பூகம்பம் பாதித்த பகுதிகளை பார்த்தார் ராகுல் : 400 சுற்றுலா பயணிகள் வெளியேற முடியாமல் தவிப்பு
பூகம்பம் பாதித்த பகுதிகளை பார்த்தார் ராகுல் : 400 சுற்றுலா பயணிகள் வெளியேற முடியாமல் தவிப்பு
பூகம்பம் பாதித்த பகுதிகளை பார்த்தார் ராகுல் : 400 சுற்றுலா பயணிகள் வெளியேற முடியாமல் தவிப்பு
ADDED : செப் 21, 2011 11:22 PM

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, காங்கிரஸ் தலைவர் ராகுல் நேற்று பார்வையிட்டார். இதற்கிடையே, சிக்கிமில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், 400 சுற்றுலா பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், கடந்த 19ம் தேதி பூகம்பம் ஏற்பட்டது.பூகம்பத்தில் இதுவரை 112 பலியாகியுள்ளனர்; ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். சிக்கிமில் மட்டும் 73 பேரும், மேற்குவங்கத்தில் 12 பேரும், பீகாரில் ஒன்பது பேரும் பலியாகியுள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. நிலச்சரிவில் ஆறு மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று மின் நிலையங்களில் மின் சீரமைப்பு பணி முடிவடைந்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், வெடிகுண்டு வைத்து பாறைகள் தகர்க்கப்பட்டு, சாலைகளில் வழி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ராணுவ பொறியாளர்கள் செய்து வருகின்றனர். வீடுகளை இழந்துள்ளவர்களுக்கு தற்காலிக கூடாரங்கள் மற்றும் போர்வைகளை, மத்திய அரசு வழங்கியுள்ளது.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட 60 கிராமங்களில், 5,500 ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிக்கிமின் வடக்கு பகுதியில், 400 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு செல்லும் பாதையில், மண்ணும், பாறைகளும் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் மீட்பு: சிக்கிமில் மலைப்பாங்கான பகுதிகளில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதால், நிலச்சரிவின் காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட 35 சுற்றுலா பயணிகள், லாசங் பகுதியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். இதே போல, இப்பகுதியில் காயமடைந்த 26 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ராகுல் பார்வை: காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், சிலிகுரி அருகே உள்ள பாக்டோக்ரா விமான நிலையத்தில் வந்திறங்கி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் லிபிங் சென்றடைந்தார். லும்சே பகுதிகளை பார்வையிட்ட பின், மணிப்பாலில் உள்ள மருத்துவமனைக்கு சென்று, பூகம்பத்தால் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், அவர் மேகாலயா மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார். ராகுலுடன், சிக்கிம் முதல்வர் பவன்குமார் சாம்லிங்கும், பூகம்ப பகுதிகளை சுற்றி பார்த்தார். இதற்கிடையில், மேற்கு வங்கத்தில் பூகம்பம் பாதித்த பகுதிகளை முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பார்வையிட்டார். டார்ஜிலிங் மாவட்டத்தில், 15 பேர் வரை பூகம்பத்தில் பலியாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் இன்று பூகம்ப பகுதிகளை பார்வையிட உள்ளார்.
ரூ.3,400 கோடிக்குசேதம்: பூகம்பத்தால், மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் பகுதியில், ரூ.3,400 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 2,900 வீடுகள் முழுமையாகவும், 42 ஆயிரம் வீடுகளம் பாதி அளவும் சேதம் அடைந்துள்ளன.
சிலிகுரி நகரில், 1,100 வீடுகள் முழுமையாகவும், 47 ஆயிரம் வீடுகள் பகுதி அளவும் சேதமாகியுள்ளன. இந்நகரில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். டார்ஜிலிங்கின் கலீம்போங் மற்றும் மாங்போ மலைப்பகுதிகளில் உள்ள, நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் வாழ்ந்த வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.