Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மின்வேலிகளில் சிக்கி யானைகள் இறந்தால் வாரியத்திற்கு அபராதம்: ஐகோர்ட் எச்சரிக்கை

மின்வேலிகளில் சிக்கி யானைகள் இறந்தால் வாரியத்திற்கு அபராதம்: ஐகோர்ட் எச்சரிக்கை

மின்வேலிகளில் சிக்கி யானைகள் இறந்தால் வாரியத்திற்கு அபராதம்: ஐகோர்ட் எச்சரிக்கை

மின்வேலிகளில் சிக்கி யானைகள் இறந்தால் வாரியத்திற்கு அபராதம்: ஐகோர்ட் எச்சரிக்கை

ADDED : ஜூன் 09, 2024 02:42 AM


Google News
Latest Tamil News
சென்னை: 'மின்வேலிகளில் சிக்கி யானைகள் பலியாவது தொடர்ந்தால், மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, சமீபத்தில் ஓசூர், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில், மீண்டும் மின்வேலியில் சிக்கி யானைகள் இறப்பதை சுட்டிக்காட்டி நீதிபதிகள் கூறியதாவது:

ஒவ்வொரு முறையும், மின்வேலியில் சிக்கி யானைகள் இறக்கும் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று மட்டுமே அரசு கூறுகிறது. ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும், யானைகள் இறப்பதை தடுக்க தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்யும், 'டெண்டர்' இறுதி செய்யப்படவில்லை. இவ்வளவு நாள் தாமதம் ஏன்?

இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் அளித்த பதில்:

மின்வேலியில் சிக்கி யானைகள் இறப்பதை தடுக்கும் பாதுகாப்பு கருவிகள் கொள்முதல் டெண்டர் இறுதி செய்யப்பட்டு விட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளால், நிதி ஒதுக்கீடுக்கான ஒப்புதல் நடைமுறைகள் மட்டும் நிலுவையில் உள்ளன.

தற்போது, நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு உள்ளதால், விரைவில் பாதுகாப்பு கருவிகள் கொள்முதல் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்த கருவிகள் பொருத்தப்பட்டால், மின் வேலிகளில் யானைகளின் உடல் உறுப்புகள் பட்ட உடனே, தானாகவே மின்சாரம் துண்டிக்கப்படும். முக்கிய வழித்தடங்களில், இந்த கருவிகள் பொருத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, 'யானைகள் இறப்பு விஷயத்தில், அரசு தீவிரம் காட்டவில்லை என்றால், நீதிமன்றம் கடும் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும். பாதுகாப்பு கருவிகள் கொள்முதல் செய்ததும், முதலில் முன்னுரிமை அடிப்படையில் அடிக்கடி இத்தகைய இறப்புகள் நடக்கும் பகுதிகளில் உடனே பொருத்த வேண்டும்.

யானைகள் இறப்பு தொடரும் பட்சத்தில், மின் வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும்' என, நீதிபதிகள் எச்சரித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us