Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ மூன்று நாள் தியானம் நிறைவு புதுடில்லி சென்றார் பிரதமர்

மூன்று நாள் தியானம் நிறைவு புதுடில்லி சென்றார் பிரதமர்

மூன்று நாள் தியானம் நிறைவு புதுடில்லி சென்றார் பிரதமர்

மூன்று நாள் தியானம் நிறைவு புதுடில்லி சென்றார் பிரதமர்

ADDED : ஜூன் 01, 2024 09:31 PM


Google News
நாகர்கோவில்:கன்னியாகுமரியில் மூன்று நாள் தியானத்தை முடித்த பிரதமர் நரேந்திர மோடி, திருவனந்தபுரம் வழியாக புதுடில்லி புறப்பட்டு சென்றார்.

சுவாமி விவேகானந்தர் தவம் செய்த கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி, மே 30ம் தேதி மாலை வந்தார்.

அன்று சிறிது நேரம் தியானம் மேற்கொண்ட பின் ஓய்வு எடுத்தார். நேற்று முன்தினம் நாள் முழுதும் தியானத்தில் ஈடுபட்டார்.

உடற்பயிற்சி


நேற்று காலை 5:50 மணிக்கு அறையில் இருந்து காவி உடை அணிந்தபடி மோடி வெளியில் வந்தார். மேக மூட்டத்தால் சூரியன் தெரிவதற்கு சற்று தாமதம் ஏற்பட்டாலும், சூரிய நமஸ்காரம் நடத்தினார்.

பின், கமண்டலத்தில் இருந்த புனித நீரை கடலில் ஊற்றி, விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி வந்து நடைபயிற்சி செய்தார்.

அங்குள்ள படிகளில் மேலேயும், கீழேயும் இறங்கி சிறிய அளவிலான உடற்பயிற்சியையும் மேற்கொண்டார். கன்னியாகுமரி பகவதி அம்மனின் கால் தடம் பதிந்துள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் அமர்ந்து கடல் அழகை ரசித்தார். தொடர்ந்து, தியான மண்டபத்தில் பகல் 1:30 மணி வரை தியானம் செய்தார்.

தியானத்தை முடித்த அவர், விவேகானந்தர் சிலையின் பாதத்தை தொட்டு வணங்கி மலர் துாவி மரியாதை செலுத்தினார். விவேகானந்தா கேந்திர ஊழியர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

படகு போக்குவரத்து


மதிய உணவுக்கு பின், 3:00 மணிக்கு படகு வாயிலாக திருவள்ளுவர் சிலைக்கு சென்றார். திருவள்ளுவர் சிலையின் பீடத்துக்கு சென்ற அவர், திருவள்ளுவர் பாதத்தில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

படகு வாயிலாக கரைக்கு வந்த அவர், காரில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார்.

அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர், மாலை 3:50 மணிக்கு ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து புதுடில்லி சென்றடைந்தார்.

பிரதமர் மோடி, 45 மணி நேரம் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் இருந்தார். பெரும்பாலான நேரத்தையும் அவர் தியானம் செய்வதிலேயே கழித்தார்.

தென் மாநில உணவு வகைகள் அவருக்கு தயாரித்து அனுப்பப்பட்டாலும், அவற்றை எடுத்துக் கொள்ளாமல் திரவ வகை உணவுகளை உட்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று காலை படகு போக்குவரத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது. மதியம் 12:30 மணிக்கு மீண்டும் படகு சேவை நிறுத்தப்பட்டது.

பிரதமர் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் இருப்பதை அறிந்த வட மாநில சுற்றுலா பயணியர், 'ஜெய் ஸ்ரீராம், ஜெய் மோடி' என்று கோஷமிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us