Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/விலைவாசி உயர்வு ஒத்திவைப்பு தீர்மானம் காங்கிரசுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா ஓட்டு

விலைவாசி உயர்வு ஒத்திவைப்பு தீர்மானம் காங்கிரசுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா ஓட்டு

விலைவாசி உயர்வு ஒத்திவைப்பு தீர்மானம் காங்கிரசுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா ஓட்டு

விலைவாசி உயர்வு ஒத்திவைப்பு தீர்மானம் காங்கிரசுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா ஓட்டு

ADDED : ஆக 05, 2011 02:13 AM


Google News

விலைவாசி உயர்வு குறித்து, பார்லிமென்டில் தாங்கள் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது, ஓட்டெடுப்பு நடத்த வேண்டுமென, பா.ஜ., நெருக்கடி அளிக்கவில்லை.

மாறாக இடதுசாரி கட்சிகள் சார்பில் கொண்டு வரப்பட்டிருந்த, ஒத்திவைப்புத் தீர்மானத்தின் மீது நடந்த ஓட்டெடுப்பின்போது, மிகுந்த ஆச்சரியம் அளிக்கும் வகையில், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவாக, முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., ஓட்டுப் போட்டு காப்பாற்றியது.



விலைவாசி உயர்வு குறித்து, அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தன. பார்லிமென்டில் அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்க்கப் போவதாகவும் கூறி வந்தன. பார்லிமென்ட் துவங்கி இரண்டு நாட்களாக, இதை மையமாக வைத்தே சபையில் அமளியிலும் ஈடுபட்டன. இந்தச் சூழ்நிலையில், விலைவாசி உயர்வைக் கண்டிக்கும் வகையில், அரசாங்கத்தை எதிர்த்து, ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வருவதாக பா.ஜ., அறிவித்தது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து, மூத்த உறுப்பினர் யஷ்வந்த் சின்கா பேசினார். நேற்றும் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பதிலளித்துப் பேசினார். அப்போது நாட்டின் பணவீக்கம் 22 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகக் குறைந்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, நிறைய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.



இந்த பதிலுரைக்குப் பிறகு, தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால், ஓட்டெடுப்பு நடத்த வேண்டுமென பா.ஜ., நெருக்கடி அளிக்கவில்லை. இதனால், அந்த சூழ்நிலையில், சபாநாயகர் இந்த தீர்மானத்தின் மீது குரல் ஓட்டெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்தார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி மற்றும் ராஷ்டிரிய லோக்தள கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் சபை யை விட்டு வெளிநடப்பு செய்தனர்.



இவர்கள் மொத்தம் 47 பேர். சபையின் மொத்த பலம் 544. இதில், 47 எம்.பி.,க்கள் போய்விட்டால் மீதம் 497 மட்டுமே. இதில் பாதி மட்டுமே சிம்பிள் மெஜாரிட்டி எனப்படும். யஷ்வந்த் சின்கா கொண்டு வந்த தீர்மானம், இதன் காரணமாக ஒன்றுமில்லாமல் போனது. அதேநேரத்தில், விலைவாசி உயர்வு குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.,யான குருதாஸ்தாஸ் குப்தா சார்பிலும், ஒரு தீர்மானம் அளிக்கப்பட்டிருந்தது. தன் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்த வேண்டுமென்று, குருதாஸ் தாஸ் குப்தா வற்புறுத்த ஆரம்பித்தார். இதனால், வேறு வழியின்றி ஓட்டெடுப்பு நடத்த, சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து சபையில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.



ஓட்டெடுப்பு நடத்தப்படவே, அரசாங்கத்தை ஆதரித்து பா.ஜ., ஓட்டுப்போட்டது. ஓட்டெடுப்பின் முடிவில், அரசாங்கத்தை ஆதரித்து 320 எம்.பி.,க்கள் ஓட்டுப் போட்டிருந்தனர். 51 எம்.பி.,க்கள் எதிர்த்து ஓட்டுப் போட்டிருந்தனர். இந்த 51 என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அ.தி.மு.க., தெலுங்குதேசம், பிஜு ஜனதாதளம் ஆகிய கட்சி எம்.பி.,க்களின் ஓட்டுக்கள். தவிர புதிதாகப் பதவியேற்றுள்ள, ஜகன் மோகன்ரெட்டியும், அரசை எதிர்த்து ஓட்டுப் போட்டார். அரசாங்கத்தை ஆதரித்து, முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.,வே ஓட்டுப்போட்டுள்ளது, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நமது டில்லி நிருபர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us