Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பிரதமர் மோடிக்கு 75வது பிறந்தநாள்: கமென்ட் செய்து வாழ்த்து சொல்லுங்கள் வாசகர்களே!

பிரதமர் மோடிக்கு 75வது பிறந்தநாள்: கமென்ட் செய்து வாழ்த்து சொல்லுங்கள் வாசகர்களே!

பிரதமர் மோடிக்கு 75வது பிறந்தநாள்: கமென்ட் செய்து வாழ்த்து சொல்லுங்கள் வாசகர்களே!

பிரதமர் மோடிக்கு 75வது பிறந்தநாள்: கமென்ட் செய்து வாழ்த்து சொல்லுங்கள் வாசகர்களே!

UPDATED : செப் 18, 2025 04:06 AMADDED : செப் 17, 2025 12:02 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: 75வது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

உலகத் தலைவர்கள் வாழ்த்து


75வது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். இது குறித்த தகவலை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, அதிபர் டிரம்புக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

அதில், ''எனது நண்பர் அதிபர் டிரம்ப் அவர்களே... எனது 75வது பிறந்தநாளில் உங்கள் தொலைபேசி அழைப்பு மற்றும் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி'' என சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

மியான்மர் அதிபர் மின் அங் ஹிலாங்

75 வது பிறந்த நாளின் சிறப்பு நாளில், உங்கள் நல்ல ஆரோக்கியத்துக்கும், அனைத்து முயற்சிகளில் வெற்றி பெறவும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பதவியேற்றது முதல், உலகளவில் இந்தியாவின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவதற்கும், மக்களின் சமூக பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கு உங்களை அர்ப்பணித்து கொண்டீர்கள் என்பது பாராட்டத்தக்கது.

கயானா அதிபர் இர்பான் அலி

உங்களின் 75வது பிறந்தநாளின் மகிழ்ச்சியான சந்தர்பத்தில் எனது மனமார்ந்த மற்றும் அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் மக்களுக்கும், ஏழை நாடுகளுக்கும், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் சேவை செய்வதற்காக அசாதாரண பணியை நீங்கள் முன்னெடுத்துச் செல்லும் போது, ஆரோக்கியம், வலிமை மற்றும் கடவுளின் ஆசிர்வாதங்கள் கிடைக்கட்டும்.

டொமினிகா பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட்

டொமினிகா மக்கள் சார்பாக, பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கிறேன். பெருந்தொற்றின் போது உயிர்காக்க இந்தியா வழங்கிய உதவியையும், கால நிலை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான எங்கள் ஒத்துழைப்பையும் நாங்கள் மிகவும் மதிக்கிறோம். தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்புடன் இந்தியாவை வழிநடத்தும் போது, நீங்கள் தொடர்ந்து நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வெற்றியை பெற வாழ்த்துகிறேன்

ஆஸி., நியூசிலாந்து பிரதமர்கள் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு, ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனீஸ், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகியோர் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



நல்ல நண்பர்

தொழிலதிபர் பில் கேட்ஸ், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 'எனது நல்ல நண்பர் நரேந்திரா, உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் இந்தியாவுக்காக நிறைய சாதனை படைத்திருக்கிறீர்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

பிரமிக்கத்தக்க சாதனை

ரஷ்ய அதிபர் புடின் வெளியிட்ட பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில், 'பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா பிரமிக்கத்தக்க சாதனைகளை படைத்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

பூடான் பிரதமர் தோப்கே, பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், திபெத் மத தலைவர் தலாய் லாமா, ஈஷா யோகா நிறுவனர் சத்குரு உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய தொழில் துறையினர், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும், பிரதமர் நீண்ட ஆயுளுடன் நாட்டுக்கு சேவையாற்ற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கவர்னர் ரவி பிறந்தநாள் வாழ்த்து


பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் ரவி பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார்.

