போட்டித் தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமனம்
போட்டித் தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமனம்
போட்டித் தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமனம்
சென்னை : எந்த முறையில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெறும் என்பதை, தமிழக அரசு தெளிவாக அறிவிக்கவில்லை என்றாலும், போட்டித் தேர்வு மூலமே ஆசிரியர் நியமனம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டாயக் கல்விச் சட்டத்தில், போட்டித் தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, போட்டித் தேர்வு மூலம் பணி நியமனம் நடைபெறுமா அல்லது பதிவு மூப்பு அடிப்படையில் நடைபெறுமா என்பது இன்னும் தெரியவில்லை.
இது குறித்து, கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கட்டாயக் கல்விச் சட்டத்தில், எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களை, போட்டித் தேர்வு மூலமே தேர்வு செய்து, பணி நியமனம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது. எனவே, இடைநிலை ஆசிரியர்கள் (ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள்) மட்டுமில்லாமல், பட்டதாரி ஆசிரியர்களும், போட்டித் தேர்வு வட்டத்திற்குள் வந்து விடுகின்றனர். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, பட்டதாரி ஆசிரியர்கள் தான் நியமிக்கப்படுகின்றனர். எனவே, இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு முக்கியமானதாக இருக்கிறது. இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பின் அடிப்படையில், பணி நியமனம் நடக்கும். கட்டாயக் கல்விச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களையும், கோர்ட்டில் தெரிவித்துள்ளோம். எனவே, முதுகலை ஆசிரியர்கள் உட்பட அனைத்து வகை ஆசிரியர்களும், போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வாறு கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
-நமது சிறப்பு நிருபர் -