Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கிறிஸ்தவ பள்ளியை மிரட்டி வாங்கியதாக ஸ்டாலின் மைத்துனர் மீது போலீசில் புகார்

கிறிஸ்தவ பள்ளியை மிரட்டி வாங்கியதாக ஸ்டாலின் மைத்துனர் மீது போலீசில் புகார்

கிறிஸ்தவ பள்ளியை மிரட்டி வாங்கியதாக ஸ்டாலின் மைத்துனர் மீது போலீசில் புகார்

கிறிஸ்தவ பள்ளியை மிரட்டி வாங்கியதாக ஸ்டாலின் மைத்துனர் மீது போலீசில் புகார்

ADDED : ஜூலை 12, 2011 12:25 AM


Google News

மயிலாடுதுறை : நாகை அருகே, கிறிஸ்துவ அறக்கட்டளை நடத்தி வந்த பள்ளியை, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினின் மைத்துனர் மிரட்டி, அவரது மனைவி பெயரில் வாங்கியுள்ளதாக, நாகை எஸ்.பி., அலுவலகத்தில் மதபோதகர் புகார் அளித்துள்ளார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த, திருவெண்காட்டைச் சேர்ந்தவர் ராஜமூர்த்தி. டாக்டர். இவர் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவின் சகோதரர்.



ராஜமூர்த்தி கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம், குத்தாலம் செயின்ட் மேரிஸ் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான, செயின்ட் மேரிஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியை, அதன் அறக்கட்டளை நிர்வாகியை மிரட்டி தனது மனைவி ஹேமலதா பெயரில் எழுதி வாங்கியதாக, நாகை எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள சிறப்பு பிரிவில், மதபோதகர் குணசீலன், 45, என்பவர் நேற்று புகார் மனு அளித்தார்.



போலீசில் மனு அளித்த மதபோதகர் குணசீலன் கூறியதாவது: மயிலாடுதுறை அடுத்த குத்தாலத்தை சேர்ந்த பொன்ராஜ் என்பவர் கடந்த 1980ம் ஆண்டு, செயின்ட் மேரிஸ் கல்வி அறக்கட்டளையை நிறுவி, அதன் மூலம் செயின்ட் மேரிஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியை தொடங்கினார். புற்று நோயால் அவதிப்பட்ட பொன்ராஜ், கல்வி பணி தொடர வேண்டும் என்பதற்காக, கடந்த 2000ம் ஆண்டில் தனது மனைவி, உறவினர்கள் மற்றும் மதபோதகர் என்ற அடிப்படையில், என்னையும் சேர்த்து அறக்கட்டளை நிர்வாகிகளாக நியமித்தார். பின் பொன்ராஜ் இறந்து விட, அறக்கட்டளை சொத்துக்களை பொன்ராஜின் மனைவி ஸ்டெல்லா தலைமையிலான நிர்வாகிகள், நிர்வகித்து வந்தோம். இடையே நிர்வாகிகளில் இருவர் இறந்து விட்டனர். ஒருவர் அறக்கட்டளையிலிருந்து வெளியேறி விட்டார். கடைசியில் ஸ்டெல்லாவும், நானும் பள்ளியை நிர்வகித்து வந்தோம்.



பொன்ராஜ் இறக்கும் போது, எழுதிய உயிலில் இப்பள்ளியை விற்பனை செய்யக்கூடாது; நிர்வாக வசதிக்காக பழைய கட்டடத்தை விற்று விட்டு, அறக்கட்டளை நிர்வாகிகளின் சம்மதத்துடன் வேறு இடத்தை வாங்கி, அதில் பள்ளியை நடத்தலாம் எனவும் உள்ளது. மேலும், இந்த அறக்கட்டளை சொத்தை, இந்து மற்றும் இந்து அறக்கட்டளைக்கு விற்கக்கூடாது. அறக்கட்டளை நிர்வாகிகளாக நியமிக்கப்படுபவர்கள், ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டுமென்ற விதி உள்ளது.



கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்டெல்லாவிடம், திருவெண்காடு டாக்டர் ராஜமூர்த்தி, 1.5 கோடி ரூபாய்க்கு பள்ளியை தனது மனைவி ஹேமலதா பெயரில் வாங்கியுள்ளார். அதனை தொடர்ந்து அறக்கட்டளை தலைவராக டாக்டர் ராஜமூர்த்தியும், அவரது மனைவி ஹேமலதா பள்ளி தாளாளராகவும், உறுப்பினராக ஹேமலதாவின் தந்தை மதன்மோகனும் பொறுப்பேற்றனர். அறக்கட்டளை சொத்தை விற்க, நான் எதிர்ப்பு தெரிவித்ததால் அடியாட்கள் மூலம் என்னை தாக்கி, கடத்தி சென்று கட்டாயப்படுத்தி பத்திரப்பதிவில் கையெழுத்து வாங்கினர். இது பற்றி அப்போது போலீசில் புகார் கொடுத்தேன். டாக்டர் ராஜமூர்த்தி முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினின் மைத்துனர் என்பதால் எனது புகாரை போலீசார் ஏற்கவில்லை.



இது தொடர்பாக, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதையடுத்து பிரச்னை ஏற்பட்டது. எனக்கும் எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பில்லாத சூழலில், மேற்கொண்டு எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருந்தேன். சட்டத்திற்கு புறம்பாக மிரட்டி எழுதி வாங்கிய பள்ளியை, தமிழக அரசு மீட்டு தர வேண்டும். இவ்வாறு குணசீலன் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us