அவரது வாழ்த்துச்செய்தி: செப்டம்பர் 17ம் தேதி, 2025ம் ஆண்டு ஒரு முக்கியமான நாள். பிரதமர் மோடிக்கு 75 வயது ஆகிறது. குஜராத் முதல்வராக முதல் 14 ஆண்டுகள் மற்றும் பாரத பிரதமராக 2014 முதல் அவர் ஆற்றிய மொத்தம் 25 ஆண்டுகால ஆட்சியையும் இது குறிக்கிறது. இந்த 25 ஆண்டுகளில் அவர் ஆட்சி மற்றும் அரசியலின் தன்மையில் அற்புதமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். மேலும் சாமானிய மக்களில் குறிப்பாக வறியநிலை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதாவது கடைகோடி மனிதரின் வாழ்க்கையை மேம்படுத்தி தேசத்தின் பெருமை மற்றும் நம்பிக்கை உயர்த்தியுள்ளார்.

14 வருட பொறுப்பில்…!


2001இல் அவர் முதல்வராக பதவியேற்றபோது குஜராத், பல மாநிலங்களைப் போலவே, பெரிதும் சாதிக்காத மாநிலமாகவே இருந்தது. பொருளாதாரம் கடுமையான நிதிச்சுமைகளில் மூழ்கி, தொடர்ந்து நஷ்டத்தை ஏற்படுத்தும் அரசு நிறுவனங்களையே அதிகம் நம்பியிருந்தது, அதன் சட்டம் ஒழுங்கு பலவீனமான நிலையில் இருந்தது. குஜராத் பேரழிவு பூகம்பங்களையும சந்தித்தது. அதனால் புஜ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் புரட்டிப்போடப்பட்டன. மோடியின் 14 வருட தலைமைப் பொறுப்பில், குஜராத் அதன் அனைத்து சவால்களையும் சமாளித்ததுடன், நாட்டின் பொருளாதாரத்தில் முன்னணியில் இருந்தது. 'குஜராத் மாடல்' என்பது பிற அனைத்து மாநிலங்களும் பொறாமைப்படக்கூடியதாக மாறியது, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் மேம்பாடு உலகளவில் ஆராய்ச்சி செய்யக்கூடியதாகவும் ஆனது.

பொருளாதாரம்


2014ம் ஆண்டில், மோடி, மத்திய ஆட்சியின் தலைமையை ஏற்றுக்கொண்டபோது,

நமது பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தது, மலிந்து கிடந்த ஊழலால் மக்கள் சோர்வடைந்திருந்தனர், அதிகாரத்தில் இருந்தவர்கள் மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. 1947இல் உலகின் 6 வது பெரிய பொருளாதாரமாக இருந்த பாரதம், 2014 இல் 11 வது இடத்துக்குச் சென்றது. நாடு மிகவும் ஏழ்மை நிலைக்குச் சென்றது. இன்று நாம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார சக்தியாக விளங்கி விரைவில் மூன்றாவது பெரிய நாடாக மாறத் தயாராக இருக்கிறோம். உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமான பாரதம், கோவிட் 19-க்குப் பிறகு மீண்ட உலகளாவிய பொருளாதாரமீட்சி இயங்குசக்தியாக விளங்குகிறது.

பரம ஏழைகள்


2014ம் ஆண்டில், நமது மக்களில் 30%க்கும் அதிகமானோர் முழுமையான வறுமையில் வாடினர். கடந்த 11 ஆண்டுகளில், அவர்களில் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இன்று பரம ஏழைகள் 4% க்கும் குறைவாகவே உள்ளனர். அவர்களை விரைவில் வறுமையிலிருந்து மீட்க மோடி திடத்துடன் பாடுபட்டு வருகிறார். இன்று, உலகின் மிகக் குறைந்த அளவில் சமத்துவமின்மை காணப்படும் முதல் 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது உள்ளடக்கிய வளர்ச்சியின் அற்புதமான சாதனையாகும். 2014ம் ஆண்டில் இந்தியாவின் கிட்டத்தட்ட பாதி பகுதி இருளில் மூழ்கியிருந்தன. மின்சார வசதி சரியாக இல்லை. இன்று தன்னிறைவு காணப்படுகிறது. 100% மின்மயமாக்கப்பட்டுள்ளது.

