/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/திற்பரப்பு அருவி சுற்றுலா விழா நாளை துவக்கம்திற்பரப்பு அருவி சுற்றுலா விழா நாளை துவக்கம்
திற்பரப்பு அருவி சுற்றுலா விழா நாளை துவக்கம்
திற்பரப்பு அருவி சுற்றுலா விழா நாளை துவக்கம்
திற்பரப்பு அருவி சுற்றுலா விழா நாளை துவக்கம்
ADDED : செப் 09, 2011 12:44 AM
திற்பரப்பு : திற்பரப்பு அருவி சுற்றுலா விழா நாளை(10ம் தேதி) துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியில் திருவோண பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் சுற்றுலா விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நாளை(10ம் தேதி) துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நாளை மாலை 4 மணிக்கு திற்பரப்பு வாகனம் நிறுத்தும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விழா பந்தலில் நடக்கும் துவக்க விழாவிற்கு கலெக்டர் மதுமதி தலைமை வகிக்கிறார். மாவட்ட சுற்றுலா அலுவலர் முரளிதேவி வரவேற்கிறார். வனத்துறை அமைச்சர் பம்சைமால் குத்துவிளக்கேற்றி, கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து பேசுகிறார். விழாவில் ஹெலன் டேவிட்சன் எம்.பி., புஸ்பலீலா ஆல்பன் எம்.எல்.ஏ., திற்பரப்பு பஞ்., தலைவி பிறேமா முன்னிலை வகிக்கின்றனர். எம்.எல்.ஏ., க்கள் நாஞ்சில் முருகேசன், பிரின்ஸ், விஜயதரணி, மாவட்ட பஞ்., தலைவி அஜிதா மனோதங்கராஜ், கடையல் பஞ்., தலைவர் ஜார்ஜ் ஸ்டீபன், மாவட்ட ஊரக விரிவாக்க முதன்மை திட்ட இயக்குனர் மந்திராச்சலம், மகளிர் திட்ட இயக்குனர் முனியசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவகுமார், பஞ்., கவுன்சிலர் கிருஷ்ணவேணி பேசுகின்றனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் சோமசுந்தரம் நன்றி கூறுகிறார். தொடர்ந்து சேராத்து குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக மாலை 3.30 மணிக்கு களியல் ஜங்ஷனில் இருந்து சிங்காரி மேளத்துடன் துவங்கும் சுற்றுலா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் மதுமதி துவக்கி வைக்கிறார். பேரணி திற்பரப்பு அருவியில் நிறைவடைகிறது. இரண்டாம் நாள் காலை 10 மணிக்கு அத்தப்பூ போட்டி, பெண்களுக்கான சமயல் போட்டி, மாலை 6 மணிக்கு முரசு கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடக்கிறது. மூன்றாம் நாள் காலை 10 மணிக்கு கபடிப்போட்டி, வாலிபாள் போட்டி, படகில் சென்று வாத்து பிடிக்கும் போட்டி நடக்கிறது. மாலை 5 மணிக்கு நடக்கும் நிறைவு விழாவில் பஞ்., உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் வரவேற்கிறார். மாவட்ட கலெக்டர் மதுமதி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கி, பேசுகிறார். பஞ்., அலுவலர் ராமசாமி பிள்ளை நன்றி கூறுகிறார். கிருஷ்ணா மெல்லிசை குழுவின் இன்னிசை நடக்கிறது.
நாளை துவங்கும் அருவி விழா குறித்த அழைப்பிதழ்கள் நேற்று வரை திற்பரப்பு பகுதியில் வினியோகிக்கப்படவில்லை. மேலும் சுற்றுப்புற பகுதியில் போதிய விளம்பரங்கள் செய்யப்படவில்லை. விழா நடக்கும் வேளையில் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. இதற்கு சிற்றார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வீட்டு, விழா நாட்களில் அருவியில் அதிகளவு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளப்பெருக்கில் ஏற்பட்ட சேதங்களை கலெக்டர் ஆய்வை தொடர்ந்து பராமரித்து வரும் வேளையில் அருவி விழா நடத்துவது ஆறுதலாக உள்ளது.