PUBLISHED ON : செப் 08, 2011 12:00 AM

அறிவுக் கண் திறக்கும் ஆசிரியர் : பார்வை பாதிக்கப்பட்ட நிலையிலும் கல்வி போதிப்பதற்காக பதவியிறக்கம் கேட்டு பணிபுரியும் ஆசிரியர் ஜார்ஜ்: இரண்டு ஆண்டுகளுக்கு முன் போராங்கோடு அரசு நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்த போது, சர்க்கரை நோய் பாதிப்பினால் கண்களில் நீர்க்கட்டு ஏற்பட்டு பார்வை முற்றிலும் மங்கிவிட்டது.
பார்வை நரம்புகளில் ஏற்பட்ட பாதிப்பினால், பார்வையை மீளச்செய்வது கடினம் என, மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.ஓய்வு பெற்று வீட்டிலேயே முடங்கிப்போவதற்கு விருப்பமில்லாமல், பதவியிறக்கம் கேட்டு, தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்ற அனுமதி பெற்றேன். முன்பு காரைக்குடியில் ஒன்றரை ஆண்டுகளாக தலைமையாசிரியராகப் பணியாற்றி விட்டு, தற்போது நாகர்கோவில் அருகேயுள்ள பறக்கை அரசு தொடக்கப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பிற்கு பாடம் எடுக்கிறேன்.கிராமங்களில் இருந்து, இங்கு படிக்க வரும் அடித்தளத்துக் குழந்தைகளுக்கு தரம் வாய்ந்த கல்வியை வழங்க, நான் விரும்பித் தேர்ந்தெடுத்த பணி இது. இங்கு பயிலும் ஒவ்வொரு குழந்தையையும், என் பிள்ளையாகக் கருதி நான் பாடம் கற்பித்து வருகிறேன். புதிய தலைமுறையின் வளர்ச்சிக்கு என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற என்னுடைய எண்ணமே, பார்வை போன பின்னும் பணியாற்ற வைக்கிறது.நான் பெற்ற கல்வியை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனும் முனைப்போடு, கல்வித்துறை அனுமதி பெற்று என் பணியைத் தொடர்கிறேன். ஒவ்வொரு குழந்தையிடமும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைப்பதால், அவர்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான கல்வியை என்னால் வழங்க முடிகிறது.