/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பார் ஏலத்தில் அ.தி.மு.க.,- தி.மு.க., மோதல் :அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்புபார் ஏலத்தில் அ.தி.மு.க.,- தி.மு.க., மோதல் :அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்பு
பார் ஏலத்தில் அ.தி.மு.க.,- தி.மு.க., மோதல் :அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்பு
பார் ஏலத்தில் அ.தி.மு.க.,- தி.மு.க., மோதல் :அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்பு
பார் ஏலத்தில் அ.தி.மு.க.,- தி.மு.க., மோதல் :அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்பு
ADDED : ஜூலை 27, 2011 01:24 AM
நாமக்கல்: நாமக்கல்லில் நடந்த டாஸ்மாக் பார் ஏலத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க., தி.மு.க.,வினரிடையே மோதல் ஏற்பட்டது.
இருதரப்பினரையும், போலீஸார் சமரசம் செய்து கலைத்தனர். அசம்பாவிதம் தவிர்க்க, போலீஸார் குவிக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், 234 டாஸ்மாக் கடைகள் பார் வசதியுடன் செயல்பட்டு வருகிறது. அந்த பார்களுக்கான ஒப்பந்த காலம், ஜூலை மாதத்துடன் முடிகிறது. மீண்டும் பார் ஏலம் விடுவதாக, கடந்த, 8ம் தேதி அறிவிக்கப்பட்டது. டெண்டரில் பங்கேற்ப்போருக்கு, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் வினியோகம் செய்யப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம், டி.டி.,யுடன் இணைத்து, டெண்டர் பெட்டியில் போடுவதற்கு, 26ம் தேதி மாலை 3 மணியுடன் முடிகிறது என அறிவிக்கப்பட்டது. அதன்பின், அன்று மாலை 4 மணியளவில் டெண்டர் நடத்தப்படும் என, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டது. விண்ணப்ப படிவம் போடுவதற்கு நேற்று கடைசி நாள் என்பதால், திருச்செங்கோடு சாலை, பொரசப்பாளையத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன் ஏராளமானோர் குவிந்தனர். குறிப்பாக, ஆளுங்கட்சியினர் அதிகளவில் இருந்தனர். இந்நிலையில், காலை 11.30 மணியளவில், நாமக்கல்லைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகரான வக்கீல் ரமேஷ் உட்பட அக்கட்சியினர் சிலர் டெண்டரில் பங்கேற்பதற்கான விண்ணப்ப படிவம் எடுத்துக் கொண்டு, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தினுள் நுழைய முற்பட்டனர். அதற்கு, அங்கிருந்த அ.தி.மு.க.,வினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து, அவர்களை முற்றுகையிட்டனர். அதனால், அ.தி.மு.க., தி.மு.க.,வினரிடையே கடும் வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. மாவட்ட எஸ்.பி., பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில், நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணக்குமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இருதரப்பினரையும் சமரசம் செய்து கூட்டத்தைக் கலைத்தனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும், மாலை டெண்டர் நடைபெறும் வரை யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனிடையே, தி.மு.க., பிரமுகர் ரமேஷ் உள்ளிட்ட கட்சியினர், மாவட்ட எஸ்.பி.,யை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர். இதுகுறித்து தி.மு.க., பிரமுகர் வக்கீல் ரமேஷ் கூறுகையில்,''டாஸ்மாக் மதுபான பார்களுக்கான டெண்டர் அறிவிப்பு கடந்த, 8ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் வினியோகிக்க வேண்டும். ஆனால், நாங்கள் விண்ணப்பம் கேட்டதற்கு, எங்களுக்கு வழங்கவில்லை. தவிர, நேற்று முன்தினம் ஒரு மணி நேரம் மட்டும் இணையதளத்தில் விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டது. இன்று (நேற்று) விண்ணப்படிவத்துடன் டி.டி.,யை இணைத்து டெண்டர் பெட்டியில் போடச் சென்றபோது, அ.தி.மு.க.,வினர் இடைமறித்து எங்களது படிவங்களை கிழித்து போட்டுவிட்டனர். அலுவலகத்தினுள் செல்ல அனுமதிக்கவில்லை. அதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் செய்துள்ளோம்,'' என்றார்.