சுகாதார பிரச்னை


2014ம் ஆண்டில், இந்தியாவின் சுமார் 60% பேர் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தினர். வீடுகளில் கழிப்பறைகள் இல்லை. இதனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள். அவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் மட்டுமின்றி இது ஒரு பெரிய பொது சுகாதார பிரச்னையாக இருந்தது. இன்று இந்தியா திறந்தவெளி கழிப்பிடமில்லா தேசமாகியுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறைகள் உள்ளன. 2014ம் ஆண்டில், கிட்டத்தட்ட 50% வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வசதி இருந்திருக்கவில்லை. நமது தாய்மார்கள் மற்றும் மகள்கள் தண்ணீர் எடுக்க நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. இன்று ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு தன்னிறைவை நெருங்கும் கட்டத்தில் உள்ளது.

வளர்ச்சியடைந்த பாரதம்


நமது பிரதமர் மோடியின் சகாப்தம் என்பது வெறும் அத்தியாயம் அல்ல, அது நமது நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு அங்கம். பல நூற்றாண்டுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் கூட அது நினைவுகூரப்படும். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு தெய்வீக அடையாளத்தின் மூலம், ஒரு வரலாற்றுப் பணியை நிறைவேற்ற, உலக நன்மைக்காக முழுமையான வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க இங்கே இருக்கிறார். நோக்கம் நிறைவேறும்வரை அவர் இங்கே நம்முடனேயே இருப்பார். எண்ணற்ற பாரதியர்களின் விருப்பம், வேண்டுதல்கள் மற்றும் உறுதியான நம்பிக்கையும் இதுவே. அவர்களுடன் இணைந்து நமது பிரதமருக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்க நானும் வேண்டிக்கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற இலக்கை நோக்கி இந்த மாபெரும் தேசத்தை அழைத்துச் செல்வாராக. பாரத தாய் வாழ்க. இவ்வாறு கவர்னர் ரவி கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்பி சசி தரூர்


பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவருக்கு இந்தாண்டு மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் அமைவதுடன், நாட்டுக்கு ஆற்றும் சேவையில் வெற்றி கிடைக்கட்டும்,

புத்த மதத் தலைவர் தலாய் லாமா


இந்தியாவில் நீண்ட காலம் தங்கியிருக்கும் விருந்தினராக, பல ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள தொலைநோக்கு வளர்ச்சி மற்றும் செழிப்பை நான் நேரில் பார்த்துள்ளேன். சமீப காலங்களில் அதிகரித்துள்ள நம்பிக்கை மற்றும் வலிமைக்கு நான் உங்களை வாழ்த்துகிறேன். இந்தியாவின் வெற்றி உலகளாவிய வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது

ராகுல் வாழ்த்து

''நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்'' என லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.




ஸ்டாலின் வாழ்த்து


பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்; அவர் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.



அதிமுக பொதுச்செயலாளர், இபிஎஸ் வாழ்த்து


உங்கள் (பிரதமர் மோடி) தொலைநோக்கு தலைமையும், தேசத்திற்கான அர்ப்பணிப்பும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஊக்கமளிக்கிறது. நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், நமது தேசத்தை வழிநடத்த தொடர்ந்து பலம் கிடைக்க வாழ்த்துகிறேன்.

தமிழக பாஜ தலைவர், நயினார் நாகேந்திரன்


மக்கள் பணியே மகேசன் பணி என்பதை மனதில் நிறுத்தி மக்கள் சேவைக்கு தன் வாழ்வையே அர்பணித்து மூன்றாவது முறையாக பிரதமராக சிறப்பாக செயலாற்றும் மக்கள் தலைவன், எளிய பின்னணியில் பிறந்து எட்டுத்திக்கிலும் போற்றப்படும் சரித்திர நாயகர் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று போல் என்றும் நீண்ட ஆயுளுடனும், பூரண நலத்துடனும் மேலும் பல்லாண்டு நமது பாரத தேசத்தை அவர் வழிநடத்திச் செல்ல வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நடிகர் ரஜினி


பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நாட்டை வழிநடத்தும் பலம் கிடைக்க வாழ்த்துகிறேன். ஜெய் ஹிந்த்.

