ADDED : ஆக 01, 2011 02:03 AM
மதுரை:''அனைவருக்கும் சட்ட விழிப்புணர்வு தேவை,'' என, மதுரையில் மாவட்ட
இலவச சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் பெட்கிராட் சார்பில் மகபூப்பாளையம்
அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்த கருத்தரங்கில் சார்பு நீதிபதி
ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.கருத்தரங்கிற்கு தலைமையாசிரியை அமுதா தலைமை
வகித்தார். பெட்கிராட் துணை தலைவர் பாண்டி, நிர்வாக இயக்குனர் சுருஜி
முன்னிலை வகித்தனர். பொது செயலாளர் அங்குச்சாமி வரவேற்றார்.
பெட்கிராட்
நிறுவனர் சுப்புராம் கருத்தரங்கை துவக்கினார்.இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு
செயலாளர் சார்பு நீதிபதி ஸ்ரீதரன் பேசுகையில், ''பலர் கடந்த கால
நினைவுகளில் இருந்து வருகின்றனர். சிலர் எதிர்காலம் குறித்து
சிந்திக்கின்றனர். நிகழ்காலமான இன்றைய நாளை பற்றி சிலர் மறந்து
விடுகின்றனர். வாழ்க்கையில் ஒவ்வொரு வினாடியும் முக்கியம். மாணவர்களுக்கு
கல்வி அறிவுடன் நிகழ்கால விழிப்புணர்வும் அவசியம். ஏழைகளுக்கும் உரிய நீதி
கிடைக்க சட்ட பணிகள் ஆணைக்குழு செயல்படுகிறது. யாருக்காவது சட்ட உதவி தேவை
எனில் ஆணைக்குழுவை அணுகலாம்,'' என்றார்.சார்பு நீதிபதிகள் கருணாநிதி,
பார்த்திபன், சட்ட பணிகள் ஆணைக்குழு வக்கீல் சிவக்குமார், தொழிலாளர் நல
அலுவலர் லிங்கம், சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் பேசினர். மாநில
வாள்சண்டையில் பதக்கங்கள் பெற்ற மாணவி பாண்டிபிரியா பாராட்டப்பட்டார்.
தமிழாசிரியர் அஞ்சலிதேவி நன்றி கூறினார்.