
தமிழக காங்., செய்திக்குறிப்பு: தமிழக காங்., தலைவர் தங்கபாலு, நேற்று காலை 11 மணிக்கு, பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கை, டில்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
டவுட் தனபாலு: என்னது...? அரை மணி நேரம் பேசினாரா...? நம்பவே முடியலையே... உண்மையைச் சொல்லுங்க, இலங்கை பிரச்னை பத்தி பேசினீங்களா; உங்க பதவிப் பிரச்னை பத்தி பேசினீங்களா...? ஒருவேளை, ஒரு நிமிஷம் சந்திச்சுட்டு, 29 நிமிஷம் காத்திருக்க வச்சிருப்பாரோ...!
மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்: ஒரு வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவருக்காக ஆஜராகும் வழக்கறிஞர், தன் கட்சிக்காரருக்கு உதவ, தன்னால் என்ன முடியுமோ, அதைச் செய்வார். இதனால் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றி, அவர் கவலைப்பட மாட்டார்.
டவுட் தனபாலு: ராஜா வாதத்தால ரொம்ப பாதிக்கப்பட்டுட்டீங்க போலத் தெரியுதே... அப்போ, கனிமொழியைக் காப்பாத்துறதுக்காக, அவரது வக்கீல் ராம் ஜெத்மலானியும் என்னென்னவோ வாதம் பண்ணிட்டிருந்தாரே... அதுவும் அப்படித்தானா...?
தி.மு.க., தலைவர் கருணாநிதி: சமச்சீர் கல்வி பற்றி அரசுக்கு பரிந்துரைகளைத் தருவதற்காக, பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில், கல்வியாளர்களைக் கொண்ட ஒரு குழுவை எங்கள் அரசு அமைத்தது.
டவுட் தனபாலு: சரி... அமைச்சீங்க... அந்தக் குழு, தன் பரிந்துரைகளைத் தந்தது... அந்தப் பரிந்துரைகள்ல எத்தனை பரிந்துரைகளை ஏத்துக்கிட்டீங்க...? அதைச் சொல்லுங்க முதல்ல...! 100 பரிந்துரை கொடுத்தா, அதுல நாலைஞ்சு மட்டும் ஏத்துக்கிட்டு, சமச்சீர், சமச்சீர்னா என்ன அர்த்தம்...?