தமிழக பாஜ முன்னாள் தலைவர், அண்ணாமலை


பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். தேசத்திற்கு அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவை முன்னேற்ற பாதையில் செல்ல வழிவகை செய்தது. இந்தியாவை மேன்மேலும் பெருமையை நோக்கி அழைத்துச் செல்ல அவருக்கு நல்ல ஆரோக்கியமும், நீண்ட நாள் ஆயுளும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

தருமபுரம் ஆதீனம் வாழ்த்து


பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் வாழ்த்து தெரிவித்தார். அவரது வாழ்த்து செய்தி:

பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் நமது தேசத்தை முன்னேற்ற பாதையிலும், அமைதியின் பாதையை நோக்கியும் அழைத்துச் செல்லும்போது, ​​சிவபெருமான் உங்களை ஞானத்துடனும், வலிமையுடனும் தொடர்ந்து வழிநடத்தட்டும்.

ஞானம், தைரியம் மற்றும் இரக்கத்துடன் தேசத்திற்கு தொடர்ந்து சேவை செய்ய உங்களுக்கு ஆரோக்கியம், வலிமை மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்கட்டும். வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற உங்கள் கனவு நிறைவேறட்டும்.


கமென்ட் செய்யுங்கள்


பிரதமர் மோடிக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. வாசகர்களும் இங்கு கமென்ட் செய்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.



நல்லாட்சிக்கு சாட்சி

பிரதமர் மோடி இன்று (செப் 17) 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சிறந்த நிர்வாகியான இவர், நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். இவரது ஆட்சியில் 31ஆயிரம் கி.மீ., துார ரயில்பாதை, 55,000 கி.மீ., துார தேசிய நெடுஞ்சாலை, வந்தே பாரத் ரயில், 76 விமான நிலையங்கள் தொடங்கப்பட்டன. உலகின் உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலை (598 அடி, குஜராத்), உலகின் உயரமான இடத்தில் 'அடல்' சுரங்கப்பாதை (ஹிமாச்சல்),

ஆசியாவின் நீளமான சுரங்கப்பாதை (14.2 கி.மீ., லடாக்) உலகின் உயரமான செனாப் ரயில் பாலம் (1178 அடி, காஷ்மீர்), இந்தியாவின் முதல் செங்குத்து துாக்கு கடல் பாலம் (பாம்பன், ராமேஸ்வரம்), நாட்டின் நீளமான பாலம் (21 கி.மீ., மும்பை) கட்டப்பட்டன. மும்பை - ஆமதாபாத் இடையே அதிவேக புல்லட் ரயில் சேவை விரைவில் வர உள்ளது.

ஊழலற்ற, நேர்மையான நிர்வாகம், பாதுகாப்பிற்கு முக்கியத்துவம், துணிச்சலான முடிவு, மக்கள் நலனுக்கான திட்டங்கள் போன்றவை இவரது நல்லாட்சிக்கு சாட்சி.

வெற்றிப் பயணம்


பெயர் : நரேந்திர மோடி

பிறந்த நாள் : 17.9.1950

பிறந்த இடம் : வாத் நகர், குஜராத்

தந்தை : தாமோதர்தாஸ் மோடி

தாயார் : ஹீராபென்

கல்வி : எம்.ஏ., அரசியல் அறிவியல்

1972 : ஆர்.எஸ்.எஸ்.,ல் சேர்ந்தார்

1987 : பா.ஜ., வில் இணைந்தார்

1995 : தேசிய செயலர்

1998 : பா.ஜ., பொதுச்செயலர்

2001-14

தொடர்ந்து 4 முறை குஜராத் முதல்வர் (12 ஆண்டு, 7 மாதம்)

2014ல் இருந்து தொடர்ந்து 3 முறை பிரதமர் (11 ஆண்டு, 4 மாதம்)

24 ஆண்டு ராஜ்ஜியம்


குஜராத் முதல்வர் (2001-2014) பிரதமர் (2014- - 2025) என 24 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கிறார் மோடி.

