Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ராமதாஸ்- அன்புமணி மோதல் பின்னணி: பா.ம.க.,வினர் அதிர்ச்சி!

ராமதாஸ்- அன்புமணி மோதல் பின்னணி: பா.ம.க.,வினர் அதிர்ச்சி!

ராமதாஸ்- அன்புமணி மோதல் பின்னணி: பா.ம.க.,வினர் அதிர்ச்சி!

ராமதாஸ்- அன்புமணி மோதல் பின்னணி: பா.ம.க.,வினர் அதிர்ச்சி!

UPDATED : மே 30, 2025 07:12 AMADDED : மே 29, 2025 12:20 PM


Google News
Latest Tamil News
சென்னை: ராமதாஸ் அன்புமணி இடையே மோதல் உக்கிரம் எடுத்துள்ளது. கூட்டணியால் மோதல் ஏற்பட்டது என்பதை இன்று ராமதாஸ் போட்டு உடைத்திருப்பது, கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லோக்சபா தேர்தலுக்குப் பிறகு ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. முதலில் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி, புதுச்சேரியில் நடந்த பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில், மேடையிலேயே அக்கட்சி நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே, நேரடியாக மேடையிலேயே வார்த்தை போர் வெடித்தது.

இரண்டாவது சம்பவம்


அடுத்த கட்டமாக, ஏப்ரல் 10ம் தேதி மகனது தலைவர் பதவியை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பறித்தார். ராமதாஸ், 'இனி நானே தலைவர்' என அறிவித்தார். அத்துடன், 'அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார்' என்றார். இதன் பிறகு ராமதாஸ் நடத்தும் கூட்டத்தை அன்புமணி புறக்கணித்து வருகிறார்.

மூன்றாவது சம்பவம்

கடந்த மே 24ம் தேதி, “பயங்கர மன உளைச்சல், தூக்கம் வரவில்லை” என தலைவர் பதவி நீக்கம் குறித்து பா.ம.க., தலைவர் அன்புமணி வேதனை தெரிவித்தார். அதுமட்டுமின்றி அவர் நான் என்ன தவறு செய்தேன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

நான்காவது சம்பவம்

இன்று (மே 29) '35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். இது அன்புமணி- ராமதாஸ் இடையே மோதல் போக்கை வெட்ட வெளிச்சமாக்கியது.

வளர்த்த கிடாவே எனது மார்பில் எட்டி உதைத்துவிட்டது. அன்புமணி செயல் சரியானதா? பொய்யை அன்புமணி மூச்சு விடாமல் பேசுவார் என மகன் மீது தந்தை ராமதாஸ் சரமாரி குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். ராமதாஸ் அன்புமணி இடையே மோதல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

கூட்டணி தான் காரணமா?

“அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை அன்புமணி கேட்கவில்லை. பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என சவுமியாவும், அன்புமணியும் ஆளுக்கு ஒரு காலை பிடித்து என்னிடம் அழுதனர். அ.தி.மு.க., பா.ம.க., கூட்டணி தான் இயற்கையான கூட்டணி” என ராமதாஸ் கூறியுள்ளார். கூட்டணி விவகாரம் தான் தந்தை - மகன் இடையிலான மோதலுக்கு முக்கிய பங்கு வகித்தது என்பதை வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளது.

பா.ம.க.,வினர் அதிர்ச்சி

பா.ம.க.,வின் ஜி.கே., மணி, 'அன்புமணி- ராமதாஸ் இடையிலான மோதலுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. இருவரும் இணைந்து செயல்படுவார்கள்' என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார். அது எல்லாம் தற்போது காற்றில் பறந்து விட்டது. நிருபர்கள் சந்திப்பிலேயே மோதலை ராமதாஸ் வெளிப்படையாக தெளிவுபடுத்தி விட்டார். தந்தை, மகனிடையே மோதல் ஏற்பட்டது பா.ம.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us