Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சிக்கிம் பூகம்பத்தில் தென்மாநிலத்தவர் 12 பேர் உயிரிழப்பு?

சிக்கிம் பூகம்பத்தில் தென்மாநிலத்தவர் 12 பேர் உயிரிழப்பு?

சிக்கிம் பூகம்பத்தில் தென்மாநிலத்தவர் 12 பேர் உயிரிழப்பு?

சிக்கிம் பூகம்பத்தில் தென்மாநிலத்தவர் 12 பேர் உயிரிழப்பு?

ADDED : செப் 24, 2011 12:00 AM


Google News

டங்:சிக்கிமில், பூகம்பத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், பல மலைகளைக் கடந்து, கடும் முயற்சிக்கு பின், டங் என்ற இடத்துக்கு நேற்று வந்து சேர்ந்துள்ளனர்.

அதே நேரத்தில், சிக்கிம் பூகம்பத்தில் தென்மாநிலங்களைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



சிக்கிம் மாநிலத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பூகம்பத்தில், ஏராளமானோர் பலியாகிவிட்டனர். தலைநகர் காங்டாங் உட்பட, பல நகரங்களில் இருந்த கட்டடங்கள், பலத்த சேதமடைந்துள்ளன. குறிப்பாக, சிக்கிமின் வடக்கு பகுதிகள், பூகம்பத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, மீட்புக் குழுவினர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கிராமங்களுக்கு செல்லும் பாதைகள், நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள், உணவு கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். மீட்புக் குழுவினர் செல்ல முடியாததால், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள பலரை, இன்னும் மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



இதற்கிடையே, பூகம்பத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லாசுங், லச்சென், சுங்தாங் உட்பட, பல கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், பல மணி நேர போராட்டத்துக்கு பின், மலைகளில் ஏறி, இறங்கி, இறுதியாக நேற்று

டங் என்ற நகரை அடைந்துள்ளனர். சுற்றுப்புறத்தில் உள்ள ஏராளமான மக்கள் அங்கு

கூடியுள்ளனர்.கர்மா பூடியா என்பவர் கூறுகையில், 'எப்படியோ, நாங்கள் இங்கு வந்து விட்டோம். ஆனால், இன்னும் பலர், மலைகளில் ஏறி, இறங்க முடியாமல், பூகம்ப பாதிப்பு பகுதிகளிலேயே பீதியுடன் தங்கியுள்ளனர். தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது' என்றார்.



இன்ஜினியர்கள் மீட்பு:ராணுவ அதிகாரிகள் கூறுகையில், 'தீஸ்தா நீர் மின் திட்டத்துக்காக பணிபுரிந்து வந்த இன்ஜினியர்கள் 22 பேர், பூகம்ப பாதிப்பு பகுதிகளுக்குள் சிக்கியிருந்தனர். அவர்கள் அனைவரும் நேற்று பாதுகாப்பாக, அங்கிருந்து மீட்கப்பட்டனர். இவர்கள் பயணித்த பஸ், சாலையில் விழுந்து கிடந்த மிகப் பெரிய பாறையால், தொடர்ந்து செல்ல முடியாமல் பாதி வழியிலேயே நின்றுவிட்டது. அந்த பகுதிக்கு ராணுவத்தினர் சென்று, அவர்களை மீட்டனர்' என்றனர்.



இதற்கிடையே, நீர் மின் திட்டத்துக்காக பணிபுரிந்த பல தொழிலாளர்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டு, கேங்டாங்கிற்கு அழைத்து வரப்பட்டனர். சுங்தாங் என்ற இடத்தில், 5,000க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இங்கு பணிபுரிந்து வந்த தென்மாநிலங்களைச் சேர்ந்த 12 ஊழியர்கள், பூகம்ப இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்து விட்டதாகவும், அவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில், ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



மத்திய அரசு அதிகாரிகள்:சிக்கிம் - நேபாள எல்லையை மையமாகக் கொண்டு, கடந்த வாரம் ஏற்பட்ட பூகம்பத்தில் பலியானோரின் எண்ணிக்கை, 118 ஆக அதிகரித்துள்ளது. சிக்கிம் மாநிலத்தில் மட்டும் 75 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு வங்கத்தில் 15 பேரும், பீகாரில் ஒன்பது பேரும் இறந்துள்ளனர்.வெளிநாடுகளை பொறுத்தவரை, நேபாளத்தில் 11 பேரும், திபெத்தில் ஏழு பேரும், பூடானில் ஒருவரும் பலியாகியுள்ளனர். மோசமான பாதிப்பு உள்ள இடங்களில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கியுள்ள மக்களுக்காக, ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us