2001 -அக். 7 - குஜராத் முதல்வர்

2002 இடைத்தேர்தல் ராஜ்கோட்எம்.எல்.ஏ.,

2002 மணிநகர்எம்.எல்.ஏ.,

2007 மணிநகர் எம்.எல்.ஏ.,

2012 - மணிநகர் எம்.எல்.ஏ.,

2014 -வதோதரா எம்.பி., (ராஜினாமா)

2014 - வாரணாசி எம்.பி.,

2019 - வாரணாசிஎம்.பி.,

2024 - வாரணாசி எம்.பி.,

மூன்றாவது பிரதமர்

பதவிக்காலத்தில் 75வது பிறந்த நாளை கொண்டாடும் மூன்றாவது பிரதமர் மோடி. இதற்கு முன் வாஜ்பாய் (1999ல்), மன்மோகன் சிங் (2007ல்) கொண்டாடினர்.

கடின உழைப்பு

குஜராத் முதல்வர், பிரதமராக ஒருநாள் கூட விடுமுறை எடுக்காதவர் மோடி. பொதுவாக பிரதமராக இருந்தவர்கள், மதியம் அல்லது மாலை அலுவலகத்தை விட்டு வெளியேறிவிடுவர். காலை முதல், நள்ளிரவு வரை பணியாற்றுவார் மோடி.

முதல் முறை


* இந்தியா சுதந்திரம் அடைந்த பின் பிறந்து, பிரதமரான முதல் தலைவர்.

* முதன்முறை எம்.பி.,யான போதே பிரதமரானவர்.

* சுதந்திர தின விழாவில் திறந்தவெளி மேடையில் உரை நிகழ்த்திய முதல் பிரதமர்.

* நீண்ட நேரம் சுதந்திர தின உரை (2025, 103 நிமிடம்) நிகழ்த்திய பிரதமர்.

* அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்ற முதல் பிரதமர். (2024 ஜன. 22)

* நீண்ட காலம் (11 ஆண்டு, 4 மாதம்) பதவி வகிக்கும் காங்., அல்லாத முதல் பிரதமர்.

இரண்டாவது பிரதமர்

தொடர்ந்து நீண்டகாலம் (11 ஆண்டு 4 மாதம்) பதவி வகிக்கும் இரண்டாவது பிரதமர் மோடி.

புதிய முயற்சி

பிரதமர் மோடி செய்த சில சீர்திருத்தங்கள்:

* திட்டக்குழு - நிதி ஆயோக். இதில் மாநில முதல்வர்கள் உறுப்பினராக இருப்பதால், அந்தந்த மாநிலத்துக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

* பல்வேறு வரிகளை ஒன்றிணைத்து ஜி.எஸ்.டி., கொண்டு வரப்பட்டது.

* 'ஒன் ரேங்க் ஒன் பென்ஷன்' என்ற முன்னாள் ராணுவத்தினரின், 43 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றினார்.

* இந்தியாவின் 100 நகரங்கள் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

* தொலைநோக்கு பார்வையோடு புதிய பார்லிமென்ட் கட்டப்பட்டது.

* நிலவில் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்கியது, சர்வதேச விண்வெளி மையத்துக்கு முதன்முறையாக இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா சென்றது என பல விண்வெளி சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

* காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டு, வளர்ச்சி பணிகள் முடுக்கி விடப்பட்டன.

* கொரோனா தடுப்பூசியை நம் நாட்டிலேயே தயாரித்து மக்களின் உயிரை காத்தார்.

ஆடையில் கவனம்

நேர்த்தியாக ஆடை அணிவதில் சிறப்பு கவனம் செலுத்துவார். சிறுவயதில் ஏழ்மையில் இருந்தபோதும், சுத்தமாக 'அயர்ன்' செய்த ஆடைகளை அணிந்தார்.

