கல்மாடியை நியமித்தது வாஜ்பாய் அரசு தான்: பா.ஜ.,வுக்கு அமைச்சர் மக்கான் அதிரடி பதில்
கல்மாடியை நியமித்தது வாஜ்பாய் அரசு தான்: பா.ஜ.,வுக்கு அமைச்சர் மக்கான் அதிரடி பதில்
கல்மாடியை நியமித்தது வாஜ்பாய் அரசு தான்: பா.ஜ.,வுக்கு அமைச்சர் மக்கான் அதிரடி பதில்

புதுடில்லி: வாஜ்பாய் அரசு தான், சுரேஷ் கல்மாடியை காமன்வெல்த் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமித்தது என, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக சுரேஷ் கல்மாடியை பிரதமர் அலுவலகம் நியமித்ததன் காரணமாக, 2,000 கோடி ரூபாய் தேவையில்லாமல் அவரால் செலவு செய்யப்பட்டுள்ளது என, மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான், நிருபர்களிடம் கூறியதாவது: சுரேஷ் கல்மாடியை காமன்வெல்த் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமித்தது, முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான். அவரது நியமனத்துக்கும் தற்போதைய பிரதமருக்கும் சம்பந்தம் இல்லை. இவரை ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமித்ததற்கு, அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் தத் கூட கேள்வி எழுப்பினார். மணி சங்கர் அய்யர் விளையாட்டுத் துறையை கவனித்த போது கூட, கல்மாடிக்கு அதிக அதிகாரம் கொடுத்ததை எதிர்த்தார். இவர்களால் கேள்வி கேட்க முடிந்ததே தவிர, வேறு எதையும் செய்ய முடியவில்லை. கல்மாடியை மாற்றும்படி காமன்வெல்த் கூட்டமைப்பிடம் முறையிட்டிருக்க வேண்டும். அல்லது இந்த விளையாட்டுப் போட்டியை ரத்து செய்திருக்க வேண்டும். அல்லது டில்லியில் காமன்வெல்த் போட்டி நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் மாற்றம் செய்திருக்க வேண்டும். இதை தான் நாங்கள் செய்திருக்க வேண்டும். முந்தைய அரசு கையெழுத்திட்ட சமாச்சாரம் என்பதால், நாங்கள் அதில் தலையிடவில்லை. காமன்வெல்த் ஊழல் குறித்து தற்போது கல்மாடி மீது குறை கூறுபவர்கள், அவர் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது ஒருமனதாக ஆதரித்துள்ளனர். இவ்வாறு அஜய் மக்கான் கூறினார்.
ஜாமின் மனு நிராகரிப்பு: டில்லியில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடந்தது. இந்த போட்டியின் போது, ஸ்கோர் போர்டு மற்றும் கடிகாரங்கள் வைப்பதற்காக, ஸ்விஸ் நிறுவனத்திடம் அதிக விலைக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கு முன்பாகவே, சம்பந்தப்பட்ட ஸ்விஸ் கடிகார நிறுவனத்துக்கு, அதிக விலைக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக பரிதாபாத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர்கள் அனில்குமார் மதன், புரு÷ஷாத்தம் தேவ் ஆர்யா, ஐதராபாத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் ஏ.கே.ரெட்டி ஆகியோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்கிடையே, இவர்கள் ஜாமின் கோரி, டில்லி ஐகோர்ட்டில் மனு செய்தனர். 'சி.பி.ஐ., விசாரணைக்கு ஒத்துழைக்காத இவர்கள், தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள். எனவே, இவர்களுக்கு ஜாமின் அளிக்க முடியாது' என, நீதிபதி முக்தா குப்தா தெரிவித்துள்ளார்.