. ஆனால், இவ்வளவு ஓட்டு வங்கி சரிவைக் கண்டதில்லை. பெரும்பாலான தொண்டர்கள், பொதுமக்கள், அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும் என்கின்றனர். அதற்காக கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.
தேசிய கட்சிகளுக்கு அடிபணிந்தோ, அவர்களை சார்ந்தோ, அவர்கள் கருத்தை பிரதிபலிக்கும் பிரதிநிதிகளாக, அ.தி.மு.க.,வினர் இருக்கக் கூடாது. எந்த குடும்பத்தின் பிடியிலும் சென்றுவிடக் கூடாது.
தேர்தல் முடிவுகளை பாடமாக எடுத்து, அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இன்னொரு தோல்வியை கட்சி பெறுமானால், தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பழனிசாமி, பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை சந்தித்து பேச முயற்சிப்போம். அனைவரும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.