பாதுகாப்பு வலிமை

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆப்பரேஷன் சிந்துார்' மூலம் பாகிஸ்தானில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. விமான தளங்களும் தகர்க்கப்பட்டன.

முத்தான சாதனைகள்

* பிரதமர் மோடியின் ஆட்சியில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

* ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 50 கோடி பேருக்கு மருத்துவ காப்பீடு வசதி.

* 'ஜன்தன் யோஜனா' திட்டத்தில் 51 கோடி பேருக்கு வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டது.

* 'ஆதார் - அலைபேசி' இணைப்பால் சமூக நலத்திட்டங்கள் விரைவாக மக்களுக்கு கிடைத்தது.

* 10 கோடி பெண்களுக்கு இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டது.

* 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டது.

* இலவசமாக 4.2 கோடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன.

* விவசாயிகளுக்கு உதவும் வகையில் 'பி.எம்.கிசான்' திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. 9.2 கோடி விவசாயிகள் பயன் பெறுகின்றனர்.

* 'மேக் இன் இந்தியா' திட்டத்தால் உள்நாட்டிலேயே பல்வேறு துறைகளில் உற்பத்தி தொடங்கப்பட்டது.

* பிரதமர் மோடியின் முயற்சியில் ஜூன் 21ல் சர்வதேச யோகா தினம் தொடங்கப்பட்டது.

* வருமான வரி உச்ச வரம்பு ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டது.

தேசம் முக்கியம்

பிரதமர் மோடிக்கு நாட்டுப்பற்று அதிகம். தேர்தல் பிரசாரத்தில் கூட 'தாய்நாட்டுக்கு ஓட்டளியுங்கள்' என கேட்பார். 'பாரத் மாதா கி ஜெ, ஜெய்ஹிந்த், வந்தே மாதரம்' என முழக்கமிடுவார். சிறு வயதில் ராணுவ வீரராக வேண்டும் என்பதே இவரது லட்சியம்.

பிரதமரான பின் ஒவ்வொரு தீபாவளியையும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். பிறந்த நாளில் தாய் ஹீராபென் காலில் விழுந்து ஆசி பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தார். 99 வயதில் (2022) தாயார் காலமானது இவரது வாழ்க்கையில் ஏற்பட்ட பேரிழப்பு.

தமிழ் மீது ஆர்வம்

தமிழ் மொழி மீது பிரதமர் மோடிக்கு ஆர்வம் அதிகம். ஐ.நா., சபையில் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என புறநானுாற்று பாடலை மேற்கோள் காட்டி பேசி தமிழுக்கு பெருமை சேர்த்தார். 2019ல் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மாமல்லபுரத்தில் சந்தித்த போது, தமிழ் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து வரவேற்றார். புதிய பார்லிமென்ட்டில் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டது. அரியலுாரில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வருகை தந்து சோழர்களின் ஆட்சியை பாராட்டினார். துணை ஜனாதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட காரணமாக இருந்தார்.


குவிந்த விருது


பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் பூடான் (2014). இதுவரை 78 நாடுகளுக்கு சென்றுள்ளார். அதிகபட்சமாக அமெரிக்காவுக்கு பத்து முறை சென்றுள்ளார். 2014 - 2018 காலக்கட்டத்தில் ரூ. 14 லட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு கிடைத்தது. தெளிவான வெளியுறவு கொள்கையில் இந்தியாவுக்கு வலிமை சேர்த்தார். தற்போது இந்திய பாஸ்போர்ட் வைத்து, 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். இவரது தலைமை பண்பு, ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு அங்கீகாரமாக அமெரிக்கா, ரஷ்யா, சவுதி, குவைத், பிரேசில் உட்பட உலகின் 27 நாடுகள் விருது வழங்கி கவுரவித்துள்ளன. 'எக்ஸ்' தளத்தில் அதிகம் பேர் பின்பற்றும் உலகத் தலைவர் பட்டியலில் ஒபாமா(13.03 கோடி), டிரம்ப்க்கு (10. 92 கோடி) அடுத்து மூன்றாவது இடத்தில் மோடி (10.90 கோடி) உள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us