Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கமலுக்கு மிரட்டல்; முதல்வர் அமைதியாக இருப்பது ஏன்: சீமான் கேள்வி

கமலுக்கு மிரட்டல்; முதல்வர் அமைதியாக இருப்பது ஏன்: சீமான் கேள்வி

கமலுக்கு மிரட்டல்; முதல்வர் அமைதியாக இருப்பது ஏன்: சீமான் கேள்வி

கமலுக்கு மிரட்டல்; முதல்வர் அமைதியாக இருப்பது ஏன்: சீமான் கேள்வி

UPDATED : மே 29, 2025 01:34 PMADDED : மே 29, 2025 10:59 AM


Google News
Latest Tamil News
சென்னை: 'தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்' என்ற வரலாற்று பேருண்மையை கூறியதற்காக நடிகர் கமல்ஹாசனை கன்னட அமைப்புகள் மிரட்டுகின்றன. பதிலடி தரவேண்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின் இதுவரை வாய் திறவாமல் அமைதியாக இருப்பது ஏன்? என்று நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை; தக் லைஃப் (Thug life) படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன், 'தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்' என்ற வரலாற்று உண்மையை கூறியதற்காக அவரது படங்களை கர்நாடாகவில் திரையிட விடமாட்டோம், அவரை கர்நாடகாவில் நுழையவிடமாட்டோம் என்றெல்லாம் ஒரு சில கன்னட அமைப்புகள் மிரட்டல் விடுப்பதும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அடிபணியவைக்க நினைப்பதும், தக் லைஃப் திரைப்படத்தின் பதாகைகளைக் கிழித்து அவமதிப்பதும் வன்மையான கண்டனத்துக்குரியது.

இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள மொழிகளுக்கு மட்டுமல்ல உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி தமிழ்மொழிதான் என்பது உலக மொழியியல் அறிஞர்கள் ஆய்ந்தறிந்து ஏற்றுக்கொண்ட வரலாற்றுப் பேருண்மையாகும். அந்த வரையறைக்குள் கன்னட மொழியும் அடங்கும் எனும்போது அதை ஏற்பதில் கன்னட அமைப்புகளுக்கு என்ன சிக்கல்? வரலாற்று உண்மையை ஏற்க மனமில்லாத கன்னட வெறியர்களே, இத்தனை வன்முறை பேச்சுக்களையும் மிரட்டல்களையும் விடுக்கின்றனர். அதனை கர்நாடகத்தை ஆளும் காங்கிரசு அரசும் கண்டித்து தடுக்காது ஊக்குவிக்கின்றது என்பதுதான் பெருங்கொடுமையாகும்.

தமிழிலிருந்து கன்னடம் உருவானது என்பது கன்னட மொழிக்கு பெருமைதானே தவிர சிறுமை அல்ல; ஒருவேளை அந்த கருத்தில் கன்னட அமைப்புகளுக்கு மாற்றுக் கருத்து ஏதேனும் இருந்தால், தமிழைவிட கன்னடம்தான் மூத்த மொழி என்பற்கான வரலாற்று ஆதாரங்களை, இலக்கியச் சான்றுகளை, மொழியறிஞர்களின் ஆய்வு முடிவுகளைத் தந்து அறவழியில் மறுக்க வேண்டும்; ஆக்கப்பூர்வமான வாதங்களை முன்வைக்க வேண்டும். காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்று சொன்ன கன்னட திரைக்கலைஞர்களின் திரைப்படங்கள் தமிழகத்தில் திரையிடப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றன?

ஏற்கனவே, காவிரி நதிநீர் போராட்டத்தின்போது முதல்வர் ஸ்டாலினின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், இறுதி மரியாதை செய்தும் கன்னடவெறி அமைப்புகள் அவமதித்தபோது எவ்வித எதிர்வினையும் ஆற்றாது தமிழக அரசு அமைதியாக கடந்துபோனதைப்போல, தற்போதும் கடந்து போகக்கூடாது.

உண்மையறியாது போராடும் கன்னட இனவெறி அமைப்புகளுக்கு ஆதரவாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, தமிழ்த்திரையின் பெருமைமிக்க கலை அடையாளம் கமல்ஹாசனுக்கு வரலாறு தெரியவில்லை என்று அவமதிக்கின்றார். ஆனால், அதற்கு பதிலடி தரவேண்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின் இதுவரை வாய்திறவாமல் அமைதியாக இருப்பது ஏன்? கள்ள அமைதியை கடைபிடிப்பதன் மூலம் கமல்ஹாசனை மட்டுமல்ல, அன்னை தமிழையே அவமதிக்கின்றீர்கள்.

எனவே, கூட்டணி கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பேசி, போராடும் கன்னட அமைப்புகளைக் கட்டுப்படுத்தி தேவையற்ற பதற்றத்தைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us