பழிவாங்கும் போக்கு கொண்டிருக்கிறது அரசு:அன்னா ஹசாரே
பழிவாங்கும் போக்கு கொண்டிருக்கிறது அரசு:அன்னா ஹசாரே
பழிவாங்கும் போக்கு கொண்டிருக்கிறது அரசு:அன்னா ஹசாரே

ஊழல் எதிர்ப்பு போராட்டம் நடத்தி ஜன் லோக்பால் கொண்டு வர போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் ஹசாரே. உண்ணாவிரதம் முடிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அன்னா ஹசாரே, இரு நாட்களுக்கு முன், தனது சொந்த கிராமத்திற்கு திரும்பினார். அவருக்கு, கிராம மக்கள் சார்பில், மிகப்பெரிய பாராட்டு விழா நேற்று நடந்தது.
விழாவில், அன்னா ஹசாரே பேசியதாவது:தற்போதைய மத்திய அரசு, சூது வாது நிறைந்த ஏமாற்றுக் கூட்டத்தினர் நிறைந்ததாக இருக்கிறது. என்னை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவே அனுமதிக்கவில்லை. டில்லியைச் சுற்றியுள்ள அனைத்து மைதானங்களிலும் பல்வேறு தடையாணைகளை அமல்படுத்தினர். இறுதியாக, பல்வேறு முன் நிபந்தனைகளுடன் ஜே.பி., பார்க்கில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி வழங்கினர்.
பின்னர், இரண்டு மணி நேரம் கழித்து விடுவித்தனர். மேலேயிருந்து உத்தரவு வந்தது என்று போலீசார் தெரிவித்தனர். மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஒரு குடைச்சல் பேர்வழி. அடுத்தடுத்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. எனது ஆதரவாளரான கெஜ்ரிவாலுக்கு எதிராக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டால், நாங்கள் வேறுவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதிர்ச்சியான தொடர் போராட்டங்களை மேற்கொண்டால் மட்டுமே, மத்திய அரசை வளைக்க முடியும். இந்தியாவை ஊழலற்ற நாடாக மாற்ற முடியும். வெள்ளைக்காரர்களிடமிருந்து நாட்டை மீட்ட பிறகு, கடந்த 64 ஆண்டுகளில் எவ்வித மாற்றமும் வரவில்லை. ஊழல், கொள்ளை, பயங்கரவாதம் தான் வளர்ந்துள்ளது.வேறு என்ன சாதித்து விட்டோம்.
பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் உட்பட அனைவரும், இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்கான எழுச்சியை அணையாமல் தொடர்ந்து, பாதுகாக்க வேண்டும். என்னைப் பின்பற்றி ஆதரவாளர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 'வெறும் காந்தி குல்லாய் அணிந்து கொள்வதால் மட்டும் நீங்கள் அன்னா ஹசாரே ஆகிவிட முடியாது. தூய சிந்தனை, செயல்பாடு மற்றும் தியாக உணர்வு போன்றவை தான் உங்களிடம் இருக்க வேண்டும்.என்னுடைய போராட்டத்தில் பங்கெடுத்த அனைத்து தரப்பு மக்களுக்கும் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் நாம் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டும்.
இந்தப் போராட்டம் வெற்றி பெற்றாலும், பலமான லோக்பால் அமைப்பை உருவாக்குவதில், மத்திய அரசுக்கு துளியும் அக்கறை இல்லை என்பது தான் உண்மை.இவ்வாறு அன்னா ஹசாரே பேசினார்.